உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசிரியர் - மாணவர் உறவு

281

ஆசிரியர் - மாணவர் உறவு

செய்யக் கற்றல், வாழ்ந்து கற்றல், வாழக் கற்றல் என்பதற்கிணங்கக் கல்வி கற்றல் என்பது வாழ்வோடு இரண்டறக் கலந்ததாக இருந்ததே தவிரத் தனிப்படுத்திக் காணப்படவில்லை. மாணாக்கர் எக்குடியில் பிறந்தாலும், ஆசிரியருடன் தங்கி அவர்களுக்குப் பணிவிடை செய்து அவர்தம் மனப்பாங்கு அறிந்து கற்றனர். கல்வி கற்றல், ஆசிரியர் இல்லத்திலேயே நடந்தது. இன்று கல்வி கற்பிக்கப்படும் இடம் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என்றும், கற்பதற்கும் கற்பிப்பதற்கும் உரிய தகுதிகள் இவை என்றும் வரையறுக்கப்பட்டுள்ளன.

கல்விச் சூழ்நிலையில் ஆசிரியர் மாணவர் உறவு என்பது இன்றியமையாதது. எனவேதான் மாணவர் கல்விப் பயன் அடைதற்குரிய ஆசிரியர் இலக்கணங்கள் வரையறுக்கப்பட்டன. குலம், அருள், இறை வழிபாட்டு நம்பிக்கை, கொள்கை, மேன்மை. கலைபயில் தெளிவு, கட்டுரைவன்மை, நிலம் போல் பொறுமை, மலை போல் பெருமிதம், மலர் நிகர்மாட்சி, உலகியல் அறிவு, உயர்குணம் அனைத்தும் உள்ளடக்கிய பண்பு நலன்கள் கொண்டவரே நல்லாசிரியர் எனச்சொல்லப் பட்டனர்.

மாணவர்கள் ஆசியரிடம் சென்று அவர்களை வழிபட்டுக் கற்றனர். இக்கற்றல் முறைகளும் மாணாக்கர் பண்பும் ஆசிரியர் மேம்பாடும் இயைந்து ஆசிரியர் மாணவர் உறவினை வளர்த்தன.

ஆனால் இன்று அத்தகைய உறவு தளர்ந்து விட்டது. சமுதாயச் சீர்கேடுகள், ஒருவர் நலனுக்காக மற்றவர் நலனைப் பலியிடல், உயர்ந்த நிலையினின்றும் தாழ்தல், சீர் குலைந்து வரும் ஒழுக்க நிலைகள் ஆகியவை ஆசிரியர் மாணவர் உறவைப் பாதித்துள்ளன.

கல்வித் திட்டத்தின் குறிக்கோள்கள் மாணாக்கர்களை எங்குக் கொண்டு செல்கின்றன? அவை சமுதாயத் தேவைகளை நிறைவு செய்கின்றனவா? மாணாக்கர்களின் மனத்தில், நிறைவை ஏற்படுத்தி வருகின்றனவா? தொடர்ந்து அந்த வழியில் சென்று கொண்டிருப்பதால் என்ன பயன்? என்று இன்று பல ஆசிரியர்கள் எண்ணிப் பார்க்காததால் ஆசிரியர் மாணவர் உறவு சீர் குலைகிறது.

வேலை இல்லாத் திண்டாட்டம், சாதி சமயப் பூசல்கள், விலை ஏற்றம், போதிய வருவாய் இன்மை, கற்ற கல்விக்கும் பெற்ற வேலைக்கும் தொடர்பின்மை, நம்பிக்கைத்தன்மையற்ற தேர்வு முறை போன்றவையும் உறவுச் சீர்குலைவிற்குக் காரணமாகின்றன.

மாணாக்கரிடம் நல்லுறவு வளர்த்திட விழையும் ஆசிரியர் கீழ்க்காணும் வினாக்களைத் தாங்களே எழுப்பி விடை காண வேண்டும்.

1. அறிவுத் திறன் குறைந்த மாணாக்கர்கள் ஆர்வமுடன் கற்க முயலும் பொழுது அவர்களை உற்சாகப்படுத்துகிறோமா?
2. மாணாக்கர்கள் தோல்வியுறும் பொழுது அவர்களுடன் சேர்ந்து வருத்தமடைகிறோமா?
3. மாணாக்கர்கள் வெற்றி பெறும்பொழுது அவர்கள் வெற்றியில் பங்கு கொண்டு மகிழ்கிறோமா?
4. மாணாக்கர்களின் திறன்கள் வெளிப்படுமாறு அவர்களை ஊக்கப்படுத்துகிறோமா?
5. மாணாக்கர்கள் தவறுகள் புரியும்பொழுது அவர்களுடைய குற்றங்களைப் பெரிதுபடுத்திச் சுட்டுகிறோமா?
6. மாணாக்கரின் சிறிய தவறுகள் பெரிதுபடுத்தப்பட்டும் பெரிய தவறுகள் பொருட்படுத்தப்படாமலும் உள்ளனவா?
7. மாணாக்கர்களுக்குத் தங்களுடைய கல்வி மேம்பாட்டைத் தாங்களே தேர்வு செய்யக் கூடிய சூழ்நிலைகளை உருவாக்கித் தருகிறோமா?

மாணாக்கர்களின் தேர்ச்சியையும் தேர்ச்சி முறையையும் ஆண்டு இறுதியில் அளிப்பது என்ற நிலை மாறவேண்டும். தொடர்ந்த தேர்வு நிலையாக (Continuous Evaluation) இருக்க வேண்டும். அப்பொழுதுதான், தங்களது முன்னேற்றத்தில் ஆசிரியர்கள் இடைவிடாத, அயராத, ஊக்கம் கொண்டுள்ளார்கள் என்பதை மாணவர்கள் உணர ஏதுவாக இருக்கும்.

ஆசிரியருக்கும் மாணவருக்கும் உள்ள உறவை மேம்படுத்தும் காரணிகள் எவையென இந்தியாவில் செய்யப்பட்ட ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அவற்றுள் சில:

1. ஆதாரக் கல்வி (Basic Education). மாணவருக்கும் ஆசிரியருக்கும் இடையே உறவை மேம்படுத்துகிறது.
2. மாணவர்கள் விடுதியில் தங்கிப் பயிலும் பள்ளிகளில் (Residential Schools) ஆசிரிய மாணவ உறவு மேலோங்கி உள்ளது.
3. எல்லோராலும் விரும்பப்படும் ஆசிரியர்களால் (Popular Teachers) மட்டுமே மாணவர்களிடம் நல்லுறவை ஏற்படுத்த முடிகிறது.
4. ஆசிரியர், மாணவர் விகிதம் குறைந்துள்ள பள்ளிகளில் ஆசிரியருக்கும் மாணவருக்கும் உறவு சிறந்து விளங்குகிறது.


வா.க. 2-36