உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசிரிய விருத்தம்

285

ஆசீவக வாதம்

படுத்தாத சமுதாயம், இவை ஆசிரியர்களால் மேற்கொள்ளப்படும் போது வன்மையாகக் கண்டிக்கிறது.

இறுதியாக, ஆசிரியர்கள் தாமே சமுதாயத்தின் உறுப்பினர்கள் என்பதனை மறக்கக்கூடாது. இவர்களுக்குத் தம் பணிசார்ந்த சமுதாயக் கடமைகளுடன் நேரடியாகவும் பல சமுதாயப் பொறுப்புகள் உள்ளன. இப்பொறுப்புகளைச் சிறப்பாக நிறைவேற்றுவதன் மூலம் ஆசிரியர்களது சமுதாய மதிப்பு உயர்வது உறுதி. சமுக-முதியோர் கல்வித் திட்டங்கள், குடும்ப நல்வாழ்வுத் திட்டங்கள், சுற்றுப்புறத் தூய்மைப் பாதுகாப்புச் செயல் திட்டங்கள், பல்வேறு முறைசாராக் கல்வித் திட்டங்கள் போன்ற எல்லாவற்றிலும் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் நேரடிப்பங்கு பெறவேண்டும். இது சமுதாய-பள்ளிப் பிணைப்பினையும், ஆசிரியர் - பெற்றோர் தொடர்பினையும் வலுப்படுத்தும். கல்வி ஏதோ ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்துள் முடிவடையும் ஒன்றன்று; அதன் தேவை இன்றைய சமுதாயத்தில் வாழ்நாள் முழுதும் எழுகிறது. அதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து மக்களுக்கு அளிக்கப்படவேண்டும். இவற்றை “வாழக் கற்றல்” (Learning to be) என்று ‘யுனெசுகோ’ கல்வி அறிக்கை குறிப்பிடுகிறது. இக்கருத்தின்படி, ஆசிரியர்கள் தம் சமுதாயப் பொறுப்புகளை நிறைவேற்றுதல் வேண்டும். அதுபோலவே, வாழ்க்கை வசதிகளையும், பணிச் சூழ்நிலையினையும் எல்லா ஆசிரியர்களுக்கும் ஏற்படுத்தித் தருவது சமுதாயத்தின் மிக இன்றியமையாக் கடைமையாகும்.

எஸ்.ச.

ஆசிரிய விருத்தம் என்பது ஆசிரியப்பாவின் மூவகை இனங்களில் ஒன்றாகும். இது அகவல் விருத்தம் என்றும் வழங்கப்பெறும். தம்மில் அளவொத்து அமையும் கழிநெடிலடி நான்கு கொண்டு பாடப்பெறும் செய்யுள் ஆசிரிய விருத்தம் எனப்படும். கழிநெடிலடி என்பது ஆறுசீரும் அதற்கு மேற்பட்ட சீர்களும் கொண்ட அடியினைக் குறிக்கும். ஆசிரிய விருத்தச் செய்யுளின் ஒவ்வோரடியிலும் இடம்பெறும் சீர்களைக் கொண்டு அவை அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், எழுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் என்பனவாகப் பெயர் பெறும். 6 முதல் 8 சீர்கள் வரை கொண்ட அடிகளால் அமையும் ஆசிரிய விருத்தங்களே சிறப்புடையனவாகக் கருதப்படும். 9,10 முதலான சீர்களால் ஆகிய அடிகளைக் கொண்டு அமையும் விருத்தங்கள் சிறப்பிலவாகக் கருதப்படும். எனினும் 64 சீர்கள் கொண்ட அடிகளால் ஆகிய ஆசிரிய விருத்தங்களும் பாடப்பட்டுள்ளன. நால்வகைப் பாக்களுக்கும் இனம் வகுத்து இலக்கணங் கூறும் மரபு தொல்காப்பியத்திற்குப் பின்னர்த் தோன்றியதாகும். யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை போன்ற பிற்கால யாப்பிலக்கண நூல்கள் ஆசிரிய விருத்தம் போன்ற பாவினங்களுக்கும் இலக்கணம் வகுத்துள்ளன. “குறைவில் தொல்சீர் அகவல், விருத்தம், கழிநெடில் நான்கு ஒத்து இறுவது” என்பது யாப்பருங்கலக் காரிகை கூறும் ஆசிரியவிருத்த இலக்கணமாகும். பிற்காலத்தில் பாவினங்கள் பலவற்றுள்ளும் ஆசிரிய விருத்தம் முதன்மை பெற்றது. பெருங்காப்பியங்கள் பல விருத்தப்பாக்களினால் உருவாகும் நிலை தோன்றியது. சீவகசிந்தாமணி, விருத்தப்பாவினத்தால் தோன்றிய முதற் காப்பியமாகும்.

ஆசிரியன் பெருங்கண்ணன் சங்ககாலப் புலவர். இவரது ஒரு பாடல் குறுந்தொகை 239-ஆம் பாடலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இது குறிஞ்சித் திணையில், தலைவிகூற்றாக அமைந்துள்ளது. இவர் ஓர் ஆசிரியராக விளங்கினார் என்பது பெயரடையிலிருந்து புலனாகிறது. இவர், காந்தள் மலரை ஊதும் தும்பி, பாம்பு உமிழும் மணிபோலத் தோன்றுமென்று உவமை காட்டியுள்ளார்.

த.கோ.

ஆசீவகர் மாக்கலி கோசலரின் சீடர்கள். ஆசீவகர்களுக்குத் துணை நின்ற அரசாங்க அலுவலர்கள். ஒரு காலத்தில் போற்றப்பெற்றார்கள். பொது வாழ்வில் பெரும் பதவி வகித்தார்கள். ஆசீவகர் பல்வகையான நோன்புகளை நோற்றனர். இவர்கள் குதிகாலில் குந்தியிருக்கும் பழக்கத்தையும் வானில் வௌவால்களைப் போல் பறக்கும் திறமையையும் பெற்றிருந்தார்கள். சோதிடத்தில் திறமை பெற்றிருந்த இவர்கள் மக்களுக்குச் சகுனம், நல்ல நாள் ஆகியவற்றைப் பார்த்துக் கருத்துரைகள் வழங்கினார்கள். இவர்கள் இல்லறத்திலுள்ள சமணர்கள். கோசவர் என்பவர் கெளதம புத்தருக்கும் மகாவீரருக்கும் பின் வந்தவர். ஆசீவகர்களைப் பற்றிய விவரங்கள் அசோகரின் கல்வெட்டுகளிலும் பௌத்த சமய சாதகக் கதைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆசீவக வாதம்: புத்தர், மகாவீரர் வாழ்ந்த அதே காலத்தில் மகசுரின்புத்த கோசாலா என்ற ஒரு சமயத்தலைவர் வாழ்ந்தார். அவரைத் தமிழ் நூல்கள் மற்கலி என்னும் பெயரால் குறிப்பிடுகின்றன. மற்கலியினால் தோற்றுவிக்கப்பட்ட சமய வாதம் ஆசீவக வாதம் எனப்படுகிறது. ஆசீவக வாதக் கருத்துகள் மற்கலிக்கு இரண்டு தலைமுறைக்கு முன்பே தோன்றிவிட்ட போதிலும், அவை உருப்பெற்றது மற்கலியின் முயற்சியினால்தான் எனச்சொல்வது சாலப் பொருத்தமானது.

இவ்வாதத்தின் அடிப்படைக் கருத்தோட்டத்தைத் தெளிவாக அறிவிக்கும் நூல்கள் வட-