ஆசுட்டிரோ கார்சுகி......
287
ஆசுட்டின். சேன்
சிறையனுபவம் (De Profundis) உலகக் கடித இலக்கியத்தில் தனிச்சிறப்புடையது.
த.கோ.
ஆசுட்டிரோ கார்சுகி, மோயிசியக்கோவ்லெவிக்கு (கி.பி. 1854-1919) உருசிய அரசியல் வல்லுநர், பீட்டர்சுபர்கில் (Petersburgh) கல்வி கற்ற இவர் சிறிது காலம் உருசிய அரசின் நீதித்துறையின் வெளியீட்டுப் பகுதிப் பணியில் அமர்ந்திருந்தார். பின்னர்ப் பிரான்சு நாடு சென்று அங்கு அரசியல் கலையைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். அங்கு ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் விளங்கினார். “மக்கள் ஆட்சியும் அரசியல் கட்சிகளின் அமைப்பும்” என்னும் இவரது நூல் ஐரோப்பிய மொழியான பிரெஞ்சிலும் மொழியாக்கம் செய்யப்பட்டது. சிறிது காலம் இவர் இங்கிலாந்திலும் வாழ்ந்தார். இவர் 1906-ஆம் ஆண்டு தாயகம் திரும்பினார். அங்கு உருசியச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். இவர் 1919 இல் காலமானார்.
ஆசுட்டின் ஏரி மேற்கு ஆசுத்திரேலியாவில் மாக்னெட் குன்றுகளுக்கு அண்மையிலுள்ளது. ஆசுட்டின் ஏரியின் (Austin Lake) அருகில் மீக்கா தாராத் தங்கச் சுரங்கம் உள்ளது. இதன் பரப்பு 829 ச.கி.மீ. இவ்வேரி அடிக்கடி வறண்டு விடும் தன்மையுடையது. இந்த ஏரி பெர்த்து (Perth) நகருக்கு வடக்கு வட கிழக்கில் அமைந்துள்ளது.
ஆசுட்டின், சேன் (கி.பி.1775-1817) ஆங்கிலப் புதின எழுத்தாளருள் ஒருவர். இவர், ஆரவாரம், பரபரப்பு நிகழ்ச்சிகள், விந்தையான சூழல், குணபாத்திரங்கள், புரட்சிச் சாயல், கலையாரவாரம், புத்தார்வக் (Romance) கதைப் பாங்கு, உணர்ச்சிப் பகட்டு, வெற்றும் பகட்டுரை ஆகியவற்றோடு கொச்சை மரபும் பெருகி மலிந்துள்ள நெடும்புனை கதைத் (Novel) துறையில், அவற்றினின்றும் அறவே நீங்கி. மெல்லடைவான நடையில், அன்றாடப் பொது நிகழ்ச்சிச் சூழலில் நம் கவனத்துக்கு அப்பால் ஆங்காங்கே மலிந்து கிடக்கும் நகுதிறல் இயலை (Comedy) நுட்பமாகத் தமக்கே உரிய நயமிகு உரையாடல் பாணியில் ஆறு புதினங்களை இயற்றினார். அவை அங்கதச் சாயலும் (Satire), நகை ஏளனச் சுவையும், உள்ளுறை முரண் நயமும் (Irony) விரவி அமைந்தன. அவற்றால், ஆசுட்டின் சேன் (Austin Jane) செம்பாங்கு இலக்கியத் தரத்தில் (Status of a Classic) சேர்க்கப்பட்டு. ஆழ்புலமையாளர் மதிப்பீட்டில் உயர்ந்து விளங்குகிறார்.
அடக்கமாக ஒதுங்கி வாழும் இயல்புடைய இவர் செல்வாக்கு நாட்டத்தையோ செல்வம் ஈட்டலையோ குறியாது, எந்தத் தனி முறை மரபுக் குழுவிலும் சாராது, இலக்கியச் சீர்மையையே முதன்மை இலக்காகக் கருதி எழுதினார்.
இவரது கலையின் வள நேர்த்திப் பட்டியலில் இடங்கொள்ளும் மேம்பாடுகள் - நடுநேர்மை நோக்குடன் இன்ப துன்ப நிகழ்ச்சிகளைக் கையாளுதல், கூர் நோக்கும் (Observation) நுண்காட்சித் திறனும் (Insight) கொண்டு மெய்ம்மை மாறுபடாமல் சித்திரிக்கும் பாங்கு, நுண்ணிய ஒப்பீடு மாறுபாட்டுத் திறன் (Discrimination). நல்லறிவு நலம் (Sanity) போற்றல் (Precision), எளிமை, உயர்வு நேர்த்தி (Good taste), குறுகிய எல்லையுள் மிக நுட்பமாக விரித்துரையாடும் வித்தகம் (Subtle Commentary) முதலியனவாகும். இத்தகைய நலங்களால் நெடும் புனைகதைப் படிவத்திற்குக் (Novel form) குறிப்பாக நகுதிறல் கதைக்கு (Comedy) ஆழ்ச்சியும் முதிர்ச்சியும் அளித்த பெருமை இவருக்கே உண்டு.
தாம் நன்கறிந்த சின்னஞ்சிறு துறையைப் பற்றியே எழுதும் பிரெஞ்சு எழுத்தாளர்களைப் போல் இவர் எழுதியவை, பின்னர் என்றி சேம்சு, (Henry James) செம்மைப்படுத்திய பாணிக்கு முன்னோடியாயின எனக் கருதலாம்.
அன்று ஐரோப்பாவை உலுக்கி வந்த போர்களும், நெப்போலியனின் போர்களும், இயந்திரப் புரட்சியினால் சமுதாயத்தில் எழுந்த ஏற்றத்தாழ்வுப் பிறழ்ச்சிகளும் எழுத்தாளர்கள் கவனத்தைக் கவர்ந்த போது, இவர் எடுத்தாண்டதோ மிகக் குறுகிய செயற் பரப்புச் சூழல் ஆகும். தேர்ந்த எழுத்தாளரையும் மனந்தளர்ந்து பின்வாங்கச் செய்யும் அளவுக்குக் குறுகிய நிகழ்ச்சி எல்லை வரையறை. பரபரப்புப் போக்கில் ஈடுபட்டிருந்த வாசகர்களுக்கு இந்தப் பாணி எடுபடுமோ என்ற ஐயத்தைத் தோற்றுவித்தது.
செல்வம் பெருகி வரும் இடைத்தர மாந்தரின் (Rising middle class) நாட்டுப்புற மாளிகை, திருக்கோயில் கூட்டங்கள். விருந்தினர் வரவேற்பறை, பூங்கா ஆகிய இடங்களில், நிலம் படைத்துச் செயல்படாதோரின் அளவளாவல் கூட்டம், கூட்டருந்தல் குழுமம், குழு நடனம், இணைவு முயற்சி (Match- making). மண ஒப்பந்தம் (Engagement). எளிய சடங்குகள் ஆகியவை இவர்தம் கதை மூலப்பொருளாகும். இவர் இவற்றைக் கட்டுக்கோப்பான் நிகழ்ச்சிக் கோவையில் (Plot) அமைத்தார்.
இவரது இலக்கிய நோக்கிற்கு இலக்கானவை: இடைத்தரக் குடும்பங்கள் வளம் மிகுந்து வருங்காலத்தில் புதிதாக உண்டான சமுதாய ஏற்ற இறக்க உணர்வுகள் (Status Consciousness), சிறு மாகாணச் சம்பிரதாயச் சிற்றலைகள், தலைமுறைப்