உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசுத்திரியா

2910

ஆசுத்திரியா

நீதிமன்றங்கள்: ஆசுத்திரியாவின் மிக உயர்ந்த நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் என்பர். குடிமையியல், குற்றவியல் வழக்குகளின் மேல் முறையீடுகளை இந்த உச்ச நீதிமன்றமே கவனிக்கும். தாழ்நிலை நீதிமன்றங்களிலிருந்து வரும் மேல் முறையீடுகளின் முடிவுகளை விசாரிக்க நான்கு வட்டார நீதிமன்றங்கள் உள்ளன. இளம் வயதுக் குற்றவாளிகள், தொழிலாளர் சச்சரவுகள், நிருவாகம் தொடர்பான வழக்குகள், அரசியல் அமைப்புத் தொடர்பான வழக்குகள் ஆகியவற்றை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன.

இராணுவம்: ஆசுத்திரியாவின் இராணுவத்தில் 52 ஆயிரம் படைவீரர்கள் உள்ளனர். அங்கு, 18 வயது நிரம்பிய ஆண்கள், இராணுவத்தில் எட்டு மாதங்கள் பணிபுரிய வேண்டும் அல்லது விமானப்படையில் குறைந்த அளவு மூன்றாண்டுகள் பணியாற்ற வேண்டும்.

மக்கள் இனவரலாறும் தொகையும்: ஆசுத்திரிய நாட்டில் பல இனமக்கள் குடியேறி வாழ்ந்து வந்தனர். இனக்கலப்பு ஏற்பட்டு அதன்மூலம் உருவானவர்களே இன்றைய ஆசுத்திரிய மக்கள். பழங்காலத்தில் கெல்ட்டுகளும் உரோமானியர்களும் ஆசுத்திரியாவின் மக்களாயிருந்தனர். பின்னர், ஆசியாவைச் சார்ந்தவர்கள், பல்வேறு செருமானியக் குழுக்கள், மாக்கியார்கள் எனப்படும் அங்கேரியர்கள் ஆகியோர் ஆசுத்திரியாவில் குடியேறினர். இந்நாடு, கி.பி. 14-ஆம் நூற்றாண்டிலிருந்து ஆசுத்திரியா ஆப்சுபர்க்குப் (Hapsburg) பேரரசின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்களைக் கவர்ந்தது. அப்படிக் கவரப்பட்டவர்கள் இத்தாலியர்களும் பல்வகைப்பட்ட சுலாவிய குழுவினரும் ஆவர். செக்கோசுலோவாகியாலிலிருந்தும் அங்கேரியிலிருந்தும் 1950 க்கும் 1960 க்கும் இடையில் பொதுவுடைமைக் கட்சியின் ஆட்சியை விரும்பாதவர்கள் ஆசுத்திரியாவுக்கு ஓடி வந்தனர்.

ஆசுத்திரியாவின் மக்கள்தொகை 1981-ஆம் ஆண்டுக் கணக்குப்படி 75,55,338 ஆகும். நாட்டின் தாழ்நிலப் பகுதிகளில், குறிப்பாக, தான்யூ ஆற்றின் கிழக்கிலும் தெற்கிலும் ஆசுத்திரியாவின் பெரும்பாலான மக்கள் வாழ்கிறார்கள். மாநகரங்களிலும் நகரங்களிலும் 55 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். மக்கள் தொகையுள் ஐந்தில் ஒரு பங்கினர் நாட்டின் தலைநகரான வியன்னாவில் வசிக்கிறார்கள், கார்சு (Garz), இன்சுபர்க்கு (Innsburck), இலின்சு (Linz), சால்சுபர்க்கு (Salzburg) ஆகிய ஆசுத்திரியாவின் நான்கு நகரங்கள் ஒவ்வொன்றிலும் இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வாழ்கிறார்கள்.

மொழி: ஆசுத்திரியர்களுள் 98 விழுக்காடு மக்கள் செருமானிய மொழியைப் பேசுகிறார்கள். அம்மொழியே அந்நாட்டின் ஆட்சி மொழியுமாகும். செர்போ-குரோசியன் (Serbo-croatian). மாக்யார் (Magyar), சுலோவினி (Slovene) செக்கு மற்றும் சுலோவாக்கு மொழிகளும் பேசப்படுகின்றன. ஆனால், பேசுவோர் எண்ணிக்கை குறைவு.

வாழ்க்கை முறை: மாநகர மக்களுள் பெரும்பாலோர் நான்கு அல்லது ஐந்து மாடிகளைக் கொண்ட கட்டட அறைகளில் வாழ்கிறார்கள். ஏனையோர் நெடிதுயர்ந்த கட்டட அறைகளிலோ ஒரு குடும்ப வீடுகளிலோ வசிக்கின்றனர். பண்ணைகளில் வாழும் பெரும்பாலோரும், நாட்டுப்புறக் குடும்பங்களில் வாழ்வோரும் தனிக் குடும்ப வீடுகளில் வாழ்கிறார்கள். சில இடங்களில் எளிய வீடுகளிலும், வேறு சில இடங்களில் மரத்தாலான வீடுகளிலும் மக்கள் வாழ்கிறார்கள்.

ஆசுத்திரியர்கள் விழா நாட்களில் மரபுவழிவந்த தேசிய உடைகளையும், அவரவர் பகுதிகளுக்கான ஆடைகளையும் அணிந்து மகிழ்வர்.

உணவு: ஆசுத்திரியர்கள் நல்லுணவை விரும்புவர். செக்கோசுலோவாக்கியா, செருமனி, அங்கேரி ஆகிய நாடுகளின் சமையலின் செல்வாக்கினை அவர்களின் உணவு வகைகளில் காணலாம். மாடு, பன்றி, கன்று, கோழி ஆகியவற்றின் இறைச்சியையும் காரப்பணியாரத்தையும் பொதுமக்கள் விரும்பி உண்பர். கொழுக்கட்டை, சந்தவை, உருளைக்கிழங்கு போன்றவை துணை உணவு வகைகள், மக்கள் பீர், அல்லது பிராந்தி போன்ற சாராய வகைகளை உணவுடன் உட்கொள்வர்.

விழாக்களும் விடுமுறை நாள்களும் ஆசுத்திரியர்களின் வாழ்வில் முதன்மையான பங்கினை வகிக்கின்றன. விழாக்களில் சில கிறித்துப் பிறப்பதற்கு முந்தைய காலத்திலிருந்தே வருபவை. வசந்த காலத் தொடக்கத்தில் கொண்டாடப்படும் விழாக்களுள் ஒன்று, தைரோல் (Tyrol) பகுதி முழுமையும் கொண்டாடப்படுகிறது. அப்போது குளிர்காலப் பேய்களை விரட்டுவது போன்று நடிப்பர். சிறப்பான ஆடைகளையும் முகமூடிகளையும் அணிந்து கொண்டு, தெருக்களில் அணிவகுத்தும் நீண்ட பெருந்தடிகளை வானத்தில் ஆட்டியும் செல்வர். இந்த விழா, இடத்திற்கிடம் வேறுபட்ட நாள்களில் வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

சமூகநலம்: மக்களுக்குத் துணை செய்யும் நல்ல பல சமூக நலத்திட்டங்களை ஆசுத்திரிய அரசு மக்களுக்கு வழங்குகிறது. ஆசுத்திரியத் தேசியக் காப்பீட்டுக் கழகம், தொழிலாளர்களுக்குப் பல்வேறு உதவிகளைச்