உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசுத்திரேலியா

304

ஆசுத்திரேலியா

சேன்சுதான். ஏனைய தச்சு மாலுமிகள் கி.பி. 1616 ஆம் ஆண்டுக்கும் 1636-ஆம் ஆண்டுக்கும் இடையில் ஆசுத்திரேலியாவின் மேற்கு, தென்மேற்கு, வடமேற்குக் கடற்கரைகளைக் கண்டறிந்தனர். அதற்குப் பின்னர்த்தான் ஆசுத்திரேலியா என்னும் தென்பால் அமைந்துள்ள கண்டத்தைக் கண்டுபிடித்து விட்டதாகப் புது நாடுகளைக் கண்டு ஆராய்ந்த ஆய்வாளர்கள் நம்பினர். ஏபல் சான்சன் தாசுமன் (Abel Janszoon Tasman) என்னும் தச்சுக் கப்பல் தலைவர் கி.பி. 1642, 1643 ஆகிய ஆண்டுகளில் ஆசுத்திரேலியாக் கண்டத்தைக் காணாமலேயே அக்கண்டத்தைக் கப்பல் வழியாகச் சுற்றி வந்தார். அப்பயணத்தின் போது அவர் பெரும் நிலப்பரப்பு ஒன்றினைக் கண்டு அங்குக் குறுகிய காலம் தங்கினார். அதற்கு அவர் வான் தைமன் நிலம் (Van Diemen's Land) என்று பெயரிட்டார். அதுவும் ஆசுத்திரேலியாவின் ஒரு பகுதியே எனக் கருதினார். உண்மையில் அவர் கண்டது ஒரு தீவு. அது தாகமேனியா என்னும் பெயரில் தாசுமனின் நினைவைப் போற்றும் வகையில் இன்றும் ஒரு தீவாக விளங்குகிறது.

சேம்சு குக்கின் ஆய்வு: தொடக்கக் காலத்தில் ஆசுத்திரேலியாவைக் காணவந்த ஆய்வாளர்கள் அக்கண்டம் வாழ்வதற்கு வசதி குறைந்தது எனக் கூறினர். நிலம் வறண்டு, பாலை நிலம்போல் தென்பட்டது. அங்கு வாழ்ந்த மக்களிடம் பொன்னோ பொருளோ இருக்கவில்லை. ஆங்கிலக் கப்பற்படையைச் சார்ந்த சேம்சுகுக்கு என்பாரே கி.பி. 1770-ஆம் ஆண்டில் முதன் முதலாக ஆசுத்திரேலியாவின் செழிப்பான கிழக்குக் கடற்கரையைக் கண்டறிந்த ஐரோப்பியராவார். தாம் கண்டறிந்த பகுதியை அவர் இங்கிலாந்திற்கு உரிமையாக்கி அதற்கு நியூசெளத்வேல்சு எனப் பெயரிட்டார்.

ஆசுத்திரேலியாவின் குடியேற்றம்: அமெரிக்க விடுதலைப் போராட்டத்திற்கு முன், இங்கிலாந்து தன் குற்றவாளிகளை அமெரிக்கக் குடியேற்றப் பகுதிகளுக்கு அனுப்பி வந்தது. குற்றவாளிகளை இப்படி அனுப்பிய முறைக்கு இடப் பெயர்வு (Transportation) என்பது பெயர். இம்முறையினால் இங்கிலாந்துச் சிறைகளில் ஏற்பட்ட நெரிசலைத் தவிர்க்க முடிந்தது. அமெரிக்கா கி.பி. 1783-ஆம் ஆண்டில் விடுதலை பெற்றபின், குற்றவாளிகளை இடப்பெயர்வு செய்யப் புதியதொரு இடத்தைத தேர்ந்தெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆசுத்திரேலியாவிலுள்ள நியூசௌத்வேல்சில் கி.பி. 1786-ஆம் ஆண்டில் புதிய தொரு சிறைச்சாலையை அமைப்பதென முடிவு செய்தது. கப்பற்படையிலிருந்து ஓய்வுபெற்ற கேப்டன் ஆர்தர் பிலிப்பு இக்குடியேற்றத்தை நிலைநாட்ட அமர்த்தப் பெற்றார். அவரே அதன் ஆளுநராகவும் பொறுப்பேற்றார்.

பிலிப்பு கி.பி. 1787-ஆம் ஆண்டு மே மாதம் 570 ஆண் குற்றவாளிகளுடனும் 160 பெண் குற்றவாளிகளுடனும் அவர்களைப் பாதுகாக்க ஏறத்தாழ 200 ஆங்கிலப் படைவீரர்களுடனும் படைவீரர்களின் முப்பது மனைவிமார்களுடனும் ஒரு சில குழந்தைகளுடனும் இங்கிலாந்திலிருந்து கப்பலில் புறப்பட்டார். இக்குழுவினர் 11 கப்பல்களில் பயணம் செய்து ஆசுத்திரேலியாவின் கீழ்க்கரையில் ‘பாட்டனி பே’ என்னும் விரிகுடாவில் கி.பி. 1788-ஆம் ஆண்டு சனவரி மாதம் 19-ஆம் நாள் இறங்கினர். சனவரி 26-ஆம் நாள் பிலிப்பு, ஆசுத்திரேலியாவில் புதிய குடியேற்றத்தை நிலைநாட்டினார். அதுவே பின்னர்ச் சிட்னி நகரமாக மாறியது.

புதிய குடியேற்ற மக்கள் தொடக்கத்தில் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டு வாழ்ந்தனர். குற்றவாளிகள் அங்கு அமைக்கப் பெற்ற சமூகப் பண்ணைகளில் பணியாற்றினர். குடியேற்ற நிருவாகம், கி. பி. 1790-ஆம் ஆண்டளவில் படைவீரர்களுக்குச் சிறுசிறு நிலங்களைக் கொடையாக வழங்கிக் குற்றவாளிகளையும் விடுவித்தது. அவர்களை அடுத்துச் சுதந்திரக் குடியேற்ற மக்களும் அதே ஆண்டில் முதன்முதலில் ஆசுத்திரேலியாவுக்கு வந்து சேர்ந்தனர்.

புதிய கண்டத்தில் ஆய்வு: நியூசௌத்வேல்சில் புதிய குடியேற்றம் நிலைநாட்டப்பட்டபோது ஆசுத்திரேலியாவைப் பற்றிய முழுவிவரமும் மக்களுக்குத் தெரியவில்லை. அது பெரிய நிலப்பகுதியா? ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தீவுகளைக் கொண்டதா என்று ஒருவரும் அறிந்திலர். வட மேற்கு, மேற்கு, தென்கிழக்குக் கடற்கரைகளைத் திட்டவட்டமாகப் படம் பிடித்த பின்னர்த்தான் மேற்கு ஆசுத்திரேலியா ஒரே நிலப்பகுதி என்பது தெளிவாயிற்று. தாசுமன் அதனை ‘நியூ ஆலந்து’ என்று பெயரிட்டார். குக்குக் கண்டுபிடித்த கிழக்குக் கடற்கரையையும் படம் பிடித்தார்கள். எனினும் தென் கடற்கரைப் பகுதியின் பெரும்பகுதியும், வடகரையின் ஒரு பகுதியும் கண்டுபிடிக்கப்படாமலேயே இருந்தன. எனவே நியூசௌத்வேல்சும் நியூ ஆலந்தும் தனித்தனித் தீவுகளாக ஒருவேளை இருக்கக் கூடுமோ என்று எண்ணினர்.

சார்சு பாசு, மாத்தியூ பிளிண்டர்சு என்னும் இரு ஆங்கில மாலுமிகள் கி.பி. 1796, 1799-ஆம் ஆண்டு-