உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசுத்திரேலியா

305

ஆசுத்திரேலியா

களில் தாசுமேனியாவைக் கப்பலில் சுற்றி வந்து அது ஒரு தீவு என்பதை உறுதிப்படுத்தினர். பிளிண்டர்சு கி.பி. 1801 முதல் 1803 வரை கப்பல் வழிப் பயணம் செய்து ஆசுத்திரேலியாக் கண்டத்தைச் சுற்றி வலம் வந்தார். அவருடைய பயணத்தின்போது இதுவரை படம் பிடிக்காத பகுதிகளையும் அவர் படம் பிடித்து, ஆசுத்திரேலியா ஒரு பெரிய நிலப்பகுதி என்பதனைத் திட்டவட்டமாக அறிவித்தார். அவர் கி.பி.1820-ஆம் ஆண்டளவில் சிட்னி நகரைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆய்வு செய்தார். ஆமில்ட்டன் கியூம், வில்லியம் கோவல் என்னும் இருவர் கி.பி. 1824-ஆம் ஆண்டில் சிட்னியிலிருந்து மெல்பர்ன் போகும் வழித் தடத்தைக் கண்டறிந்தனர். அப்போது மெல்பர்ன் உருவாகவில்லை என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். அவர்கள் சென்ற வழியில் பெரியதொரு ஆற்றினைக் கண்டார்கள். சார்லசு இசுடர்ட்டு (Charles Sturt) என்பார் கி.பி. 1820, 1830-ஆம் ஆண்டுகளில் இந்த ஆறு பாயும் பகுதியின் வழியாகப் பயணம் செய்து இவ்வாற்றின் கழிமுகம் வரை சென்றார். இன்றைய அடிலேய்டு நகரம் இருக்கும் இடம்வரை அவர் பயணம் செய்தார். அவர் முயற்சியில் நிலைநாட்டப் பெற்றதுதான் தென் ஆசுதிரேலியக் குடியேற்றப் பகுதியாகும். இசுடரிட்டு அந்த ஆற்றிற்கு ‘மர்ரே’ என்று பெயரிட்டார்.

சார்லசு பிரிமாண்டல் என்னும் ஆங்கிலக் கடற்படைத் தலைவர் ஆசுத்திரேலியாவின் தென் மேற்குக் கடற்கரையில் கி.பி. 1829-ஆம் ஆண்டில் இறங்கினார். இவர் ஆசுத்திரேலியாக் கண்டத்தின் மேற்குப் பகுதி முழுவதையும் ஆங்கிலேயருக்கு உரிமையாக்கினார். அதே ஆண்டின் இறுதியில் மேற்கு ஆசுத்திரேலியாவிலும் அதன் தலைநகராகிய பெர்த்து என்னும் ஊரிலும் சற்றேறக்குறைய எழுபது ஆங்கிலேயர்கள் குடியேறினர்.

நியூசௌத்வேல்சினைச் சார்ந்த மக்கள் கி.பி. 1820-ஆம் ஆண்டளவில் இங்கிலாந்திற்கு உரோமத்தை ஏற்றுமதி செய்தமையால் சிறப்பு வாய்ந்த பொருளாதாரத்தை நிலைநாட்டினர். உரோம வாணிகத்தால் அவர்கள் பெரும் ஆதாயம் பெற்றதன் வினளவாகக் குடியேறியவர்களுள் பெரும்பாலோர் ஆடுகளை வளர்க்கும் தொழிலில் ஈடுபடலாயினர். ஆனால் நியூசௌத்வேல்சு அரசாங்கம், குடியேறியவர்களைக் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும் நிலத்தை வாங்கவோ மேய்ச்சல் நிலத்தைக் குத்தகைக்கு விடவோ அனுமதித்தது. குறிப்பிட்ட நிலத்திற்கு அப்பாற்பட்ட நிலப்பகுதி அரசாங்கத்தின் சொத்து எனக் கருதப்பட்டது. ஆடுகளை வளர்க்க முடிவு செய்த குடியேறியவர்கள் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தைச் சட்டத்தை மீறிக் கைப்பற்றத் தொடங்கினர். இவ்வகையாகச் சட்டத்தை மீறி நிலத்தைப் பறித்துக் கொண்டவர்கள் ‘குந்தியவர்கள்’ (Squatten) எனக் குறிக்கப்பட்டனர். காலப்போக்கில் வலிய நிலத்தைப் பறித்துக் கொண்ட குந்தியவர்கள் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டு, அவர்கள் கைப்பற்றிய நிலம் நீண்டகாலக் குத்தகைக்கு விடப்பட்டதாகக் கருதப்பட்டது, அவ்வாறு கைப்பற்றிய சிலர், ஆசுத்திரேலியாவிலே பெரும் நிலக்கிழார்கள் என்னும் தகுதி பெற்றனர்.

ஆட்டுப் பண்ணைக்காரர்களுள் பலர் கி.பி. 1830-ஆம் ஆண்டளவில் தாசுமேனியாவிலிருந்து நியூசௌத்வேல்சின் தென்பாகத்திலும் சிட்னியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குடியேறினர். அவர்களே மெல்பர்ன் நகரத்தை உருவாக்கியவர்கள். அவர்கள் மர்ரே ஆற்றுக்குத் தென்பாலிருந்த செழுமையான நிலங்களில் தங்கினர். தமக்குத் தனியாகக் குடியேற்றப் பகுதி வேண்டுமென இங்கிலாந்து அரசை வேண்டினர். ஆங்கில அரசு கி.பி. 1851-ஆம் ஆண்டு அவர்களுக்கு அனுமதியளித்தது. அந்த ஆண்டில்தான் மர்ரே ஆற்றுக்குத் தெற்கிலுள்ள பகுதிகள் விக்டோரியா என்னும் பெயர் கொண்ட புதிய குடியேற்றப் பகுதியாயிற்று.

உள்நாட்டைத் துருவி ஆய்தல்: உள்நாட்டுப் பகுதிகளைத் துருவி ஆராயும் நீண்ட ஆய்வுப் பணிகள் கி.பி. 1830-ஆம் ஆண்டளவிலேயே முதன்முதல் தொடங்கியது. எட்வர்டு சான் அயர் என்பவர் கி.பி. 1839, 1840-ஆம் ஆண்டுகளில் அடிலேய்டு நகருக்கு வடமேற்கில் பரந்து காணப்பட்ட வறண்ட உப்பு ஏரிகளைக் கண்டுபிடித்தார். இராபர்ட்டு ஓ அர பர்க்கு (Robert O Hara Burk) என்பாரும் வில்லியம் வில்சு (William John Wills) என்பாரும் கி.பி. 1860, 1861-ஆம் ஆண்டுகளில் ஆசுத்திரேலியக் கண்டத்தைத் தெற்கிலிருந்து வடக்காகக் கடந்தனர். ஆயினும் வடக்கிலிருந்து தெற்கே திரும்புங்கால் உண்ண உணவின்றிப் பசிக் கொடுமையால் இறந்தனர். சான் மாக்டுவல் இசுடூவர்ட்டு (John Mc Douall Stuart) என்பார் கி.பி. 1861,1862-ஆம் ஆண்டுகளில் வடதென் கடற்கரைகளை முதன் முதலாகச் சுற்றி வந்தார்.

பொன்னைத் தேடித் திரண்டு வந்த கூட்டம்: நியூசௌத்வேல்சில் கி.பி. 1851-இல் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. சில மாதங்களுக்குப் பின்னர் விக்டோரியாவில் நியூசௌத்வேல்சைவிடப் பெரும் பொன்வயல் இருப்பது தெரிந்தது. தங்கத்தைக் கைக்கொள்ளக் கடல்கடந்த நாடுகளிலிருந்து தங்க வயல்களை தாடி ஆயிரமாயிரவர் ஆகத்திரேலியா-