உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்

309

ஆசுத்திரேலியா ஆதிக்குடிகள்

குழந்தைகள் ஆகியோரைக் கொண்டதே குடும்பம் எனப்பட்டது. இவர்களின் திருமண முறையில். ஒருவன், தன் உடன்பிறந்தானின் மனைவியையும், தன் இரண்டாம் மனைவியாகக் கொள்ளும் முறை உள்ளது. இம்மணமுறை ‘பிராவ்ரூ’ அல்லது ‘பிரங்குரு’ என்று சொல்லப்படுகிறது. இவர்களின் உறவு முறையில் பெருங்கால்வழிப் பிரிவும், அதன் கீழ்ப் பல உட்பிரிவுகளும் காணப்படுகின்றன.

இவர்கள் மழைக்காலங்களில் இடைக்கால அமைப்பாகக் கட்டப்படும் எளிய வீட்டில் வசிக்கின்றனர். இவ்வீடுகள் வலுவான மரக்கிளைகளைக் கொண்டு கட்டப்பட்டு, மேலே சிறிய கிளைகள், புல், முதலானவற்றால் மூடப்பட்டுள்ளன. கடினமான, கூர்முனையினை உடைய தடியை. மென்மையான மரத்திலுள்ள ஒரு துளையில் செருகித் தீப்பொறி வரும் வரையில் கையால் கடைந்து நெருப்பினை உண்டாக்குகின்றனர். கங்காரு, ஈமூ, மீன்கள், பாம்பு, தேன், முட்டை, காட்டுப் பழங்கள், கொட்டைகள் ஆகியவை இவர்களின் சில உணவுப் பொருள்களாகும்.

தாவரங்களை உணவுக்காகப் பயன்படுத்துவதுடன், அவற்றைச் சளியைப் போக்கவும் காயத்தை ஆற்றவும் பயன்படுத்துகின்றனர். இவர்கள் திறமை வாய்ந்த வேடுவர்களாகவும் நீச்சல்காரர்களாகவும் திகழ்கின்றனர். அச்சம் மிக்க அலைகளைக் கூட எளிய கட்டுமரத்தினைக் கொண்டு கடக்கின்றனர். மரப்பட்டைகளாலான படகுகளையும், மரத்தினைக் குடைந்து செய்யப்படும் படகுகளையும் பயன்படுத்துகின்றனர்.

ஆசுத்திரேலிய ஆதிக்குடிகள் எளிமையான கருவிகளையே பயன்படுத்துகின்றனர். பொருள்களை, வெட்டவும் சுரண்டவும் துண்டாக்கவும் செதுக்கவும் பயன்படும் தட்டையான கருவிகளைப் பல்வேறு அளவுகளில் செய்கின்றனர். இவர்களின் கருவிகளில் குறிப்பிடத்தக்கது வளைதடியாகும் (Boomarang), இவ்வளைத்தடி இருவகையானதாகும். போர்களில் பயன்படுத்தும் பெரிய வளைதடி திரும்பிவராத வகையினையும், விலங்குகளை வேட்டையாட உதவும் சிறிய வளைதடி, திரும்பிவரும் வகையினையும் சேர்ந்தவை. அரண்டா ஆதிவாசிகள் வளைதடி (Boomarang), கேடயம். இரகசியச் சடங்கில் பயன்படுத்தும் சூருங்கா ஆகியவற்றில் வண்ணம் தீட்டி, அவற்றில் பல படங்களை வரைகின்றனர். இது இவர்களின் கலைத்திறனை எடுத்துக்காட்டுகிறது. இவர்கள் ஈட்டி, ஓமரா தடி (Wommora), கற்கோடரிகள், கத்தி ஆகியவற்றையும் பயன்படுத்துகின்றனர். இந்த ஆதிக்குடிகள் ஈட்டி, வளைதடி ஆகியவற்றைப் பயன்படுத்துவதில் தனித்திறமையுடையவர்கள்.

பெண்கள் மரத்தினால் செய்யப்பட்ட வட்டிலை உணவு அல்லது நீர் வைக்கப் பயன்படுத்துகின்றனர். குழந்தைகளுக்குரிய தொட்டிலாகவும், உமியை நீக்கவும் புடைக்கவும் இவ்வட்டிலைப் பயன்படுத்துகின்றனர். மரத்தால் செய்யப்பட்ட முனைக் கூர்மையான தோண்டும் கழியினை, வேர் கிழங்கு ஆகியவற்றைத் தோண்டவும் வேட்டையாடவும் பயன்படுத்துகின்றனர்.

இவர்கள் வாழ்க்கையில் காணப்படும் சடங்குகள், சமயத் தொடர்பான கதைகள், கடவுள் நம்பிக்கை முதலியன அறிதற்குரியனவாகும். இந்த நூற்றாண்டில்தான் இவர்களின் சடங்குகள் தொடர்பான விளக்கமான செய்திகள் அறியப்பட்டன. இந்த ஆதிக்குடிகளின் நம்பிக்கை, “கனவுலகம்”, “இயற்கை உலகம்”, என இரு வேறுபட்ட உலகங்களின் மேல் அமைந்துள்ளது. இயற்கை உலகம், அதன் வாழ்க்கைச் சாரத்தைக் கனவுலகிலிருந்தே பெற்றது எனவும், எவற்றாலும் பற்றப்படாமல் இருந்த உலகத்தில் ஆவி ஆற்றலால் இயற்கை எழில், தாவரம், விலங்குகள், மனித இனம், முதலானவை தோன்றின என்றும் நம்புகின்றனர். இதன்வழி, காற்று, நெருப்பு, சந்திரன் போன்ற இயற்கையினை வழிபட்டனர். புனித இடங்களை அழித்தால் உணவு கிடைக்காமல் அழிவர் எனவும், அதனால் நோயும் இறப்பும் ஏற்படும் எனவும் நம்பினர். ஆற்றல் வாய்ந்த மந்திரப் பாவை, தீமை செய்யும் மந்திரம் ஆகியவற்றையும் செய்கின்றனர்.

ஆசுத்திரேலிய ஆதிக்குடிகள் தாவரம் அல்லது விலங்கினைக் குலக்குறியாகக் கொண்டு வழிபடுகின்றனர். தம் குலக்குறியான விலங்கு, அல்லது தாவரம் முதலானவற்றை உண்பதில்லை. இயற்கைக்கும் ஆதிக்குடிகளுக்கும் இக்குலக்குறி வழிபாடு ஒரு வலுவான சமயப் பிணைப்பினை உண்டாக்குகிறது.

இச்சடங்கின்போது பயன்படுத்தும் ‘சுருங்கா’ என்னும் கருவியினைப் புனிதமான சொத்தாகப் பேணி, அறிவிலும் வயதிலும் முதிர்ந்த சான்றோர்கள் மட்டுமே அறிந்த மறைவிடங்களில் அதனை வைக்கின்றனர். சுருங்கா என்பது இருபக்கமும் செதுக்கப்பட்ட, பல வட்டமான கோடுகளைக் கொண்ட முட்டை வடிவப் பொருளாகும். இதன் ஒரு முனையிலுள்ள துளையினுள் நார் அல்லது முடியினைக் கொண்டு சுழற்றுவதால் அது தன்னைத்தானே சுற்றிக்கொண்டு உண்டாக்கும் ஒரு வித ஒலியினைத் தம் தேவதைகளிடமிருந்து வரும் ஒலியெனக் கருதுகின்றனர். இவ்வொலியினூடே ஏற்புச் சடங்கிலுள்ள ஓர் இளைஞன் உலக ஆக்கம், தன் இனத்தொடக்கம், சமயம், வாழ்க்கை முறை ஆகியவற்-