உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்சிப்திகா

319

ஆட்சி வேண்டாக் கொள்கை

ஆட்சிப்திகா: கருநாடக இசையில் இராக ஆலாபனையின் முதற்பகுதி. இதனை “ஆயத்தம்” என்று கூறுவதுமுண்டு, தொடக்கத்தில் சிற்சில ஒலிக்கோவைகளின் மூலம் இராகத்தின் சாயலைக் கேட்பவருக்கும் புரியும்படியாக மிகச் சுருக்கமாக இதைப் பாடவேண்டும். மத்தியத்தாயி (அரக்கு) சட்சத்தில் தொடங்கி, வரிசையாகத் தாரபஞ்சமம் வரையில் பாடி, மீண்டும் மத்தியத்தாயி சட்சத்தில் (குரல்) கொண்டு வந்து இராகத்தைச் சுருக்கமாகப் பாடும் இப்பகுதிக்கு ஆட்சிப்திகா என்பது பெயர். இது குறைந்தது 5 நிமிட நேரத்திற்குள் முடிய வேண்டும்.

ஆட்சி மொழிகள் சட்டம்: பாரதம் பல மொழி பேசும் மக்களைக் கொண்ட பரந்த நாடு ஆகும். ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலம், இந்த நாட்டின் நிருவாக மொழியாக இருந்தது. இப்போது இந்தி மொழி, அலுவலக மொழியாக அரசியல் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், ஆங்கில மொழியும் இணைந்து செயற்பட வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொண்டது. இந்திய அரசியல் சட்டம் 15 ஆண்டுகள் வரை ஆங்கிலமும் இணைந்து செயற்பட வேண்டும் என்று வரையறை செய்தது. இந்தப் பதினைந்து ஆண்டுக் காலம் 1965, சனவரி மாதம் 25-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இப்பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் பாராளுமன்றம், ஆங்கிலத்தைத் தொடர்ந்து நீடிக்கும் படியும், தேவநாகரி எண்களைத் தொடர்ந்து செயற்படுத்தும்படியும் சட்டம் இயற்றியுள்ளது.

இந்தியக் குடியரசுத் தலைவர் 1952 ஆம் ஆண்டு பிறப்பித்த கட்டளை ஒன்று, மாநில ஆளுநர்கள், உயர்நீதிமன்றம், தலைமை நீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதிகள் ஆகியவர்களின் பணி அமர்த்தல் பற்றிய கட்டளைகள் ஆங்கில மொழியில் மட்டுமல்லாமல் இந்தி மொழியிலும் இருக்க வேண்டுமென்று கூறியது. இதுபோன்று 1955-ஆம் ஆண்டும் குடியரசுத் தலைவர் பிறப்பித்த கட்டளை ஒன்று, பொது மக்களுடன் அரசு வைத்துக் கொள்ளும் தொடர்பு, நிருவாக அறிக்கைகள், நாடாளுமன்ற அறிக்கைகள், அரசின் தீர்மானங்கள், சட்டங்கள், இந்தி மொழியைப் பணிமொழியாக ஏற்றுக் கொண்டுள்ள மாநிலங்களுடன் மத்திய அரசு வைத்துக்கொள்ளும் தொடர்புகள், இந்திய அரசு ஏற்றுக் கொள்ளும் ஒப்பந்தங்கள், வெளிநாடுகளுடன் வைத்துக் கொள்ளும் தொடர்புகள், தூதரகத் தொடர்பு, பன்னாட்டு அமைப்புகளுடன் கொள்ளும் தொடர்புகள், தூதர்களுக்கும் வணிகத் தொடர்பு பற்றிய தூதரக அலுவலர்களுக்கும் கொடுத்தனுப்பும் சான்றிதழ்கள் (Credentials), இந்தியப் பேராளர்கள் பன்னாட்டு அமைப்புகளில் பயன்படுத்தும் மொழி ஆகியவற்றிலெல்லாம் இந்தி மொழியே இடம் பெற வேண்டும் என்று கூறியது.

இந்தி மொழி, இந்தியத் தேசிய ஆட்சிமொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், ஆங்கில மொழியும் தொடர்ந்து பயன்படுத்தப்பட வேண்டுமென நாடாளுமன்றம் சட்ட மூலம் தேவையான வழிவகைகளைச் செய்து கொள்ளலாம் என அதிகாரம் வழங்கப்பட்டது. நாடாளுமன்றம், 1963-ஆம் ஆண்டில் ஆட்சி மொழிகள் சட்டம் (Official Languages Act, 1963, No. 19 of 1963) ஒன்றை ஏற்படுத்தியது. அச்சட்டம், ஆங்கிலம் 1965-ஆம் ஆண்டிற்குப் பின்னும் இந்தி மொழியுடன் இணைந்து பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், இருமொழிகளும் அனைத்துப் பணிகளுக்கும், பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்பட வேண்டுமென்றும் கூறியது. அச்சட்டம், 1968 ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது. திருத்தப்பட்ட அச்சட்டம், “இந்தி மொழியுடன் ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்தப்படும்” என்று கூறுகிறது. பல்வேறு சிக்கல்களை நீக்கும் பொருட்டு, இந்த இரண்டு மொழிகளையும் தொடர்ந்து நீட்டிக்க வேண்டுமென்று நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் வழிவகை செய்துள்ளது. உலகின் பல நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சி மொழிகளை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். எடுத்துக்காட்டாக, கனடா, ஆங்கிலத்தையும் பிரெஞ்சு மொழியையும் இணைத்துப் பயன்படுத்துகிறது. சுவிட்சர்லாந்து நான்கு மொழிகளைப் பயன்படுத்துகிறது. அதில் ஒரு மொழியைத் தவிர, மற்ற மூன்று மொழிகளை ஆட்சிமொழியாகப் பயன்படுத்துகின்றது. பெல்சியமும் தென் ஆப்பிரிக்கக் குடியரசும் இரு மொழிகளைப் பயன்படுத்துகின்றன. சிங்கப்பூரில் நான்கு மொழிகள் ஆட்சிமொழிகளாகச் செயற்பட்டு வருகின்றன.

ஆட்சி வேண்டாக் கொள்கை என்பது கட்டுப்பாடில்லாத சமுதாய அமைப்பு முறையை ஆதரிக்கும் கொள்கை. இந்த அமைப்பில் நாடு (State), அரசு (Government), தனி உடைமை (Private Property), சமயம் ஆகியவற்றிற்கு இடமில்லை. இக்கொள்கைக்கு வித்திட்டவர் பிரௌதான் (Proudhon) ஆவார். அறிவியல் சார்ந்த வகையில் இக்கொள்கையை அறிவித்தவர் மைக்கேல் பாக்குனின் (Michael Bakunin) ஆவார். அவர், தாம் இயற்றிய ‘கடவுளும் நாடும்’ (God and the State) என்ற நூலில் இக்கொள்கையைப் பற்றிய கருத்துகளை வெளியிட்டுள்ளார். பீடர் கிரோபாட்கின் (Peter Kropotkin)