உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்சி வேண்டாக் கொள்கை

320

ஆட்சி வேண்டாக் கொள்கை

ஆட்சி வேண்டாக் கொள்கையின் (Anarchism) தலையாய விளக்குநராக விளங்குகிறார்.

நாடு, அரசு ஆகியவற்றை முற்றிலும் ஒதுக்கிவிட வேண்டும் என்பது இக்கொள்கையின் முக்கியமான கூறாகும். மனிதன் தோன்றிய காலத்திலிருந்து அவனுடைய நடத்தையை மிருக உணர்ச்சிகள் கட்டுப்படுத்தி வருகின்றன. அந்த நிலையை விட்டு உண்மையான விடுதலையையும் மகிழ்ச்சியையும் எப்போது பெறுகிறானோ அப்போதுதான் அவன் முழு வளர்ச்சியை அடைந்தவனாகக் கருதப்படுவான். அரசியல் அதிகாரம், தனி உடைமை, சமயம் ஆகியவை மனிதன் முழு வளர்ச்சியடையாத காலத்தில் இருக்க வேண்டிய அமைப்புகள் ஆகும். மனிதனுடைய உடல் சார்ந்த விருப்பங்களை நிறைவேற்றவும் அவனுக்கு ஏற்படக்கூடிய பயங்களைப் போக்கவும் அவை தேவைப்படுகின்றன. மனிதன் முழு வளர்ச்சியை எய்தும் போது இயற்கைச் சட்டங்கள் (Natural Laws) நடைமுறைக்கு வந்துவிடும். அப்போது அரசு இயற்றும் சட்டங்களுக்கு இடம் இராது. எனவே நாடு, அரசு போன்ற அமைப்புகள் மறைந்துவிடும்.

ஆட்சி வேண்டாக் கொள்கையின் முக்கிய எதிரி, நாடாகும். நாடு என்பது வேறு; சமுதாயம் என்பது வேறு. நாடு இல்லாத சமுதாயத்தையே ஆட்சி வேண்டாக் கொள்கையினர் ஆதரிக்கின்றனர். நாடு ஏன் அழிக்கப்பட வேண்டும் என்பதற்கு அவர்கள் பல காரணங்களைக் கூறுகின்றனர். நாடு அண்மைக் காலத்தில் தோன்றிய ஓர் அமைப்பாகும். நாடு என்பது வன்முறைக்கும் கொள்கைக்கும் பிறந்த குழந்தையாகும். வலுக்கட்டாயத்திற்குக் (Force) கடவுள் அளித்த ஒப்புதலின் விளைவே நாடாகும். கொடுங்கோன்மை என்பது நாட்டினுடைய சாறாகும். ஏற்றத் தாழ்வுகளின் வெற்றிச் சின்னமாகவும் அது விளங்குகிறது. தனி உடைமையைக் கட்டிக் காப்பது நாடேயாகும். தனி உடைமை தொழிலாளர்களை அடிமைப்படுத்துகிறது. ஒரு சிலருக்கு மட்டும் அளவு மீறிய தேவையற்ற வசதிகளை அளிக்கிறது. மனிதனுடைய அறவாழ்க்கையையும் அவனுடைய சிந்தனையையும் நாடு கெடுக்கிறது. சில சமயங்களில் நாடு நல்லதைச் செய்யுமாறு ஆணையிடலாம். அப்போது கூட அது நல்லதைக் கெடுக்கும் வகையிலேதான் செயற்படுகிறது. ஏனெனில் ஆணையிடுவதன் வாயிலாக அதிகாரம் பெற்ற சிலரை இழிநிலைக்கு அது கொண்டு செல்கிறது. அதிகாரம் மனிதனை இழிநிலைக்குக் கொண்டு செல்லும் என்பதை மறுக்க இயலாது. அதிகாரம் உடையவர்கள் தங்களை மற்றவர்களைவிட மேலானவர்களாகக் கருதுகின்றனர். எனவே அவர்கள் பிறருக்கு அளிக்கப்படாத உரிமைகளை வேண்டிப் பெறுகின்றனர். அதன் விளைவாக மக்களிடையே வகுப்புப் பாகுபாடு தோன்றுகிறது. மேலும் பொதுப்பணியைக் காரணங் காட்டித் தனி மனிதனுடைய நலன்களைக் கைவிடுகின்றனர். மக்களுள் ஒரு சிலரைக் கொடுங்கோலர்களாகவும் பலரை வேலைக்காரர்களாகவும் மாற்றுவது நாடேயாகும். ஒருவனை ஒருவன் ஏய்த்துப் பிழைக்க உதவி செய்வது நாடாகும். அரசை நடத்தும் ஒருசில தனி உடைமைக்காரர்களின் நலன்களைப் பாதுகாக்கும் நிறுவனமாக நாடு விளங்குகிறது. நாடு இருக்கும் வரை மனிதனுடைய கூட்டுறவு உணர்ச்சிகள் வெளிவர வாய்ப்பில்லை. மேலும் மனிதனுடன் கூடவே பிறந்த இயல்புகளுக்கு எதிராக நாடு பணி செய்கிறது. அதாவது, மனிதத் திறன்கள் தாமாகவே செயற்படும் ஆற்றல் உடையனவாகும். அத்தகைய நிலை உருவாகும்போதுதான் அவன் வளர்ச்சி பெற முடியும். அதற்கு மாறாக நாடு தலையிட்டு அவன் திறன்களைக் கட்டுப்படுத்தி இயக்க முற்படுமேயானால் அவனுடைய வளர்ச்சி தடைப்படும். கட்டுப்பாடுகள் இன்றியமையாதன அல்ல என்று கூறுவதற்கில்லை. ஆனால், அக்கட்டுப்பாடுகள் தமக்குத் தாமே சுமத்தப்படுவனவாக இருத்தல் வேண்டும். நாடு இருக்கும்வரை அத்தகைய நிலை உருவாவதற்கு இல்லை.

நாடு, அரசு ஆகியவை இல்லை எனில், சமுதாயத்தில் இணக்கத்தை ஏற்படுத்த இயலாது. எனவே குழப்பநிலை உருவாகும் என்பதை இக்கொள்கையினர் ஏற்றுக்கொள்வதில்லை. அரசு வாயிலாகக் கட்டாயப்படுத்தி உருவாக்கப்படும் இணக்கத்திற்கு மாறாக மற்றொரு விரும்பத்தக்க இணக்கம் ஏற்படும். அரசு இல்லையெனில் பலவித சங்கங்கள் தோன்றும். அச்சங்கங்கள் தனி மனிதனுடைய தேவையின் விருப்பங்களை நிறைவு செய்யும் வகையில் அமைந்திருக்கும், சில சங்கங்கள் நிலப் பகுதியை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்படலாம். மற்றும் சில தொழிலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படலாம். அவை யாவும் பிற சக்திகளால் உந்தப்பட்டு மனிதன் விருப்பத்திற்கு எதிராக உண்டாக்கப்பட்டனவாக இரா. பொருள் உற்பத்திக்கும் பொருளை நுகர்வதற்கும், மக்கள் தாங்களாகவே மனமுவந்து தோற்றுவித்த சங்கங்களாக அமையும். அச்சங்கங்கள் யாவும். தாமே விருப்பப்படி செய்து கொண்ட உடன்பாடுகள் வாயிலாக அமைதியை நிலைநாட்டும்.

இந்த வகையான ஒரு சமுதாயத்தை உருவாக்குவதென்பது நிகழக் கூடியதா என்று சிலர் ஐயப்படக்கூடும். இன்றைய சமுதாயத்திலே தோன்றி வளர்ந்து வருகிற சில போக்குகளைக் கவனிக்குமிடத்து இது நிகழக் கூடியதாகக் கருத