ஆட்சி வேண்டாக் கொள்கை
322
ஆட்சி வேண்டாக் கொள்கை
வர்களைக் கொண்டு அமைப்பதே மக்கள் ஆட்சியாகும். அல்லது ஒரு காரியத்தை நல்லபடியாகச் செய்து முடிப்பதற்கு வேண்டிய அறிவு பெறாதவர்கள் நடத்தும் ஆட்சியே மக்கள் ஆட்சியாகும். மக்களாட்சி முறை, அரசியல்வாதிகளை உருவாக்குகிறது. அரசியலை அது ஒரு தொழிலாக மாற்றுகிறது. எனவே மக்கள் ஆட்சி உண்மையிலேயே மக்கள் ஆட்சியாக அமைவதில்லை. அது தேவையற்றதும் கூட என்பது இக்கொள்கையினர் கருத்தாகும்.
அதிகாரம் ஒருவனைத் தன்னலங் கருதுபவனாக மாற்றுகிறது; செருக்குடையவனாக மாற்றுகிறது; கொடுங்கோலனாக மாற்றுகிறது; அவனை அதிகாரத்தில் கொண்டு வைத்த மக்களின் நலன்களைப் புறக்கணிக்கச் செய்கிறது. ஓர் அரசியல்வாதி கெட்டவனாவதற்குக் காரணம் அவனுடைய பதவியேயன்றி அவனுடைய மனிதத் தன்மையன்று. ஆகவே எவரிடமும் பிறரை ஆளும் அதிகாரத்தை ஒப்படைக்கக் கூடாது.
வலிமையைக் காட்டுவது அரசின் தன்மை. அந்த வலிமை, நண்பர்களைப் பிரித்து அவர்களை ஒருவரோடொருவர் மோதவிடுவதற்கும், தேசிய இனங்களைப் பிரிப்பதற்கும் உடன்பிறப்புகளைப் பிரித்து ஒன்றுக்கொன்று எதிர்த்து நிற்கும் வகுப்புகளை உருவாக்குவதற்கும் பயன்படுகிறது. உள்நாட்டுக் கலவரங்களும் அயல்நாட்டுடன் போரிடும் அரசினால் தான் ஏற்படுகின்றன என்பது இவர்களுடைய கருத்தாகும். அரசு என்பது வலுக்கட்டாயம், பிரிவு, ஒதுக்குதல் என்று பொருள்படும். ஆட்சியற்ற சமுதாயம் என்பது சுதந்திரம், ஒற்றுமை, அன்பு என்று பொருள்படும் என ஆட்சி வேண்டாக் கொள்கையினர் கூறியுள்ளனர். பயம், தான் என்ற கர்வம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசு இயங்குகிறது. அரசு இல்லாத சமுதாயம் உடன்பிறப்புக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருக்கும். மக்கள் பல தேசிய இனங்களாகப் பிரிந்து இருக்கிற காரணத்தால்தான் படைக் குவிப்பினால் ஏற்படும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுகிறார்கள். மனிதர்கள் ஒருவரை விட்டு மற்றொருவர் விலகுவதால் சட்டத்தின் பாதுகாப்பை நாடுகிறார்கள் என்பது இக்கொள்கையினருடைய கருத்தாகும்.
நாடு தேவையற்றது என்பதை இக்கொள்கையினர் பல எடுத்துக்காட்டுகள் வாயிலாக விளக்கியுள்ளனர். கல்வி வளர்ச்சிக்கு நாடு தேவையில்லை என்று கூறுகின்றனர். தொழிலாளிகளுக்குத் தேவையான ஓய்வு நேரம் இருந்தால் அவர்களே ஒருவருக்கொருவர் பாடம் கற்பிக்கலாம். அதன் விளைவாகப் பல கல்விச் சங்கங்களை அவர்களே விருப்பப்பட்டு ஏற்படுத்தலாம். சமுதாயப் பாதுகாப்புப் பணிக்குக்கூட நாடு தேவையில்லை. ஏனெனில் நிலைப்படை எதிரியைத் தோற்கடிக்கத் தவறிவிட்டதற்கும் தாமாகவே கொதித்தெழுந்த மக்கள் படை, எதிரியைத் தோற்கடித்ததற்கும் வரலாற்றில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. தனி மனிதனுக்குப் பாதுகாப்பு வழங்குதற்கும் நாடு தேவையில்லை. ஏனெனில் தீயவர்களிடமிருந்து குடிமக்களைக் காப்பதற்குப் பதிலாக அத்தீயவர்களை நாடு உருவாக்குகிறது. பொருளாதார முறையை நேர்மையான வகையில் அமைக்தத் தவறிவிட்டமையால், மக்களுக்குத் துன்பம் விளைவித்து அவர்களைக் குற்றம் புரியத் தூண்டுகிறது. குற்றம் செய்ததற்காக அவர்களைச் சிறையில் தள்ளி அதன் விளைவாக, நல்ல முறையில் வாழ்க்கையை நடத்தும் முயற்சியில் ஈடுபடாதவாறு செய்துவிடுகிறது. மேலும் நாடு தலையிடாத துறைகளில் மனிதன் மிகுந்த ஆர்வத்துடன் செயற்படுவதை மக்கள் காணலாம். அதற்கு இராயல் சொசைட்டி, பிரிட்டிசு அசோசியேசன் போன்றவற்றை எடுத்துக்காட்டாகக் காட்டுகின்றனர்.
ஆட்சியற்ற சமுதாயம் எவ்வாறு இயங்கும் என்பதை இக்கொள்கையினர் கூறியுள்ளனர். ஒவ்வொரு தொழிலும், அத்தொழிலில் ஈடுபட்டவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட, தாமாக ஏற்படுத்திக் கொண்ட, ஒரு சங்கத்தின் வாயிலாக நடத்தப் பெறும். அச்சங்கத்தின் அலுவலர்கள் எல்லா உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களை நீக்கவும் அவ்வுறுப்பினர்களுக்கு அதிகாரம் உண்டு. சங்கத்தின் கொள்கையை அவர்களே வரையறுப்பார்கள். அதுபோன்ற ஏனைய சங்கங்களுடன் எந்த வகை வற்புறுத்தலுமின்றி மேற்கொள்ளப்பெறும் உடன்பாடுகள் வாயிலாக உறவு கொள்ளுவர். எங்குப் பார்த்தாலும் சங்கங்கள் அமைக்கப்பட்டிருக்கும். எங்கும் வலுக்கட்டாயம் இராது. அதே நேரம் எங்கும் அமைதி நிலவும். எல்லாச் சங்கங்களும் சமநிலையில் வைக்கப்பட்டிருக்கும். உரிமை பெற்றவர்கள், உரிமையற்றவர்கள் என்ற பாகுபாடு இராது. நாடு என்னென்ன பணிகளை மேற்கொண்டிருக்கிறதோ அந்தப் பணிகள் அனைத்தையும் அச்சங்கங்கள் நிறைவேற்றி வரும். அதாவது அதிகாரம் ஓரிடத்தில் குவிக்கப்படுவதற்குப் பதிலாகப் பரவலாக்கப்படும். இந்த வகைச் சமுதாயத்தின் அடிப்படையில் அமைக்கப் பெறுவது ஒரு கிராமமாகவோ தொழிற் கூடமாகவோ இருக்கும். இதில் சச்சரவுகளுக்கோ கருத்து வேறுபாடுகளுக்கோ இடமிராது. மக்கள் உரிமையுடன் செயற்படுவர். அவர்களுக்கிடையே போட்டி மனப்பான்மை இராது. எனவே பகைமை ஏற்படாது. இதுவே இக்கொள்கையினர் எதிர்நோக்கும் சமுதாய அமைப்பாகும்.