உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்டங்களும் விளையாட்டுகளும்

327

ஆட்டங்களும் விளையாட்டுகளும்

யாட்டுப் பலகை சதுர வடிவமாக இருக்கும். பலகையின் நான்கு மூலைகளிலும் ஆட்டக்காரர்களால் அடித்துத் தள்ளப்படும் காய்கள் விழுவதற்கான சிறு பள்ளம் இருக்கும். அரசி என்ற காயை மட்டும் தனித்து அடிக்க முடியாது. இதை அடித்ததும் மற்றொரு காயையும் அடித்தாக வேண்டும். எந்த ஆட்டக்காரர் தம் காய்கள் அனைத்தையும் முதலில் அடித்துத் தள்ளுகிறாரோ அவரே வெற்றி பெற்றவராவார். கேரம் விளையாட்டு இக்காலத்தில் உலகிலுள்ள பல நாடுகளில் விளையாடப்படுகிறது.

புற விளையாட்டுகளுள் சில அகவிளையாட்டுகளாகவும் விளையாடப்படுகின்றன. மேசை தென்னிசு (Table Tennis), பில்லியார்ட்சு (Billiards), மேசை ஆக்கி (Table Hockey) ஆகியவற்றை இத்தகைய விளையாட்டுகளாகக் குறிப்பிடலாம். மேசை ஆக்கி என்பது, சோவியத்து நாட்டில், குளிர் காலங்களில், மக்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாதவாறு மிகுதியான பனி பெய்து கொண்டிருக்கும் பொழுது, வீட்டினுள் இருந்தவாறே ஆடக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டத்தில் ஒரு நீண்ட சதுரப் பலகை இருக்கிறது. இதில் ஆட்டக்காரர்களின் சிறு படிமங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஆட்டம் தொடங்கியவுடன் இரு அணியினரின் சார்பாக விளையாடும் ஆட்டக்காரர்கள், தத்தம் அணியினரைப் பந்து வரும் பக்கம் நோக்கித் தடுத்து நிறுத்தவும், நகர்த்தவும் வசதியாக ஆக்கிப் பலகைக்கு அடியில் பிடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை நகர்த்தினால் ஆட்டப்படிமங்களும் நகரும். இவ்விளையாட்டு விறுவிறுப்பும் துடி துடிப்பும் நிறைந்த ஆட்டமாகும்.

சீட்டாட்டம்: அகவிளையாட்டுகளில் சீட்டு என்னும் விளையாட்டு, இந்தியாவிலும் சீனாவிலும் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலேயே விளையாடப்பட்டு வந்தது. இவ்விளையாட்டு அரேபியாவில் பரவி, அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றது. காலப் போக்கில் இது பணம் கட்டி விளையாடப்படும் சூதாட்டமாக மாறியது, ஐரோப்பிய நாடுகளில் கிறித்தவத் திருச்சபை இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இக்காலத்தில் இவ்விளையாட்டு பல வகையான பெயர்களில் அமைந்த ஆட்டங்களாக உலகெங்கிலும் விளையாடப்படுகிறது. சூதாட்ட முறையில் பெரிய தொகைகளைப் பந்தயமாக வைத்தும் இது விளையாடப்படுகிறது. சீட்டு விளையாட்டைப் போன்ற இலோட்டோ (Lotto) என்னும் இத்தாலிய விளையாட்டு, இப்பொழுது பல நாடுகளிலும் விளையாடப்படுகிறது. சீட்டாட்டப் பலகை (Cribbage Board) எனப்படும் விளையாட்டு, சீட்டு விளையாட்டு வகையின்பாற்படும். ஆட்டக்காரர்கள் சீட்டு ஆட்டத்தில் எடுத்த புள்ளிகளை அடையாள ஆணியினை வைத்துக் குறிப்பதற்காக ஒரு பலகையில் சிறுகுழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவே சீட்டாட்டப் பலகை ஆகும். போச்சு (Poach) எனப்படும் செருமானியச் சீட்டு விளையாட்டும், இக்காலத்தில் சில நாடுகளில் விளையாடப்படுகிறது. சீட்டினின்று வேறுபட்ட வணிக விளையாட்டு (Trade) சிறுவர்களால் பெரும்பாலும் விளையாடப்படுகிறது. இதனை இருவர் நால்வர், ஐவர் அதற்கு மேற்பட்டவர்கள் விளையாடலாம். மனிதர்கள் தம் வாழ்க்கையில் அடையக் கூடிய பல நிலைமைகளும் நலன்களும் உயர்வுகளும் இழப்புகளும் தனித்தனி இடங்களாகக் குறிக்கப்பட்டிருக்கும். ஆட்டக்காரர்களின் காய் எந்தக் கட்டத்திற்கு வருகிறதோ அந்தக் கட்டத்திற்குரிய நற்பலன் அவர்களுக்குக் கிட்டும். ஆதாயமோ இழப்போ வரலாம். இவ்விளையாட்டைப் போன்ற வேறொரு கட்ட விளையாட்டு இந்தியாவில் பழங்காலத்திலிருந்து விளையாடப்படுகிறது. இது பரமபத சோபான படம் என்று தமிழ்நாட்டிலும், மோட்சபதமு என்று ஆந்திர நாட்டிலும் வழங்கப்படுகிறது. இவ்விளையாட்டு, மேனாடுகளில் பாம்புகளும் ஏணிகளும் என்ற பெயரால் வழங்கப்படுகிறது.

பகடை உருட்டல்: எகிப்திலும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவிலும் பகடை ஆட்டம் ஆடப்பட்டு வந்தது. இது சூதாட்ட முறையில் பணம், விலையுர்ந்த பொருள்கள் ஆகியவற்றைப் பணயமாக வைத்து ஆடப்பட்டு வந்தது. பண்டைய கிரேக்க, உரோமானிய, சுமேரிய வரலாற்றுக் குறிப்புகளில் பகடை பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. பகடை ஆட்டத்தில் ஏமாற்றும் முறைகளும் விளக்கப்பட்டுள்ளன. சிறுவர்களின் புற விளையாட்டுகளில் கோலியும் ஒன்றாகும். இது உலகெங்கிலும் பல்வேறு பெயர்களில் விளையாடப்படுகிறது. தமிழ்நாட்டில் சிறுமியர் விளையாடும் பாண்டி ஆட்டம், வேறு பல நாடுகளில் ஆப்காட்ச்சு (Hopscotch) என்று வழங்கி வந்துள்ளது. இவ்விளையாட்டு எப்பொழுது எந்த நாட்டில் முதன்முதலில் விளையாடப்பட்டது என்பது எவருக்கும் தெரியாது. இவ்விளையாட்டில் பலவகைகள் உள்ளன. எல்லாவற்றிலும் ஒரு சிறிய தட்டையான கல், தரையில் வரையப்பட்டுள்ள கட்டங்களில் எறியப்பட்டு, ஆட்டக்காரர்கள் ஒற்றைக் காலில் அதன் மீது குதித்து, அதனை வேறு கட்டங்களுக்குத் தள்ளி விளையாடுவர். இது சிறுமியர்களின் மனமகிழ் ஆட்டம் ஆகும். சிறுமியர் வளையம் எறியும் ஆட்டங்களும், பல பெயர்களில் விளையாடப்பட்டு வருகின்றன.

சட்டில்காக்கு (Shuttle Cock) என்னும் ஆட்டம் பண்டைய சீன சப்பானிய நாடுகளில் விளையாடப்-