உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆண்டாள்

358

ஆண்டாள்

தாரால் வழங்கப்பட்டாள். இவர் காலம் கி.பி.8-ஆம் நூற்றாண்டாகும்.

இறைவனுக்கு மலர் மாலை கட்டித் தொண்டாற்றும் தன் வளர்ப்புத் தந்தையாகிய பெரியாழ்வாரிடம் இளமையிலேயே கண்ணன் கதைகளைக் கேட்டு அக்கண்ணனிடம் மையல் கொண்டாள். அவனையே கணவனாகப் பெறவேண்டும் என்றும் ஆசைப்பட்டாள். இவள் ஞானத்திலும் பக்தியிலும் உயர்ந்தாள்.

ஆண்டாள்

இறைவனை நாயகனாகவும் தம்மை நாயகியாகவும் பாவனை செய்து கொண்டு ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை விட, இயற்கையிலேயே பெண்ணான ஆண்டாளுடைய தலைவி நிலைப் பாசுரங்கள் மிக்க சிறப்புடையனவாகத் திதழ்கின்றன.

பெரியாழ்வார் பெருமாளுக்குக் கட்டி வைத்த மாலையைத் தான் அணிந்து தன் அழகு பார்த்து மகிழ்வாள். இப்படிப் பல நாள் நடந்து வர ஒரு நாள் இவள் செயலைக் கண்டுவிட்ட ஆழ்வார், ஆண்டாளைக் கடிந்து கொண்டார். புதிய மலர்களைப் பறித்து வேறு மாலை கட்டி இறைவனுக்கு அளித்து மன்னிப்பும் கேட்டார். ஆனால், இறைவன் அன்றிரவு அவரது கனவில் தோன்றிக் கோதை சூடிக்களைந்த மாலையின் மணத்தையே தாம் பெரிதும் விரும்புவதாகக் கூறினார். இதைக் கேட்ட பெரியாழ்வார் கண்விழித்துத் திகைத்துக் கோதையின் பெருமையை உணர்ந்து நெஞ்சுருகினார். கோதை இறைவனையே ஆண்டு விட்டதால் அவளை ஆண்டாள் என்று அழைத்தார். அன்று தொட்டுக் கோதை, ஆண்டாள் என்னும் பெயர் பெற்றாள்.

ஆண்டாள் சூடிக்களைந்த மாலையை இறைவன் மிக விரும்பி ஏற்றதனால் ‘சூடிக் கொடுத்த சுடர்க் கொடி’ யானாள், நற்றமிழால், நல் இசையால் இறைவனைப் பாடிப் பரவியதால் பாடவல்ல நாச்சியாரானாள். ஆண்டாளுக்குக் கண்ணனிடம் பக்திக் காதல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தது. பருவம் வந்தது, கண்ணனையே மணாளனாக நினைந்து வாழ்ந்தாள். இந்நிலையில் அவள் பாடிய பாடல்களே ‘திருப்பாவை’, ‘நாச்சியார் திருமொழி’ என்னும் இரு திவ்வியப் பிரபந்தங்களாக அமைந்துள்ளன. இவற்றுள் திருப்பாவை, தைந் நீராடல், சுனையாடல் என்னும் பழந்தமிழர் மரபை ஒட்டி எழுந்த பிரபந்தமாகும். நாச்சியார் திருமொழி, பெரும்பாலும் அக இலக்கியப் பாடல்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குவது. இப்பிரபந்தங்களில், பல திவ்விய தேசங்களில் பல பெயர்களில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் கண்ணனாகிய பரமன் திருவரங்க நாதனே என்று உணர்ந்து அவனுடைய அழகுகளை வருணித்துப் பாடியுள்ளாள். பக்திக் காதல் முற்றிய நிலையில் அவள் திருவரங்க நாதனின் திருவடிகளில் சேர்ந்து, அவன் கால் பிடிக்கும் தொண்டை விரும்பி ஏற்றுக்கொண்டாள் என்று வைணவக் குருபரம்பரை நூல்கள் கூறுகின்றன.

ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழியும் திருப்பாவையும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்துள் தொகுக்கப்பட்டுள்ளன. திருப்பாவை வேதம், உபதிடதங்கள் ஆகியவற்றின் சாரம் என்று சான்றோர் போற்றியுள்ளனர். இதனை “வேதமனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்” என்னும் சொற்றொடராலும் அறியலாம். இத்திருப்பாவையில் விரிகிற காட்சிகள், எழுகிற ஒலிகள் எல்லாம் மிகச் சிறப்பாக, இயற்கையாகவே கூறப்பட்டுள்ளன. துயிலெழும் பறவைகளின் ஒலியும், கோயில்களில் விளிக்கப் படும் சங்கின் பேரரவமும், நறுமணமும், மலர்களைக் கூந்தலில் சூடிய ஆய்ப்பாடிப் பெண்டிர் தயிர் கடையும்போது உண்டாகும் துள்ளல் ஓசையும் செவிகளில் மெல்லப் பாய்வது போல் பாடப்பட்டுள்ளன.