உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆண்டுக் குறியீட்டு முறைகள்

365

ஆண்டுக் குறியீட்டு முறைகள்

பாபிலோனிய ஆண்டுக் குறியீட்டு முறை: பாபிலோனிய ஆண்டுக் குறியீட்டு முறை பற்றிய செய்திகள் கி.பி. 3-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் கிடைத்தன. முதன்முதலில் பிறைச் சந்திரன் கண்ணுக்குப் புலப்படும் நாளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டின் தொடக்கத்தைப் பாபிலோனியர் குறித்தனர். பொதுவாகப் பன்னிரண்டு மாதங்களைக் கொண்டு ஆண்டு குறிப்பிடப்படுகிறது என்றாலும், பருவங்களைக் குறிப்பதில் சீரான நிலையை ஏற்படுத்தப் பதின்மூன்றாம் மாதமொன்றும் இடையிடையே அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில், வானவியல் போக்குகளைக் குறிப்பதற்காகவும், கணக்கிடும் முறையில் வசதிக்காகவும் 365 நாட்களைக் கொண்ட நிலையான ஆண்டு பின்பற்றப்பட்டது. இந்நிலையில், கி.மு. 529-இல், 99 நிலவின் மாற்றங்களைக் கொண்ட எட்டாண்டுச் சுழற்சியை அறிமுகப்படுத்துவதனால் மாதங்களின் மிகுதியை ஒழுங்குபடுத்தும் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டது. பின்னர்க் கி.மு. 383-இல் 235 நிலவு மாற்றங்களுக்கு இணையான பத்தொன்பது ஆண்டுகளைக் கொண்டு கணக்கிடும் முறை சால்டிய நகர வானவியலார் ‘கிடினு’ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. மிடான் என்பவரால் கி.மு. 432-இல் ஏதன்சு நகரத்தில் பத்தொன்பது ஆண்டுகளைக் கொண்ட சுழற்சி நடைமுறைப் படுத்தப்பட்டிருந்தாலும், கிடினுவால் அறிமுகப்படுத்தப்பட்ட பத்தொன்பது ஆண்டுகளைக் கொண்டு கணக்கிடும் முறையே பாபிலோனிய ஆண்டுக் குறியீட்டு முறையின் அடுத்தடுத்த நிலைகளிலெல்லாம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

கிரேக்க ஆண்டுக் குறியீட்டு முறை: பாபிலோனிய ஆண்டுக் குறியீட்டு முறை போலவே கிரேக்க ஆண்டுக் குறியீட்டு முறையும் நிலவினை அடிப்படையாகக் கொண்டது. இம்முறையில், சூரியனின் மறைவிற்குப் பின் அந்தி வானில் முதன்முதலில் பிறைச் சந்திரன் தோன்றுவதைக் கொண்டு ஒவ்வொரு மாதத்தின் தொடக்கமும் முடிவு செய்யப்பட்டது. மேலும், பொதுவாக ஒவ்வொரு மாதமும் 29 அல்லது 30 நாட்களைக் கொண்டதாகக் கணக்கிடப்பட்டது.

குறிப்பிட்ட பருவங்களின் தொடர்பாகப் பண்டிகைகள் கொண்டாடப்பட்டன. பன்னிரண்டு மாதங்களைக் கொண்ட இந்த ஆண்டானது, பருவங்களை அடிப்படையாகக் கொண்ட ஆண்டுக்குச் சற்றுக் குறைவானதாக அமைந்திருந்ததனால் பதின்மூன்றாம் மாதம் ஒன்றும் கணக்கிடப்பட வேண்டியது இன்றியமையாததாயிற்று. கிரேக்க ஆண்டின் பண்டைப் பாகுபாடு வசந்தம், கோடை, குளிர் காலங்கள் என மூன்று பருவங்களாக அமைந்திருந்தது. குளிர் காலம் பிளீயட்சின் மறைவில் தொடங்கி வசந்த காலத்தில் முடிவடைய, வசந்த காலம் பிளீயட்சின் உதயம் வரை தொடர்கிறது. கோடைக் காலமோ, ஆர்க்டியூனசின் உதயம் வரை தொடர்கிறது.

இந்தக் கோடைக் காலத்தினைத் தொடர்ந்து இலையுதிர் காலம் பிளீயட்சின் அடுத்த மறைவு வரை ஆண்டின் எஞ்சிய காலம் முழுவதும் தொடர்கிறது. இவ்வாறு, பருவங்களின் அடிப்படையில் ஆண்டுக் குறியீட்டு முறையைக் கொண்டிருந்த கிரேக்கர், கிறித்தவ சமயத்தைத் தழுவியது முதல் சூலியன் ஆண்டுக் குறியீட்டு முறையைப் பின்பற்றத் தொடங்கினர்.

யூத ஆண்டுக் குறியீட்டு முறை: பண்டை யூதரின் ஆண்டுக் குறியீட்டு முறை நிலவின் அடிப்படையிலானது. நாள், அந்தியில் தொடங்குவதாகவும். சூரியன் மறைவுக்குப் பின் பிறைச் சந்திரன் முதன் முதலில் வானில் தோன்றும் பொழுது மாதம் தொடங்குவதாகவும் கணக்கிடப்பட்டது. ஏழு நாட்களைக் கொண்டதாக வாரம் கணக்கிடப்பட லேண்டும் என்ற நியதியே பண்டை யூதர் ஆண்டுக் குறியீட்டு முறையின் சிறப்புக் கூறு எனலாம். ஏனெனில், ஏழு நாட்களைக் கொண்ட வாரம் தெய்வத் தன்மை கொண்டது எனவும், இதனால், அனைவரும் உலகம் படைக்கப்பட்ட காலத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றனர் எனவும் யூதர் நம்பியதால், இத்தகைய வாரத்தின் தொடர்ச்சியைத் துண்டிக்கும் எந்த ஆண்டுக் குறியீட்டு முறையையும் வன்மையாக எதிர்த்தனர். ‘மொசைக்குச் சட்டம்’, இசுரேலியர் எகிப்திலிருந்து வெளியேறிய ‘அபீப்’ மாதத்தை ஆண்டின் முதல் மாதமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றது. இடைட்டசினால் எருசலேம் அழிக்கப்பட, யூதர் எல்லொரும் அதனைவீட்டு வெளியேறியதற்குப் பிறகு நிலையான விதிகளின் அடிப்படையில் உருவான ஆண்டுக் குறியீட்டு முறை, பண்டை ஆண்டுக் குறியீட்டு முறையின் இடத்தைப் பிடித்துக் கொண்டது. இந்தப் புதிய ஆண்டுக் குறியீட்டு முறை பாபிலோனிய கிடினுவின் பத்தொன்பது ஆண்டுகளைக் கொண்ட சுழற்சியின் அடிப்படையிலானது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

யூத ஆண்டுக் குறியீட்டு முறையில் மாதங்கள் கொண்டவை முழுமையாக 30 நாட்கள் கொண்டவை அல்ல; 29 நாட்களே கொண்டன எஞ்சியிருக்கும் நாட்கள் அரசு அதிகாரிகளின் ஆணைப்படி பல ஆண்டுகளுக்கு ஒருமுறை சேர்க்கப்பட்டுவிடும். பிற்காலத்தில் இம்முறையை மாற்றியமைத்தனர். 19 ஆண்டு-