உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆண்டுக் குறியீட்டு முறைகள்

366

ஆண்டுக் குறியீட்டு முறைகள்

காலத்தினைக் கொண்ட ஒரு சுழற்சியில் எஞ்சியுள்ள நாட்கள் 3, 6, 8, 11, 14, 17, 19-ஆம் ஆண்டுகளின் 6-ஆம் மாதத்தில் சேர்க்கப்பட்டன. பொதுவாக ஓர் ஆண்டு 353, 354 அல்லது 355 நாட்களைக் கொண்டிருக்கும். எஞ்சியுள்ள நாட்களைச் சேர்க்கும் ஆண்டுகள் 383, 384 அல்லது 385 நாட்களைக் கொண்டிருக்கும். இவர்கள் முறையில் மேலும் சில சிக்கல்கள் காணப்படுகின்றன. ஞாயிறு, புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் புத்தாண்டு பிறப்பதில்லை. இக்கிழமைகளில் பிறப்பதாயின் இதற்கு முந்தைய நாளின் சூரிய மறைவின்பொழுது பிறப்பதாகக் கணக்கிடப்படும்.

சீன ஆண்டுக் குறியீட்டு முறை: பண்டைய சீன முறை சூரிய சந்திரனின் அடிப்படையிலானதாகும். இவர்கள் ஆண்டு 12 சந்திர மாதங்களைக் கொண்டதாகும். சூரிய ஆண்டினை உடனொத்து அமைக்க 13-ஆம் மாதத்தை ஓர் ஆண்டில் சேர்ப்பர். இவ்வாண்டிற்கு முழுவருடமெனப் (Full Year) பெயரிட்டனர். இவர்களின் புதுவருடம் சனவரி 20-ஆம் நாள் முதல் பிப்ரவரி 19-ஆம் நாளுக்குள் பிறக்கும் எனக் கணக்கிட்டனர்.

மாயா ஆண்டுக் குறியீட்டுமுறை: மாயா ஆண்டுக் குறியீட்டு முறை கி.பி. 3-ஆம் நூற்றாண்டிலிருந்து 6-ஆம் நூற்றாண்டு வரையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது. மாயா ஆண்டுக் குறியீட்டு முறையில் யூனல் (Unial) என்று அழைக்கப்படும் இவர்களின் மாதத்திற்கு 20 நாட்களேயாகும். 18 யூனல் மாதங்கள் அல்லது 360 நாட்களைக் கொண்ட ஆண்டு ‘துன்’ (Tun) எனப் பெயரிடப்பட்டது.

தொடர்ச்சியான 20 ஆண்டுகளைக் ‘கட்டுன்’ (Katun) என்று குறிப்பிடுகின்றனர். இதனைத் தவிர்த்து இரண்டாவதாக, ஓர் ஆண்டில் 5 நாட்களைச் சேர்த்து 365 நாட்களாக வரையறை செய்கின்றனர். ‘சோல்கின்’ (Tzolkin) எனப்படும் மூன்றாம் அமைப்பில் 20 நாட்களைக் கொண்ட 13 பிரிவுகளாகப் பகுத்து 260 நாட்கள் கொண்ட காலத்தைக் கணக்கிட்டு மூன்று வகையான கால முறையினையும் கையாண்டனர்.

மெக்சிகோ (அசுதெக்கு) ஆண்டுக் குறியீட்டு முறை: மாயா முறையினை ஒத்துக் காணப்பட்ட இவர்கள் முறை காலப் போக்கில் வளர்ந்து 365 நாட்களையும் 18 மாதங்களையும் கொண்டிருந்தது. ஒவ்வொரு மாதமும் 20 நாட்களைக் கொண்டதாகும். எஞ்சியுள்ள 5 நாட்கள் நெமோன்டமி (Nemontemi) என்று கூறப்படுகிறது. இவை சிறப்பற்ற நாட்களாகவும் பலனைக் கொடுக்கக் கூடியதல்லாதன என்றும் நம்பப்பட்டன. மக்கள் 584 நாட்களைக் கொண்ட வெள்ளியின் பருவம் முடியும் போது பிறக்கும் ஆண்டினைச் சிறப்பாகக் கொண்டாடுவர். இது எட்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இரண்டு 52 ஆண்டுகளைக் கொண்ட ஒவ்வொரு சுழற்சியும் வெள்ளிக் கிரகமும் ஒன்று சேரும்போது ‘ஒரு பழைய காலத்தை’ (One Old Age) ஏற்படுத்துகிறது. இம்முறை மாயா ஆண்டுக் குறியீட்டு முறையிலும் காணப்பட்டது.

மெக்சிகோவினர் உலகம் ஒரு காலத்தில் அழியும் எனவும் அதன் பின்னர்ப் புது உலகம் உருவாக்கப்படும் எனவும் நம்பினர்.

உரோமனிய ஆண்டுக் குறியீட்டு முறை: உரோமாபுரியைத் தோற்றுவித்த உரோமுலசு, 304 நாட்களையும், பத்து மாதங்களையும் கொண்ட ஆண்டை ஏற்படுத்தினார். நாகரிக உலகம் முழுவதும் இன்று பின்பற்றப்பட்டு வரும் ஆண்டுக் குறியீட்டு முறை இந்த ஆண்டுக் குறியீட்டு முறையைப் பின்பற்றியதே என்று வரலாறு கூறுகிறது. ‘மாசு’ என்ற உரோமுலசின் தந்தைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் ‘மார்ச்சு’ எனும் பெயரும், ஆமியன் இனத்தின் முன்னோராகிய ‘அசுப்ரோடைட்டு’ அல்லது ‘வீனசின்’ பெயர் அடிப்படையில் ‘ஏப்ரல்’ என்னும் பெயரும், மூத்தோர் எனப் பொருள்படும் ‘மெசோராசு’ என்பதன் அடிப்படையில் ‘மே’ என்னும் பெயரும். இளையோர் எனப்பொருள்படும் ‘சூனியோரசு’ என்பதன் அடிப்படையில் ‘சூன்’ என்னும் பெயரும் மாதங்களுக்கு வழங்கப்பட்டன என்னும் செய்தியினை இந்த ஆண்டுக் குறியீட்டு முறையால் அறியலாம்.

சூலியசு சீசர் கி.மு. 63-இல் மாமன்னராக அரியணை ஏறிய பொழுது ஆண்டுக் குறியீட்டு முறையில் நேரிடும் சீரில்லாப் போக்குகளைக் கவனிக்காமல் விட்டதால் கி.மு. 47-இல் மாதங்கள் அவற்றி்ற்குரிய சரியான பருவங்களிலிருந்து தள்ளப்பட தவறான காலங்களில் பல்வேறு பண்டிகைகளும் கொண்டாடப்பட்டன. இதனால், ஆண்டுக் குறியீட்டு முறையில் சீர்திருத்தம் செய்ய விரும்பிய சூலியசு சீசர் அலெக்சாண்டிரியாவைச் சார்ந்த சோன்சிசீன்சு என்ற வானவியலாரை அழைத்து அறிவுரையும், திருத்தம் செய்வதில் உதவியும் கேட்டார். இக்காலக்கட்டமே உரோமானிய வரலாற்றில் ‘குழப்பமான ஆண்டு’ என்று குறிக்கப்படுகிறது. இவ்வாண்டு 445 நாட்களைக் கொண்டிருந்தது. சோன்சிசீன்சின் அறிவுரைப்படி ஆண்டுக்கு 365¼ நாட்கள் என்பது முடிவு செய்யப்பட்டது. இதை நடைமுறைப்படுத்த ஆண்டுக்கு 365 நாட்கள் எனவும், ஒவ்வொரு நான்காம் ஆண்டுடனும் ஒரு கூடுதல் நாளைச் சேர்ப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.