உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆண்டுக் குறியீட்டு முறைகள்

367

ஆண்டுக் குறியீட்டு முறைகள்

கிரிகோரியன் ஆண்டுக் குறியீட்டு முறை: சூலியன் ஆண்டுக் குறியீட்டு முறையில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு 13-ஆம் போப்பு கிரிகோரி என்பவர் கி.பி. 1582-இல் ஒரு புதுவகை ஆண்டுக் குறியீட்டு முறையை நடைமுறைப் படுத்தினார். அது பின்னாளில் கிரிகோரியன் ஆண்டுக் குறியீட்டு முறை என அழைக்கப்பட்டது. இத்தாலி, இசுபெயின், போர்ச்சுகல், பிரான்சு, போலந்து ஆகிய நாடுகளில் இம்முறை உடனடியாகப் பின்பற்றப்பட்டது. இங்கிலாந்தில் கி.பி. 1750-இல் கொண்டு வரப்பட்ட ‘ஆண்டுக் குறியீட்டுப் புதுமுறைச் சட்டம்’ என்பதன் வழியாக, ‘கிரிகோரியன் ஆண்டுக் குறியீட்டு முறை’ கி.பி. 1752-இல் சட்ட முறையில் நடைமுறைக்கு வந்தது. அதே சமயத்தில், புத்தாண்டு நாளும் மார்ச்சு 25-ஆம் நாளிலிருந்து சனவரி முதல்நாளுக்கு மாற்றப்பட்டது. சனவரி 1 புத்தாண்டுநாள் என்பதனை முதலில் நடைமுறைப்படுத்தியது இசுகாட்லாந்து (Scotland) நாடே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டுக் குறியீட்டு முறையில், ஒரு நடைமுறை ஆண்டு 365 நாட்கள் கொண்டது என்பதும், ஒவ்வொரு நான்காம் ஆண்டுடனும் ஒரு கூடுதல் நாளைச் சேர்ப்பது என்பதும் முடிவு செய்யப்பட்டன. இதுவே ‘இலீப்பு ஆண்டு’ என்று கொள்ளப்பட்டு, பிப்பிரவரி மாதத்தில் அந்த ஒரு நாள் கூட்டப்பட்டது. மற்றை ஆண்டுகள் 365 நாட்கள் கொண்டவையாகக் கணக்கிடப்பட்டன. சனவரி முதல் ஒன்றுவிட்டு ஒரு மாதத்திற்கு 31 நாட்களும், மற்றை மாதங்களுக்கு முறைவே 30 நாட்களும், பிப்பிரவரிக்கு 28 நாட்களுமாக ஆண்டுக்கு 365 நாட்கள் நிறுவப்பட்டன. நான்காண்டுகளுக்கொருமுறை பிப்பிரவரிக்கு 29 நாட்கள் அமையும் என்பது முடிவு செய்யப்பட்டது.

இசுலாமியர் ஆண்டுக் குறியீட்டு முறை: சமயத் தொடர்பானவற்றிற்காக இசுலாமியர் பின்பற்றும் ஆண்டுக் குறியீட்டுமுறை நிலவின் அடிப்படையிலானது. முதல் பிறைச் சந்திரன் அந்தி வானில் தோன்றும் காலத்தினைக் கொண்டு ஆண்டின் தொடக்கம் முடிவு செய்யப்படுகிறது. ஆண்டுக்குப் பன்னிரண்டு மாதங்கள் கணக்கிடப்பட்டன. மக்காவிலிருந்து மதினாவுக்கு கி.பி. 622 சூலை 15 ஆம் நாள் வியாழனன்று முகமது நபி சென்ற முதல் மாதத்திலிருந்து இந்த ஆண்டுக் குறியீட்டு முறை தொடங்குகிறது. இது இதிராக்களில் (Hegira) ஒன்று என அழைக்கப்படுகிறது. இத்தகைய இசுலாமிய ஆண்டுக் குறியீட்டு முறையில் புத்தாண்டு 32½ ஆண்டுகளுக்கு ஒருமுறை பருவங்களின் வழியே பின்னோக்கிச் செல்கிறது என்பது கணக்கிடப்பட்டுள்ளது.

சூலியன் காலம் “சுகேலிசர்” என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட சூலியன் முறை பல்வேறு வானவியல் காரணங்களின் அடிப்படையில் மிகப்பயனுடையதென உணரப்படுகிறது. நிலவின் பத்தொன்பது ஆண்டுக்காலச் சுழற்சியின் தொடர்ச்சியான பயன்பாட்டினால் இந்தச் சூலியன் காலம் உருவாக்கப்பட்டுள்ளது. சூலியன் நாள் நடுப்பகலில் தொடங்குவதாக இம்முறை குறிக்கிறது.

பொதுவாக ஆண்டுக் குறியீட்டு முறை ஒவ்வோர் ஆண்டும் மாற்றம் பெறுவதனாலும், முந்தைய அல்லது வரப்போகும் ஆண்டிலிருந்து வேறுபடுவதனாலும் ஒப்பீடு செய்வது இயலாததாகிறது. வரும் ஆண்டு அல்லது கடந்த ஆண்டின் கிழமை, நாட்கள் ஆகியன ஒத்துப் போகாதிருப்பதனால் அடுத்தடுத்த இரண்டாண்டுகள் அல்லது மூன்றாண்டுகள் ஒன்றாக இருப்பதில்லை. இச்சூழ்நிலை பதினான்கு வகை ஆண்டுகளை உருவாக்குகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஏழு நாட்களைக் கொண்ட 52 வாரங்களையும் ஒரு கூடுதல் நாளையும், ‘இலீப்பு ஆண்டு’ இரண்டு கூடுதல் நாட்களையும் கொண்டிரும்பதனாலுமே இக்குழப்பம் உண்டாகிறது. மேலும், இந்த ஆண்டுக் குறியீட்டு முறை 28 வகை மாதங்களைக் கொண்டிருப்பது மற்றொரு காரணம். ஏனென்றால், இந்த மாதங்கள் 28,29,30 அல்லது 31 நாட்களைக் கொண்டிருப்பதுடன், ஏழு நாட்களில் ஏதேனும் ஒரு கிழமையில் தொடங்குவதனால் ஒரு நிலையான குழப்பம் இருந்து கொண்டேயிருக்கிறது. இக்காரணங்களால் உலக ஆண்டுக் குறியீட்டு முறை சீரான ஒன்றாகவும் செலவு மிக்கதாகவும் கருதப்படுகிறது.

சூலியசு சீசரால் உருவாக்கப்பட்டு, மாவீரன் கான்சுடான்டைனால் சீர்திருத்தம் செய்யப்பட்டுப் பிறகு பதின்மூன்றாம் போப்பு கிரிகோரியினால் மீண்டும் திருத்தம் செய்யப்பட்ட ஆண்டுக் குறியீட்டு முறையையே இக்காலத்தில் பின்பற்றி வருகின்றனர். கத்தோலிக்கச் சமயகுருமாரான அப்பெமார்க்கோ மாசுடிரோபிலி என்பவரால் கி.பி. 1834 இல் உலக ஆண்டுக் குறியீட்டு முறை உருவாக்கப்பாட்டது. இம்முறையில், ஆண்டுக்கு 364 நாட்களும், ஆண்டு முடிவில் 365-ஆம் நாள் வார இறுதியின் கூடுதல் நாளாகவும் சேர்க்கப்பட்டது. இதற்குப் பிறகு ஒவ்வொரு புத்தாண்டும் தவறாமல் சனவரி 1 ஞாயிற்றுக் கிழமையில் அமைந்து காலத்தைக் கணக்கிடுவதில் நம்பிக்கைக்குரிய, சீரான கருவியாக. ஆண்டுக் குறியீட்டு முறையில் விளங்கத் தொடங்கியது. இதன் விளைவாக, மறந்து வரும் கிரிகோரியன் ஆண்டுக் குறியீட்டு முறையின் குறைகள் நீக்கப்பட்டுப் புதிய முறையொன்று கிடைத்துள்ளது எனலாம்.