ஆத்திகம்
380
ஆத்திகம்
யுறுதிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 60-ஆம் பிரிவு, குடியரசுத் தலைவரின் ஆணையுறுதி அல்லது உறுதியுரையைப் பற்றியதாகும், அந்தப் பிரிவின்படி குடியரசுத் தலைவர் ஒவ்வொருவரும், குடியரசுத் தலைவராகச் செயற்படும் அல்லது குடியரசுத் தலைவரின் அலுவல்களை ஆற்றிவரும் ஒவ்வொருவரும் பதவியேற்பதற்கு முன்னர் இந்தியாவில் தலைமை நீதிபதி முன்னிலையில் அல்லது உச்ச நீதிமன்றத்தில் அப்போது பொறுப்பில் உள்ள மிக முதுநிலை நீதிபதி முன்னிலையில் ஓர் ஆணையுறுதியை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த ஆணையுறுதி கீழ்க்காணுமாறு உள்ளது.
- “அ’ ஆகிய நான் உண்மையோடு இந்தியக் குடியரசுத் தலைவர் பதவியை நிருவகிப்பேன் (அல்லது குடியரசுத் தலைவரின் அலுவல்களை ஆற்றுவேன்) என்றும், என்னுடைய முழுத் திறமையுடன் இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் பேணுவேன், ஆதரிப்பேன் மற்றும் பாதுகாப்பேன் என்றும், இந்திய மக்களின் சேவைக்கும் அவர்களின் நல்வாழ்வுக்கும் என்னையே நான் உரிமைப் படுத்துவேன் என்றும் கடவுளின் பேரால் ஆணையுறுதி செய்கிறேன்; பயபக்தியுடன் உறுதி கூறுகிறேன்”.
இதுபோன்று துணைக் குடியரசுத் தலைவரும் இந்த ஆணைறுதியைப் பதவியேற்பதற்கு முன்னர் எடுத்தாக வேண்டும் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் 99 ஆம் பிரிவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆணையுறுதி அல்லது உறுதியுரையைப் பற்றிக் கூறுகிறது. அப்பிரிவின்படி ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தமது பதவியில் பொறுப்பு ஏற்பதற்கு முன்னர் இந்த ஆணையுறுதியைக் குடியரசுத் தலைவரின் முன்னிலையில் அல்லது அதன் பொருட்டு அவரால் நியமிக்கப்படும் ஒருவர் முன்னிலையில் செய்து, கையொப்பமிடுதல் வேண்டும். குறிப்பாக அரசியல் அமைப்புச் சட்டத்தின் 104-ஆம் பிரிவு, நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் இந்த ஆணையுறுதி எடுத்துக்கொள்வதற்கு முன்னரே தமது பதவியில் அமர்ந்தாலும் அல்லது நாடாளுமன்ற நடவடிக்கை எதிலும் கலந்து கொண்டு வாக்களிப்புச் செய்தாலும் தண்டனை வழங்க வகைசெய்கிறது. இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 51-ஆம் பிரிவின் படி, இந்த ஆணையுறுதி, பொது அலுவலர் முன்னிலையிலோ நீதிமன்றத்திலோ, வேறு சூழ்நிலையிலோ ஒன்றை மெய்யெனக் காட்டும் வகையில், சட்டப்படி எடுக்க வேண்டிய முறையான மெய்யுறுதி அல்லது விளம்புறுதியைக் குறிக்கும்.
சீ.சொ.
ஆத்திகம்: ‘அத்தி’ என்னும் வடசொல் ‘உள்ளது’ என்று பொருள்படும். “உள்ளது” என்னும் கொள்கையை ஆத்திகம் என்பர். இந்தியமெய்ப் பொருளியல் வளர்ச்சியில், துறக்கவுலகம் உள்ளது என்றும் இறைவன் உள்ளவன் என்றும் வேதங்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கவை என்றும் ஒப்புக்கொள்கிறவர்கள் ஆத்திகர்கள் என்று கூறப்படுகிறார்கள்.
இந்திய மெய்ப்பொருளியலில், பன்னிரண்டு வகை மெய்ப்பொருள் இயலார் உள்ளனர். அவர்கள் சௌத்திராந்திகர்கள், வைபாசிகர்கள். யோகாச்சாரர் அல்லது அறிவியல்வாதிகள், மாத்யாமிகர்கள், அல்லது இன்மைக் கொள்கையினர் (சூனிய வாதிகள்), உலகியல்வாதிகள், சமணர்கள், நையாயியர்கள், வைசேடிகர்கள், சாங்கியர்கள், யோகர்கள், மீமாம்சகர்கள், வேதாந்திகள் எனப்படுவர். இவர்களுள் முதல் நால்வகையினர் பெளத்த சமயத்தவர்.
ஆத்திகவாதிகள் அனைவரும் துறக்கவுலகம், இறையுண்மை, வேதங்களின் ஏற்புடைமை ஆகியவற்றில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு கொள்கைகளையோ மூன்றையுயோ ஏற்றுக்கொள்பவர்கள். இக்கொள்கைகளில் ஏதேனும் ஒன்றை மறுத்தாலும் அவர்களை நாத்திகர் என்பர். அவ்வகையில் முதல் ஆறு மெய்ப்பொருள் காட்சியியலார் நாத்திகர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் முதலில் கூறப்பட்ட முக்கொள்கைகளையும் மறுப்பவர், சாங்கியர்கள், யோகர்கள், மீமாம்சகர்கள் இறைத் தொடர்பின்றி அனைத்தையும் விளக்குவதால் நாத்திகர் எனப்பட்டாலும், இறையுண்மையை நேரடியாக மறுக்காததாலும் இறைவனைப் பற்றிய குறிப்புகள் அவர்களுடைய இலக்கியங்களில் காணப்படுவதாலும் அவர்களும் ஆத்திகர்களே, இவ்வகையில் பின் ஆறு மெய்ப்பொருள் காட்சியியலாரும் ஆத்திகராவர்.
இந்து சமய வளர்ச்சியில், துறக்கவுலக உண்மை வேதகாலத்திலும் இறையுண்மை ஆரணிய காலத்திலும் வேத ஏற்புடைமைக் கொள்கை வேத ஏற்புடைமையை மறுத்து எழுந்த சமண, பௌத்த வளர்ச்சிக் காலத்திலும் தோன்றியிருக்கக்கூடும். பழங்கால மக்கள் தமக்கு உதவிய ஆறு, மலை, காடு ஆகியவற்றைக் கடவுளாகக் கருதி வழிபட்டனர். பின்னர் அவற்றிற்கு வேள்விகளின் மூலம் நன்றி செலுத்தினர். இது வினை நெறிக்கு (கர்ம மார்க்கம்) வித்திட்டது. நாளடைவில் அனைத்து இறைவர்களுக்கும் மேலாக ஒரு பரம்பொருள் உண்டு என்று கருதி அதற்குத் தொண்டு செய்து வழிப்பட்டனர். இது பக்தி நெறிக்கு அடிகோலியது. இறுதியில் ‘அனைத்துமே ஒரே பரம்பொருள்’ என்ற கொள்கை மலர்ந்தது. இதனை அறிவு நெறி அல்லது ஞானநெறி என்பர், பொதுவாகச் சமயம் சார்ந்திருக்கும் அனைவரையும் ஆத்திகர் என்று கூறலாம்.
பி.ஆர்.ந.