ஆதாயம்
401
ஆதாயம்
இடர்ப்பாடும் ஆதாயமும்: ஒரு பொருளாதார நடவடிக்கையில் இருக்கும் இடர்ப்பாட்டுக்கும் அதிலிருந்து கிடைக்கும் ஆதாயத்திற்கும் நேரடியாகத் தொடர்பு இருக்கிறது. இடர்ப்பாடு மிகுதியாக இருந்தால் ஆதாயம் மிகையான அளவில் கிடைக்கும். இடர்ப்பாடு குறைவாக இருந்தால் ஆதாயமும் குறைவாக இருக்கும். இதனை ஓர் எடுத்துக்காட்டின் மூலம் விளக்கலாம். ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு உணவு அளிக்கும் ஓர் உணவு விடுதி நடத்துகிறார் என்று கொள்ளும்போது அவருக்கு எத்தனை பேர் வந்து உண்பார்கள் என்பது திட்டவட்டமாகத் தெரியும். ஆதலால், தேவையான அளவு உணவு சமைத்து வைப்பார். இப்பணியில் இடர்ப்பாடு இல்லை; ஆதாயமும் குறைவு. ஆனால், ஒரு நகரின் மையப் பகுதியில் உணவு விடுதி நடத்தும் ஒருவருக்கு, எவ்வளவு பேர் உண்ண வருவார்களென்பது தெரியாது. ஆதலால், எதிர்பார்த்துச் சமைக்க வேண்டும். இதில் வாணிக அளவைக் கூட்ட வாய்ப்பு உண்டு. ஆனால், இடர்ப்பாடும் உண்டு இடர்ப்பாட்டை ஏற்கும் அளவிற்கு ஆதாயத்தைப் பெருக்கும் வாய்ப்பு இருப்பதனைக் கவனிக்க வேண்டும்.
அமைப்பின் அளவும் ஆதாயமும்: ஒரு பொருளாதார நிறுவனத்தின் அமைப்பிற்கும் அது பெறும் ஆதாயத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. சின்னஞ்சிறு நிறுவனங்களில் மொத்த ஆதாயம் குறைவாக இருக்கும். ஏனென்றால், அவற்றின் பொருளாதார நடவடிக்கைகளின் அளவும், இடர் தாங்கும் ஆற்றலும் குறைவாக இருக்கும். பெரிய நிறுவனங்கள் பெருமளவில் உற்பத்தி செய்து விரிவான அங்காடியில் விற்பனை செய்யும். இதன் மூலம் ஆதாயத்தைப் பெருக்கிக் கொள்ள இயலும்.
அங்காடியின் இயல்பும் ஆதாயமும்: தொழில் முயல்வோரின் இடர் தாங்கும் பொறுப்புக்கு மட்டுமன்றி, அங்காடியின் இயல்புக்கும் ஆதாயத்திற்கும் ஓர் இணைப்பு இருக்கிறது. நிறைவுப் போட்டி (Perfect Competition) அங்காடியில் எண்ணற்ற விற்பனையாளர்கள் இருப்பார்கள். எல்லோரும் ஒரே தன்மையான பொருள்களை விற்பனை செய்வார்கள். போட்டி கடுமையாக இருக்கும் பொழுது குறைந்த விலைக்குத்தான் பொருள்கனை விற்பனை செய்ய முடியும். இதனால், மிகுதியாக ஆதாயம் கிடைக்காது. இயல்பாகத் தொழிலில் நிலைத்து நிற்கத் தேவையான அளவிற்குக் குறைந்த அளவில் ஆதாயமும் கிடைக்கும். திறமையான உற்பத்தியாளர்கள் குறுகிய காலத்தில் ஓரளவு ஆதாயம் பெறுவார்கள். ஆனால், நீண்ட காலத்தில் அந்த ஆதாயமும் போட்டியின் காரணமாகக் குறைந்துவிடும்.
அங்காடியில் முற்றுரிமை (Monopoly) நிலையிலிருந்தால் முற்றுரிமையாளர் நிறைய ஆதாயம் பெற முடியும். இந்நிலையில் விற்பனையாளர் ஒருவராக இருப்பார். அவரால் நினைத்த விலைக்கு அவரது உற்பத்திப் பொருளை உயர்த்தி விற்க முடியும். அப்படி விலையை வரையறை செய்யும் பொழுது முற்றுரிமையாளர் தேவையின் இயல்பைக் கவனிக்க வேண்டும். விலையைக் கூட்டுவதன் மூலம் தேவை குறையாதென்று கருதினால் விலையை உயர்த்தி ஆதாயத்தின் அளவைப் பெருக்கலாம்.சில வேளைகளில் விலையைச் சிறிது குறைத்து, விற்பனையின் அளவை மிகுதிப்படுத்தியும் ஆதாயத்தின் அளவைக் கூட்டலாம். முற்றுரிமையின் கட்டுக் கோப்பிற்கேற்ப ஆதாயம் அமையும்.
முற்றுரிமைக்கும் நிறைவுப் போட்டிக்கும் இடைப்பட்ட நிலையே ‘நிறைகுறைப் போட்டி’ (Imperfect Competition) எனப்படுவது. இந்நிலையில் உற்பத்திச் செலவைக் குறைக்கவும், விளம்பரம் போன்ற முறைகளின் மூலம் மிகுதியாக விற்கவும், முடிந்த விற்பனையாளர்களால் ஓரளவு ஆதாயம் தேடிக் கொள்ளவும் முடியும். அதே நேரத்தில் திறமை குறைந்த தொழில் முயல்வோர்கள் சிலர் ஆதாயம் இல்லாமலேயே தொழிலை நடத்திக் கொண்டிருப்பார்கள்.
பொருளியல் அறிஞர்கள் ஆதாயம் பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார்கள். எதற்காக ஆதாயம் என்னும் வருவாய் கிடைக்கிறதென்றும், எப்படி ஆதாயம் வரையறுக்கப் படுகிறதென்றும் விளக்கிக் கூறியுள்ளார்கள். ஆனால், எல்லோரும் ஒப்புக்கொள்ளும் வகையில் அவர்களால் ஒரு தனிக் கோட்பாட்டை உருவாக்க முடியவில்லை. இருப்பினும், அவர்களின் கோட்பாடுகள், ஆதாயத்தைப் பல கோணங்களில் புரிந்துகொள்ளத் துணை செய்கின்றன. ஆதலால், ஆதாயம் பற்றிய கோட்பாடுகளில் குறிப்பிடத்தக்கவற்றை இங்கே விளக்கிக் கூறலாம்.
1. ஆதாயத்தின் வாரக் கோட்பாடு: அமெரிக்கப் பொருளியலறிஞரான பிரான்சிசு வர்க்கர் (Francis Walker) என்பவர் நிலத்திற்குக் கொடுக்கிற வாரம் போன்று ஆதாயமும் இருப்பதாகக் கருதி முதன் முதலில் ஆதாயத்தின் வாரக் கோட்பாட்டை (Rent Theory of Profit) உருவாக்கினார். நாசு வில்லியம் சீனியர் (Nassan William Senior) என்பவரும் சே. எசு. மில் (J.S. Mill) என்பவரும் இக்கோட்பாட்டின் மூலக் கருத்துகளை வழங்கியுள்ளனர்.
நிலத்தில் மூல வளம் இருக்கிறது. ஆதலால், நிலத்தில் ஒருவர் உழைத்துப் பாடுபடும்பொழுது அவர் உழைப்பினால் கிடைப்பதைவிட நிலத்தில் மிகுதியாக விளைச்சல் கிடைக்கிறது. இதனை நிலத்-