ஆதிக்குடிகள்
423
ஆதிக்குடிகள்
ளது. இருபாலாருக்கும் பொதுவாகவோ தனித்தனியாகவோ அமைந்து செயற்படும் இளையவர் கூடங்கள் ஒருவன் வாழ்நாளின் முற்பகுதியில் கற்க வேண்டியவற்றைக் கற்பிக்கும் கல்விக் கூடமாகவும் பொருளாதாரச் செயற்பாட்டினைக் கற்பிக்குமிடமாகவும், மந்திரத்தைத் தன்னுட்கொண்ட மதத்தினைப் பயிற்றுவிக்கும் கூடமாகவும், பண்பாட்டின் சிறப்புக் கூறுகளைச் சிதையாமற் காக்குமிடமாகவும், திருமணத்திற்கு முந்தைய நிலையில் உடலுறவுச் செயல்களை அறிமுகப்படுத்துமிடமாகவும், விருந்தினர் தங்குமிடமாகவும் விளங்குகின்றன. ஆதிக்குடிகளில் இதன் சிறப்புத் தன்மை மிகுதியாகக் குறைந்து கொண்டே வருகிறது. காண்க: ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்.
வயது அடிப்படைக் குழுக்கள் (Age Classes or Age Sets) ஆப்பிரிக்காவின் அனைத்துக் குடிகளிலும் காணப்படுகிறது. நண்டி, சுவாசி, துயர், நாயக்யூசா குடிகளில் காணப்படும் இக்குழுக்கள் பருவமடைந்த இளைஞர்களைக் கொண்டு, படைப்பிரிவு இயக்கமாகவும் செயற்படுகின்றன.
ஆதிக்குடிகளில் இரகசியச் சங்கங்கள் (Secret Society) காணப்படுகின்றன. குக் கிளக்சு கிளான், எக்போ, பியூப்லோ இந்தியர்களும், கென்யாவின் கிச்சுயூ ஆகிய குடிகளில் பருவமடைந்த ஆண்களும் இச்சங்கத்தில் உறுப்பினராகிறார்கள். சடங்குகள், மந்திர வித்தை, பருவமடைந்த நிலைக்குண்டான தகுதியை அறிதல் ஆகிய செயற்பாடுகளைக் கொண்ட குழுவாகக் காணப்பட்டாலும் இது படைப் பிரிவுக் குழுவாகவே செயற்படுகிறது. தலைவனின் கண்காணிப்பிலிருந்து செயற்படும் இக்குழு, சமூக நடத்தைகளைக் கட்டுப்படுத்துவதிலும் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு நைசீரியச் சிற்றார்களிலும் காணப்படும் இச்சமூகம் ‘ஓகோ’ என்று சொல்லப்படுகிறது. இவர்களின் நடத்தைகளை ‘எக்பீ’ ஆவி கட்டுப்படுத்துவதாகக் கருதுகின்றனர். வயது, பால், வாழிடம் ஆகியவற்றின் அடிப்படையில் உறுப்பினர்களைச் சேர்த்துக் கொள்கின்றனர். காண்க: இரகசியச் சங்கங்கள்.
ஆதிக்குடிகளின் பெரும்பாலான சமூகங்கள் ஆவி நம்பிக்கையுடைய சமயங்களையும், இயற்கை வழிபாடு, குலக்குறி வழிபாடு, முதியோர் வழிபாடு முதலானவற்றையும் கொண்டுள்ளன.
ஆவியுலக (Animism) நம்பிக்கை கொண்ட ஆதிக்குடிகள், தங்களைச் சுற்றிக் கண்ணுக்குப் புலனாகாத எண்ணற்ற ஆவிகள் அன்றாடச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்றன என்று நம்புகின்றனர். இவ்வாவிகள் அவர்கள் செயல்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கவோ ஊறு விளைவிக்கவோ முடியும் என்பதால், ஒவ்வொரு செயலுக்கும் அச்செயலுக்குத் தொடர்புடைய ஆவியை வழிபடுகின்றனர். இதனால் ஆதிக்குடிகளின் வாழ்வில் சடங்குகள் நிறைந்து காணப்படுகின்றன.
இயற்கையிறந்த ஆற்றலின் நம்பிக்கைக்குட்பட்ட உயிரியம் (Animatism) அடிப்படையிலான சமயமும் ஆதிக்குடிகளிடையே காணப்படுகிறது. உயிர் உள்ளதும் புரிந்து கொள்ள முடியாததும் உருவமற்றதும் இயற்கைக்கப்பாற்பட்டதுமாகிய இவ்வாற்றல், மனித ஆற்றலுக்குட்பட்ட அனைத்துச் செயல்களையும் இயக்கவல்லது என நம்புகின்றனர். இவ்வாற்றல் உலகிலுள்ள உயிர்ப்பொருள், உயிரில்பொருள் எல்லாவற்றிலும் குடிகொண்டிருக்கும். இதன் தோற்றம் மனித உணர்வுகளுக்கப்பால் காணப்பட்டாலும், செயல் திறன் வழியாகவோ மிகத் திறனுள்ள மனிதச் செயல்களின் வழியாகவோ வெளிப்படும் இயல்புடையது என்றும் நம்புகின்றனர். மலனீசியர் இவ்வாற்றலை ‘மனா’ (Mana) என்றும், இந்திய ஆதிக்குடிகள் ‘போங்கா’ என்றும் குறிக்கின்றனர். ஓ (Ho), முண்டாக் குடியினர் போங்காவிற்கு உருவமோ வடிவமோ ஏற்கும் தன்மை கிடையாதென்றும், விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் அது உயிரையும் வளர்ச்சியையும் கொடுக்கக்கூடியது என்னும், மழை, புயல், வெள்ளம், கடுங்குளிர் ஆகியவற்றிற்கும் போங்காவே காரணமென்றும் நம்புகின்றனர். மலனீசியரின் நம்பிக்கையும் இதற்கு இணையானது எனலாம்.
மரம், மலை, ஆறு, சூரியன், சந்திரன் முதலான இயற்கைப் பொருள்களையும் வழிபடும் முறை ஆதிக்குடிகளிடையே காணப்படுகிறது. அசாமின் கேரோக் குடியினர் சூரியனையும் சந்திரனையும், முண்டாக் குடியினர் சூரியனையும் வழிபடுகின்றனர். சரிகட்டாவு, அப்பாச்சி, பகண்டா, அசுதக்குக்குடியினர் இயற்கையிறந்த ஆற்றல்களுடன் மக்களுக்கு மிகுந்த பிணைப்பு இருப்பதாக நம்புகின்றனர். ‘மலை ஆவிகள்’ இவர்களின் முகவராக இருந்து நல்ல தண்ணீரை வழங்குகின்றன என்று நம்புவதால், மலை ஆவிகளுக்குச் சிறப்பான வழிபாடுகளைச் செய்கின்றனர்.
ஆதிக்குடியினர் சிலர் குலக்குறி (Totem) வழிபாட்டினையும் கொண்டிருக்கின்றனர். குலக்குறி பொதுவாகத் தாவரமாகவோ விலங்காகவோ காணப்படுகிறது. இதிலிருந்தே ஆதிக்குடியினர் அல்லது அவர்களின் கால்வழியினர் தோன்றினர் என நம்புவதால் ஒரு சில நிகழ்ச்சிகளைத் தவிர்த்துத் தம் குலக்குறியினைக் கொல்வதோ உண்பதோ கிடையாது. முன்னோர் வழிபாடும் ஆதிக்குடிகளிடையே பரவலாகக் காணப்படுகிறது. தொன்மம் அல்லது