ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள்
430
ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்
பாகுபாட்டுச் சடங்கு முதலானவற்றைத் தேர்ந்தெடுக்கப்பட்ட கால்வழியினருக்கு இளையவர் கூடங்களில் கற்பிக்கின்றனர்.
சில ஆதிக்குடிகளிடையே இளையவர்கூட உறுப்பினர்களின் திருமணங்கள், வீட்டைப் புதுப்பித்தல், அறுவடை ஆகிய பணிகளைச் செய்கின்றனர். பிரேசில் நாட்டு போரொரோ ஆதிக்குடிகளின் பகிட்டோ கூடங்களில் பின்னுதல், தறிநெய்தல், போர்க்கருவிகள் செய்தல் ஆகியவற்றை முதன்மைப் பணிகளாக இளையோர் மேற்கொள்ளுகின்றனர். இளையவர் கூடங்களில் இருக்கும் காலத்தில் எப்பொழுதாவது ஒரு முறையே தம் பெற்றோரைச் சந்திக்கின்றனர் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது, இவ்வகையில் பன்னாட்டு ஆதிக்குடிகளின் இளையவர் கூடங்கள் பல செயற்பாடுகளைக் கொண்டு திகழ்கின்றன என்பதைத் தெளிவாக உணரலாம்.
வளர்ந்து வரும் சமூக அமைப்பில், ஆதிக்குடிகளிடையே இளையவர் கூடங்களின் அமைப்பு, செயற்பாடு ஆகியளை வெகுவாகச் சிதைந்துவிட்டன. பண்பாட்டுத் தொடர்பு, பண்பாட்டுப்பேறு, சமய குருக்களின் பாதிப்பு ஆகியன இவ்வமைப்பின் சிதைவிற்கு முதன்மைக் காரணங்களாக அமைந்தன. சுதந்திரத்திற்குப் பின் இந்திய அரசு ஆதிக்குடிகளின் வளர்ச்சியில் மிகுதியாகக் கவனம் செலுத்தி வருகிறது. இதன் விளைவாக, ஆதிக்குடிகளின் வளர்ச்சிக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சமூக நற்பணித் திட்டங்கள் ஆதிக்குடிகளின் சமூகப் பொருளாதார அமைப்பினை மிகுதியாக மாற்றியமைத்தன. அரசின் பெரிய தொழில் திட்டங்கள் ஆதிக்குடிகளை இடம் பெயரச் செய்தமை மட்டுமன்றி அவர்களிடையே தொழிலைப் புகுத்துதலையும் செய்தன.
பண்பாட்டுத் தொடர்பினாலும், இந்து, கிறித்தவ, புத்த சமய வாழ்க்கை நெறிகளின் பாதிப்பு ஏற்பட்டுக் காலப்போக்கில் அச்சமய நெறிகளையே முழுமையாக ஏற்க முற்பட்டதன் விளைவாகவும் இளையவர் கூடங்களின் செயல் முறைகள் சிதையத் தொடங்கிவிட்டன. கிறித்தவ சமயக் குருக்கள் இந்திய ஆதிக்குடிகளின் சமூக அமைப்பில் மிக்க பாதிப்பினை ஏற்படுத்தி விட்டனர்.
முரியரின் கோட்டுல், பொண்டோ குடிகளின் இங்கரிசென், செலனி-டிங்கோ, முண்டாக் குடிகளின் கித்தி-ஒர கூடங்களின் சிதைவிற்கு எல்வின், இராய் ஆகியோர் கூறும் கருத்துகள் நோக்கத்தக்கவை. இக்குடிகளின் தொன்மக் கதைகளை எழுதும் பொழுது, இளையவர் கூடங்களின் காவலராக இருந்த முதியவர்கள் அக்கூடத்தின் கதவினைத் தாழிடாமலேயே இரவில் வெளியிற் சென்றபோது, இக்கூடத்திலிருந்த இளையவர்களைப் புலி தாக்கிக் காயப்படுத்தியதாகவும் இதிலிருந்தே இல்வமைப்பின் செயற்பாடுகள் சிதையத் தொடங்கிவிட்டன என்றும் தெரிவிக்கின்றனர்.
சீ.ப
துணை நூல்கள்:
Brown, A.R., The Andaman Islanders: A study in Social Anthropology, Cambridge University Press, Cambridge, 1922.
Brown, A.R., The Social Organisation of Australian Tribes, Macmillan and Company, Melbourne, 1931.
Elwin, V., Muria and their Ghotul, Oxford University Press, London, 1947.
Furer-Haimendorf, C.Von., The Morung System of the Konyak Nagas, Journal of Royal Anthropological Institute, Vol. LXVIII, 1938.
Hose, C., Natural Law: A Record from Borneo Macmillan and Company, London, 1926.
Peal, S.E., The Communal Barracks of Primitive Races, Journal of the Royal Asiatic Society, of Bengal, Vol, LXI, 1893.
Shasi, S.S., Night Life of Indian Tribes, Agam Prakasham, Delhi, 1978.
ஆதிக்குடிகளின் ஈமச் சடங்குகள்: மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை பல்வேறு சடங்குகளுக்கு உட்படுகிறான். இறப்பு, மனித வாழ்வின் இறுதிநிலை என்றாலும் அதற்குப் பின்னரும் அவன் வாழ்கிறான் என்றும், மீண்டும் இவ்வுலகில் பிறக்கிறான் என்றும் நம்பும் நம்பிக்கை உலகம் முழுதும் வாழும் மக்களிடையே பரவலாக நிலவி வருகிறது. இதனாலேயே மற்ற நிலைகளில் கடைப்பிடிக்கும் சடங்கு முறைகளைக் காட்டிலும் இறந்தவர்களுக்குச் செய்யும் ஈமச் சடங்குகள் மனித வாழ்வில் முதன்மையான இடத்தைப் பெறுகின்றன. இந்நிலை பழங்குடியினர் முதல் தமக்கென ஒரு நாகரிகத்தைக் கொண்டிருக்கும் பல்வேறு சாதிக் குழுவினர் வரை அனைவரிடமும் காணக் கூடியதாகும்.
இறந்தவர்களுக்குச் செய்யும் ஈமச் சடங்குகளை இறந்தவுடன் செய்யும் சடங்குகள், இடுகாட்டில் செய்யும் சடங்குகள், எரியூட்டிய பின் அல்லது புதைத்த பின் செய்யும் சடங்குகள் என்று மூன்று நிலைகளுள் அடக்கலாம். இம்மூன்று நிலைகளுக்குள் எல்லா ஈமச் சடங்குகளும் அடங்கிவிடுகின்றன. இவற்றுள் குறிப்பாக இடுகாட்டுச் சடங்குகள் காணப்-