உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆமுக்த மாலியதா

525

ஆமுக்த மாலியதா

தக்கதாகும். இது அவரது சமய உணர்வினை நன்கு விளக்குவதாகவும் உள்ளது. இந்நூல் பெரியாழ்வாரின் வரலாற்றையும் கூறுவதால் அவரது வேறு பெயராகிய ‘விட்டுணு சித்தர்’ என்னும் பெயரால் ‘விட்டுணு சித்தியமு’ (Vishnu Citiyamu) எனவும் வழங்கப்படுகிறது. இந்நூலின் ஆளவந்தார் வரலாறும் இடம் பெற்றுள்ளது.

கிருட்டிண தேவராயர் புலவர்களைப் புரக்கும் புரவலராகத் திகழ்ந்ததோடு, தாமே சிறந்த புலவராகவும் விளங்கினார். இவர் வடமொழி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மும்மொழிகளில் புலமை நிறைந்தவர். ஆண்டாள் வரலாற்றைத் தம் காப்பியக் கருவாகக் கொண்டமையால் தமிழும் அறிந்தவராதல் வேண்டும். இவர் கலிங்க நாட்டை வென்று ‘விசயவாடி’ யில் (Vijayawada) இருந்தபோது, சீகாகுளம் சென்று இறைவனை வணங்கி, நோன்புமேற்கொண்டு அங்குத் தங்கினார். இரவில் உறங்கியபோது, கண்ட கனவின் பயனாக ‘ஆமுக்த மாலியதா’ என்னும் காவியத்தை எழுதும் எண்ணம் தோன்றி, அதனை எழுதவும் தொடங்கினார் என்பது கூறப்படுகிறது. இவ்வாறு இக்காவியம் கி.பி. 1519-ஆம் ஆண்டு பிப்பிரவரித் திங்களில் தொடங்கப் பெற்றது.

ஆமுக்த மாலியதா என்னும் இக்காவியத்தின் வாயிலாகக் கிருட்டிண தேவராவர், தெலுங்கு மொழி இலக்கிய வளர்ச்சியில் ஒரு புதிய மலர்ச்சியைத் தோற்றுவித்தார். அதன் விளைவாக வட மொழியிலுள்ள நூல்களை மொழி பெயர்த்துத் தெலுங்கில் அமைக்கும் நிலை மாறிப் புலவர்கள் தாமே தெலுங்கு மொழியில் காப்பியம் புனையும் மரபு தோன்றி வளர்ந்தது, ‘ஆமுக்த மாலியதா’ காப்பியத்தின் நடை மிக உயர்ந்ததாகவும், செறிவுடையதாகவும் விளங்குகிறது. இக்காப்பியம் உவமை முதலிய பொருளணிகளும், சிலேடை என்னும் சொல்லணியும் மிக்குக் கற்பனை வளஞ் செறிந்து திகழ்கிறது. முதலில் பயில்வோர் சற்றுக் கடினமாக உணர்ந்தாலும், ஆழ்ந்து கற்பாராயின் அரும்பொருள் பல நிறைந்து, காப்பியச் சுவை மலிந்து இன்புறுத்துவதனை உணரக் கூடும். இந்நூலில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் விசயநகர மன்னர் காலத்தில் விளங்கிய, பழக்க வழக்கங்கள், பண்பாட்டுக் கூறுகள், சமய நம்பிக்கைகள் போன்ற பல செய்திகள் சிறப்புறச் சித்திரிக்கப்பட்டுள்ளன. வைணவ சமயக் கோட்பாடுகளும் ஆங்காங்கே இடம் பெற்று விளங்குகின்றன. தொடர்ச்சியான கருத்தோட்டம், பீறிட்டெழும் உணர்ச்சி வெளியீடு. மானிட இயல்புகளை இனிய தொடர்களால் சித்திரிக்கும் திறம் ஆகியவற்றில், இக்காப்பியத்தோடு ஒப்பிடத்தக்க வேறு காப்பியங்கள் தெலுங்கு மொழியில் இல்லை என்று இந்நூலினை ஆராய்ந்த அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். தெலுங்கு மொழியில் இடைக்காலத்தில் எழுந்த புதிய இலக்கிய மலர்ச்சியின் முன்னோடியாகவும், தெலுங்கு மொழி இலக்கியத்தில் வைணவ சமயக் கருத்துகள் பெற்றிருந்த செல்வாக்கினை உணர்த்தும் கருவியாகவும் இந்நூல் அமைந்துள்ளது.

இந்நூல் ஏழு பகுதிகளாக அமைந்த 878 பாக்களைக் கொண்டுள்ளது. அவையடக்கத்தில் திருவேங்கடவன் துதி, ஆதிசேடன் வணக்கம், விநாயகர் துதி, விசுவக்சேனர் வணக்கம், பஞ்சாயுத வணக்கம், பன்னிரு ஆழ்வார் துதி ஆகியன உள்ளன. இதன் முதல் பகுதி சீவில்லிபுத்தூர் வருணனை, பெரியாழ்வார் பற்றிய செய்தி ஆகியவற்றைக் கூறுகிறது. இரண்டாம் பகுதி, தென்மதுரை வருணனை, மச்சத் துவசன் என்னும் அரசனின் நற்குணங்கள், வேனிற்கால வருணனை, அம்மன்னன் மனமாற்றம், அவன் பெரியாழ்வாரை எம்மதம் சிறந்தது என ஆராய அழைத்தல், பெரியாழ்வார் வாதம் முதலியன பற்றிக் கூறுகிறது. மூன்றாம் பகுதி, காண்டிக்ய கேசித்துவ சன் சம்வாதம், திருமால் புகழ் முதலியன கொண்டிலங்குகிறது, நான்காம் பகுதி, பெரியாழ்வார் விசயம், மேலே கட்டப்பெற்றிருந்த பணமுடிப்பு அவிழ்தல், பெரியாழ்வார் ஊர்வலம், அவர்முன் திருமால் திருக்காட்சி, தசாவதாரக் காட்சி, பெரியாழ்வார் சீவில்லிபுத்தூர் அடைதல், யாமுனாச்சாரி வரலாறு, கார்கால, முன்பனிக்கால வருணனைகள், யாமுனாச்சாரி திக்கு விசயம், இவர்தம் ஞானோதயம், இராசநீதி தலம் முதலியன கொண்டு அமைந்துள்ளது. ஐந்தாம் பகுதி, கோதைப் பிராட்டிகதை, வசந்த கால வருணனை முதலியன கொண்டு சிறக்கிறது. ஆறாம் பகுதி, மால தாசரி கதை கொண்டது. ஏழாம் பகுதி, பிரம்ம இராட்சசன் கதை, கோதை அரங்க நாதனை வேண்டுதல், தன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுதல் முதலியன கொண்டு அமைந்து சிறக்கிறது.

இந்நூல் கிருட்டிண தேவராயர் அவையில் அட்டதிக்கசங்களாகத் திகழ்ந்த புலவர் எண்மருன் தலையாயவராக விளங்கிய அல்லசானி பெத்தன்னா வால் இயற்றப் பெற்று, மன்னர் பெயரால் வழங்கப்பட்டது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் பெத்தன்னா இயற்றிய மனுசரித்திரம் முதலிய நூல்களின் நடையையும், இலக்கணத் தொடரமைப்புகளையும், ஆமுக்த மாலியதாவின் நடை முதலியவற்றோடு ஒப்பிட்டு ஆராய்ந்த அறிஞர்கள், இந்த நூல் கிருட்டிண தேவராயராலேயே இயற்றப்பட்டது என்னும் உண்மையை நன்கு நிறுவியுள்ளார்கள். இந்நூல் விசயநகர மன்னர் கால அரசியல் சமூக நிலைகளை அறிய-