ஆராய்ச்சியும்.....
591
ஆராய்ச்சியும்.....
நிலையிலிருந்து அடுத்த உயர்ந்த வாழ்க்கைத்தர நிலைமைக்கு உயரத் தொடர்ந்து நடைபெறுவது பொருளாதார முன்னேற்றம். ஆராய்ச்சி முறைகள் (Research Methods) இரு வகையாகப் பிரிக்கப்படும். அவை: 1) அறிவின் அடிப்படைக் கூறுகளை ஆராயும் அடிப்படை ஆய்வு (Basic Research), 2) நடைமுறையில் அறிவைச் செயற்படுத்தும் முறைகளை ஆராயும் செயல் முறை ஆய்வு (Applied Research).
ஆராய்ச்சியையும் பொருளாதார முன்னேற்றத்தையும் ஊக்குவித்து மேம்படுத்தப் பல நிறுவனங்கள் பற்பல நோக்கங்களுடன் செயற்படுகின்றன. அவற்றில் முதன்மை இடத்தைப் பெறுவது, அரசுகள் நாட்டின் சமூகப் பொருளாதாரப் பாதுகாப்புத் தேவைகளின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொள்வது. தனியார் துறைகளில் ஆக்கக் காரணிகளின் அளவுகளையும் தரத்தையும் பெருக்குவதற்கும் புதிய பொருள்களை உற்பத்தி செய்வதற்கும் ஆராய்ச்சி, திறவுகோலாக விளங்குகிறது. கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், சமுதாய நிறுவனங்கள் ஆகியவை ஆராய்ச்சித் திட்டங்களில் ஈடுபடுகின்றன. தனியார் ஆய்வு நிறுவனங்களுக்கும் தொழிலகங்களுக்கும் அரசு, கொடைகள் வழங்கியும் பிற ஊக்கிகள் அளித்தும் ஆதரவு அளிக்கிறது. பொதுவாக ஆராய்ச்சிக்கான ஊக்கமும் ஆதரவும் வளர்ச்சியடைந்த நாடுகளில் (Developed Countries) தான் வேரூன்றி முன்னேற்றமடைந்து காணப்படுகின்றன. அமெரிக்காவில் தனியார் துறையில் சிறப்பான வகையில், ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. உருசியாவில் ஆராய்ச்சியும் முன்னேற்றமும், அரசின் கட்டுப்பாட்டின் கீழ்ச் சமுதாய முன்னேற்றத்தை அடிப்படை நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றன.
பொது நலன்களுக்கான திட்ட ஆய்வுகள் தனி அரசுகளின் முனைவுகள் மட்டுமல்லாமல் பன்னாட்டு ஒத்துழைப்பு, கட்டுறவு வாயிலாகவும் தனி நாடுகன் பிற நாடுகளுடன் நேரிடை, ஈரிடை (Direct & Bilateral) ஒப்பந்தங்கள் வாயிலாகவும் செயற்படுகின்றன. உணவு வேளாண்மை நிறுவனம் (FAO) போன்ற பிற ஐக்கிய நாடுகளின் நிறுவனங்கள், பன்னாட்டு அணு ஆற்றல் நிறுவனம் (International Atomic Energy Agency), பன்னாட்டுத் தொலைத்தொடர்பு அமைப்பு (International Tele Communication) ஆகிய உலக நிறுவனங்கள், வேளாண்மை, சத்துணவு, சுகாதாரம், மருத்துவம், கல்வி, பண்பாடு போன்ற துறைகளில் ஆய்வுகள் நடத்தி, பொது நலப் பணிகளில் மிகப் பெரிய செயல்களைச் செய்து காட்டியுள்ளன. தமிழ்நாட்டில் பரவலாகப் பயிர் செய்யப்படும் புதிய ஐ.ஆர். நெல் வகைகள், மணிலாவில் நிறுவப்பட்டுள்ள பன்னாட்டு அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் (International Rice Research Institute) புதிய கண்டுபிடிப்பாகும்.
ஆராய்ச்சிகள் பயனுள்ளவையாயிருப்பதற்கு ஆய்வு நிறுவனங்களிடையே ஒத்துழைப்புத் தேவை. அவ்வொத்துழைப்பு, அடிப்படை ஆய்வுகளின் முடிவுகளை நடைமுறையில் செயற்படுத்தவும், புதுக் கண்டுபிடிப்புகளுக்கும் புதுமை மயமாக்குதலுக்கும் கண்டுபிடிக்கப்பட்டவற்றை மீண்டும் ஆய்வுக்குட்படாமல் நீக்குதற்கும் தொடர்ந்த பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும். அமெரிக்காவை விடச் சப்பான் (Japan) தொழில்நுட்ப அறிவு வளர்ச்சியில் முன்னேற்ற மடைந்திருப்பதற்கு அங்குள்ள ஆய்வு நிறுவனங்களுக்கும் தொழிலகங்களுக்கு மிடையேயுள்ள ஒத்துழைப்புத்தான் காரணம் எனக் கருதப்படுகிறது.
பொருளாதார முன்னேற்றம், ஆக்கப் பொருள் அறிவியலின் (Material Science) ஆய்வை மட்டும் சார்ந்ததன்று. சமுதாயத்தின் பண்பாட்டு அமைப்புகளிலும் மாற்றங்கள் (Social Change) ஏற்பட்டு முன்னேற்றம் ஏற்படச் சமூக அறிவியலிலும் (Social Science) ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். பொருளாதார முன்னேற்றத்திற்கான ஆய்வு வளர்ச்சி, சமூகம், பண்பாடு, அரசியல் காரணிகள் தவிர, பொருளாதாரக் காரணிகளான மக்கள்தொகை இயல், வருமான வளர்ச்சியும் பங்கீடும், செல்வக் குவிப்பு, நுகர்வோர் செயல், சமூகப் பாதுகாப்பு, விலைகள், நிதி, வரிவிதிப்பு, பொதுத் துறையின் கட்டுப்பாடும் ஒழுங்கீடுகளும், பொது நிறுவனங்கள், மேலாண்மை ஆகியவற்றின் ஆழ்ந்த ஆய்வு வாயிலாகக் கண்டுபிடிக்கப்பட்டவற்றைக் குறிப்பிட்ட காலத்திலும் அளவிலும் தகுந்த இடத்திலும் தெரிந்தெடுத்துச் செயற்படுத்துவதில் உள்ளடங்கியுள்ளது.
சமூக அறிவியலின் ‘ஆய்வும் முன்னேற்றமும்’ (R & D), ஆக்கப் பொருள் அறிவியலின் முன்னேற்றத்தைப்போல் இன்றியமையாத ஒன்றாகும். இது மிகவும் புறக்கணிக்கப்பட்ட துறையாகக் கருதப்பட்ட நிலைமாற, இப்போது உலகம் முழுவதிலும் இதன் சிறப்பை உணர்த்திருக்கிறார்கள். அறிவியல் ஆய்வைப் போல் சமூக ஆய்வினையும் கருதி அதன் முன்னேற்றத்திற்கு அரசுகள் முதன்மையான இடம் அளிக்கவேண்டும். உலக வங்கி, இத்துறையில் முன்னோடியாகப் பல சமூக ஆய்வுத் திட்டங்களைப் பன்னாட்டு முறையில் தன் பொறுப்பின் கீழ் நிதி உதவியும் அளித்து நிறைவேற்றுகிறது. எனினும் ஆக்கப்பொருள் அறிவியல், ஆய்வு அளவுக்கு முன்னேற்றமடையவில்லை. சமுதாய மாற்றங்களுக்கும் சமூக ஆய்வுத் திட்டங்களுக்கும் தேவையான நீண்ட காலக் கெடு, பெரும் முட்டுக்கட்டையாக, சிக்கலாக உள்ளது.