உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/692

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்

652

ஆவூர் மூலங்கிழார்

ஆவூர் கிழார், ஆவூர்கிழார் மகனார் கண்ணனார், ஆவூர்க் கௌதமன்சாதேவன், ஆவூர் மூலங்கிழார், ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்.

ஆவூர்க் காவிதிகள் சாதேவனார் சங்க சாலப் புலவர்களுள் ஒருவர். இவர் ஆவூர் என்னும் ஊரைச் சார்ந்தவர், இவ்வூர் சோணாட்டு ஆவூர்க் கூற்றத்து ஆவூராயிருக்கலாம் எனவும், இது இந்நாளில் பசுபதி கோயில் என வழங்குகிறது எனவும் கூறுவர். பசுக்கள் பூசித்தமையால் ஆவூர் எனப் பெயர் பெற்றது. பழங்காலத்தில் ஆக்களைப் பேணி வாழ்ந்த மக்கள் பலராதலின், ஆவூர்களும் எல்லாப் பகுதியிலும் இருந்துள்ளனவாதலால், இவர் எந்த ஆவூரைச் சேர்த்தவர் என்று கூறுவதற்கில்லை.

சாதேவனார் என்னும் இயற்பெயரைக் கொண்ட இப்புலவர், அரசர்க்கு அறிவுரை கூறும் அமைச்சர் தொழில் மேற்கொண்டு ‘காவிதி’ என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றவர். ஆவூர் என்னும் ஊரில் வாழ்ந்ததனால், ஊர்ப் பெயரும் சேர்த்து ஆவூர்க் காவிதிகள் சாதேவனார் என்று அழைக்கப் பெற்றார், காவிதி என்பது, பாண்டி நாட்டு வேளாளருள் உழவுத் தொழில் செய்வோருக்கு அரசரளிக்கும் பட்டம் என்பர்.

என்.இ.இ.

ஆவூர்க் கௌதமன் சாதேவனார் சங்க காலத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் சங்க நூல்களில் ஆவூர்க் காவிதிகள் சாதேவனார் என்றும் குறிக்கப்பட்டுள்ளார். இவ்விரு பெயர்களும் ஒரு புலவரையே குறிக்கின்றன என்பது கருதப்படுகிறது. ஆவூர் என்னும் பெயர் ஆமூர் என்றும் ஏடுகளில் காணப்படுகிறது. சாதேவன் என்பது இயற்பெயர். இது சகாதேவன் என்பதன் மரூஉ வடிவமாகும். கௌதமன் என்பது இவரது பெயரடையாயின் இவர் கெளதமகோத்திரத்துப் பிறந்த அந்தணராவர்; காவிதிகள் என்பது அடையாயின் உழுவித்துண்ணும் வேளாளருள் காவிதிப் பட்டம்பெற்ற ஒருவராவர். இவரது அகநானூற்றுப் பாடல் (159) பாலைத்திணையில் தோழி கூற்றாக உள்ளது. இதன்கண் குறிப்பிடப்பட்டுள்ள ஆமூர் என்பது, குறும்பொறை மலையின் கீழ்ப்பாலுள்ள பாலை நிலத்தில் அமைந்துள்ளது என்பதனால், இது சேர நாட்டைச் சார்ந்த எனச் கருதுகின்றனர். புவவர் தம்மூரைச் சிறப்பித்துக் கூறும் மரபினால் இதில் குறிப்பிடப்பட்ட ஆமூர் இவருடைய சொந்த ஊராக இருக்கலாம். ‘ஆமூர் என்னும் சிறப்புடைய ஊரைப் பெற்றாலும், தலைவன் தலைலியை மறந்து, சென்றவிடத்தில் தங்கிவிட மாட்டான்’ என்று இவர் பாடியுள்ளார். இவரது மற்றொரு பாடல் நற்றிணையில் 264 ஆம் பாடலாக உள்ளது. பாலைத் திணையிலமைந்த இப்பாடல். உடன்போகா நின்ற தலைமகன் கூற்றாக அமைந்துள்ளது. தலைவியை உடன்போக்கில் அழைத்துச் சென்ற தலைமகன் தலைவியிடம், ‘தோகை விரித்தாடும் மயில்போல, மலர் சூடிய கூந்தலில் காற்றடிக்க விரைந்து செல்வாயாக’ எனக் கூறுவது (நற். 264) நயமிக்கதாக உள்ளது.

ஆவூர்கிழார் கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர்; ஆவூரினைச் சார்ந்தவர். தமிழகத்தில் ஆவூர்ப் பெயரில் பல ஊர்கள் உள்ளன. இவரது ஆவூர் இன்னதென உறுதியாகக் கூறுதல் இயலாது. இவர் பாடலில் மருத நிலவளம் பேசப்படுவது கொண்டு இவரது ஆவூர் சோழ நாட்டில் காவிரியின் தென்கரையில் உள்ள ஊராகலாம் என்பது கருதப்படுகிறது. ஆனால், அப்பாடலில் முல்லை நிலக் குறிப்பும் இடம் பெற்றுள்ளது. இந்த ஆவூர் எவ்விடத்தில் இருந்தாலும், இது பல சங்கப் புலவர்களைத் தோற்றுவித்த பெருமை சான்றதாகும். இப்புலவரின் மக்களும் சங்கப் புலவர்களாகக் காணப்படுகின்றமையால், இவர் குடும்பம் தமிழ்ப் புலமை சான்ற ஒரு குடும்பமாக அக்காலத்தில் விளங்கியுள்ளது. புறநானூற்றின் 322-ஆம் பாடலாக அமைந்த இவரது ஒரே பாடல் வாகைத் திணை, வல்லாண் முல்லைத் துறையில் அமைத்துள்ளது. இப்பாடல் வேந்தரும் அஞ்சுமாறு வாழ்ந்த ஒரு வீரனின் வீரச் சிறப்பையும் அவன் ஊர்வளத்தையும் விளக்குகிறது. இப்புலவர் பெயர் ஆவூர் அழகியார் என்றும் சில ஏடுகளில் காணப்படுகிறது.

ஆவூர் கிழார் மகனார் கண்ணனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். தமிழ்ப் புலவர் பலரைப் பெற்றெடுத்த ஆவூர் இவர் பிறந்த ஊராகும். இவர் தந்தை ஆவூர் கிழாரும் சங்கப் புலவர்களுள் ஒருவராக உள்ளார்.

ஆவூர் கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் என்ற பெயரிலும் ஒரு புலவர் பற்றிக் குறிப்புக் காணப்படுகிறது. அவர் கண்ணனாரின் உடன்பிறந்தார் எனவும் கருதப்படுகிறார். அதனால் ஆவூர் கிழாரின் குடும்பமே புலவர்கள் மிக்க குடும்பமாகத் திகழ்ந்துள்ளது. இவர் பாடியதாக நமக்குக் கிடைத்துள்ளது அகநானூற்றிலுள்ள ஒரே பாடலாகும். (202).

ஆவூர் மூலங்கிழார் சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர்; ஆவூரில் தோன்றியவர். ஆவூர் சோழ நாட்டில் காவிரியின் தென்கரையில் உள்ளது. சங்கப் புலவர்களுள் சிலர், ஆவூர்ப் பெயரோடு காணப்படுகின்றமையால், இவ்வூர் அக்காலத்தே புலவர் பலரைத் தோற்றுவித்த பெருமை பெற்று விளங்கியது என்பது புலனாகிறது. மூலங்கிழார் என்னும் பெயரினை நோக்குங்கால், இப்-