உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/695

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்

655

ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும்

ஆழ்நிலைத் தியானத்தினால் ஏற்படும் பலன்களாகும். மேலும் இரத்த அழுத்தம், மூட்டுவலி, இதய நோய், தீராத தலைவலி போன்ற பலவகைப் பிணிகளிலிருந்து குணமடைவதும் இம்முறையால் கூடும். சுருங்கக் கூறின், மனிதனின் மன அமைதிக்கு ஆழ்நிலைத் தியான முறை ஒரு சிறந்த வழிகாட்டி என்றால் அது மிகையாகாது.

என்.மா.

ஆழ்வார்களும் ஆழ்வார் பாசுரங்களும், தமிழகத்தில் மலர்ந்த பக்தி, இலக்கிய வரலாற்றில் பெற்றுள்ள இடம் குறிப்பிடத் தக்கதாகும்.

நெஞ்சைப் பண்படுத்தும் பண்டைக் காதற்பாடு பொருளும், நினைவை ஊக்குவிக்கும் வீரப்பாடு பொருளும் பின்னர்ப் பக்திப் பாடல்களாக வளர்ந்து மேலோங்கியிருந்த காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வரை நீட்டித்த பக்தி இலக்கியக் காலமாகும். இவ்வாறு தோன்றிய பக்திப் பாடல்கள் பெரும்பாலும், சிவபெருமானையும் திருமாலையும் அவர்தம் செயற்கருஞ் செயல்களையும் சீரிய குணங்களையும் பாடுபொருளாகக் கொண்டமைந்தனவாகும்.

தொடக்கக் காலத்தில் சிவபெருமானைப் பற்றி எழுந்த பாடல்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய சைவசமயச் சான்றோர் மூவர் பாடியனவாகும். இவை தேவாரம் என்று சிறப்பிக்கப் பெற்றன.

இவ்வாறே திருமாலைப் பற்றி எழுந்த பாடல்களைப் பன்னிரு ஆழ்வார்கள் பாடியருளினர். இவை பாசுரங்கள் என்று போற்றப்பெறுகின்றன. ஆழ்வார்கள் பாடியருளின பாசுரங்கள் சிறப்பாகத் தமிழகத்திலும், பொதுவாக இந்தியாவிலும் வைணவத் தத்துவத்தையும், திருமால் பக்தியையும் பாதுகாத்து வளர்ப்பனவாக விளங்குகின்றன.

திருமாலின் திருக்குணங்களில் ஈடுபாடு கொண்டவர்கள், அவன் பக்திக் கடலிலே அழுந்திக் கிடப்பவர்கள் ஆழ்வார்கள் எனப்பட்டனர்.

ஆழ்வார்கள் திருமாலின் உறுப்புகளாகக் கருதப்படுவர். வைணவத் தத்துவப்படி, திருமாலே தலைவனும் காப்பவனும் எல்லாவற்றுக்கும் காரண முதல்வனும் ஆவார். உயிர்க்குரிய உடல் முதலான பொருள்கள் அனைத்தும் தலைவனாகிய திருமாலுக்கே உரியன. ஆனால், ‘நான்’ ‘எனது’ என்னும் உணர்வால் மனிதன், ‘தான் திருமாலுக்கு அடிமை’ என்பதை மறந்து விடுகிறான். அதனால் திருமாலுக்குப் பணி செய்வதாகிய பேரின்பத்தையும் இழந்து விடுகின்றான். இவ்வாறு தன்னை மறந்து, தலைவனையும் மறத்து, தனக்கேயுரிய பேரின்பத்தையும் இழந்து நெறியல்லா நெறியிலே சென்று உழல்கின்ற சீவர்களாகிய மனிதர்களைத் துன்பக் கடலிலிருந்து கரையேற்றுவதற்காகத் திருமால் தாமே பல பிறப்புகளை எடுத்தார். அவற்றினாலும் அனைத்து உயிர்களையும் கரையேற்ற இயவவில்லை. அதனால், மானைக் காட்டி மானைப் பிடிப்பவர்போல, மனிதர்களைக் காட்டி மனிதர்களைத் தடுத்தாட்கொள்ள அவர் பேரருள் கொண்டார். அதன் பயனாகத் தம் உறுப்புகளாகிய சங்கு, சக்கரம் முதலியவற்றை மண்ணுலகில் தோற்றுவித்தார். அத்தோற்றங்களே ஆழ்வார்கள். திருமாலின் நற்குண, நற்செய்கைகளை எல்லாம் அவர்கள் துய்த்து அவ்வாறு தாம் துய்த்த இன்பத்தை உலகெலாம் பெறுமாறு செய்தனர்.

ஆழ்வார்கள் பல சாதியினர்; பல குலத்தவர்; பல தொழிலினர்; பல்வேறு காலத்தவர்; பலவகையான வாழ்க்கையினர்; ஆனால், ஒரே குறிக்கோளினர்.

ஆழ்வார்கள் பன்னிருவராவர். எனினும், பதின்மர் என்னும் கருத்தும் உள்ளது. தென்குருகூர் நம்பிக்கு அன்பனாய், அடியனாய் அமைந்து, அவரையே பாடிய மதுரகவியையும், புதுவையர் கோன் விட்டு சித்தன் மகளாராகிய ஆண்டாளையும் விடுத்து மற்றையோரை ஆழ்வார் பதின்மர் என்று கூறும் மரபும் உள்ளது.

காலக் கண் கொண்டு கருதி ஆழ்வார்களைம் பின்வரும் வரிசையில் தொகுத்தும் வகுத்தும் கூறுவர். அவர்கள் முதலாழ்வார் மூவர், திருமழிசை யாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார் மதுரகவி ஆகியோராவர்.

முதலாழ்வார்கள்: பொய்கையார், பூதத்தார், பேயார் ஆகிய மூவரும் முதலாழ்வார் ஆவர். இவர்கள் மற்ற ஆழ்வார்களுக்குக் காலத்தால் முந்தியவர்கள்; கிட்டத்தட்ட ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். அன்றியும் காஞ்சி, மாமல்லபுரம், மயிலாப்பூர் ஆகிய இடங்களில் முறையே தோன்றியவர்கள் ஆழ்வார்கள் வரலாறு கூறும் குருபரம்பரை, இவர்கள் மூவரும் திருக்கோவலூயில் சந்தித்து, ஒரே நேரத்தில் திருமாலைக் கண்டு தொழுத திறத்தைப் பத்திச் சுவை சொட்டச்சொட்ட எடுத்துக்கூறும். இவர்கள் காலம் பற்றிப் பல கருத்துக்கள் உள்ளன. என்றாலும், மாமல்லையைப் பற்றிய குறிப்புகள் பூதத்தாழ்வார் பாடலில் (பாசுரம். 70) வருதலால் இவர்காலம் மாமல்லை அல்லது மாமல்லபுரம் (மகாபலிபுரம்) தோன்றியதற்குப் பின்னரே ஆதல் வேண்டும். மாமல்லபுரம், பல்லை வேந்தன் முதலாம் நரசிம்ம-