பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“வா இந்தப்பக்கம்” - கட்டுரையில் பஞ்சமா பாதகங்களே பஞ்சசீலம் ஆகிப்போன பாரதநாட்டைப் படம் பிடிக்கிறார். மதுவுக்கு எதிர்ப்புக் குரல் கொடுக்கும் ஒரு கவிஞரா? வியப்புத்தான்.

“ஊருக்கு வெளியே நிற்கும் கைகாட்டி மரங்கள் வழிப் போக்கர்களுக்கும் வாகனாதிகளுக்கும் பாதை காட்டுகின்றன. புதிதாய் ஊருக்குள்ளே பல சந்து முனைகளில் அம்புக்குறியோடு கைகாட்டி மரங்கள் முளைத்துள்ளன; ‘வா இந்தப்பக்கம்... இதுதான் சாராயக் கடைக்கு வழி!’ என்று அன்போடு அழைக்கின்றன. இந்தத் ‘தண்ணீர் தண்ணீர்’ விசிறிகளுக்கு வீட்டுக்குப் போகும் வழிகாட்ட எந்த கம்பமும் இல்லை” (பக்கம் 17) இந்த வரிகளை மீண்டும் படித்தால் வழிகாட்டும் கைகாட்டி மரங்கள் ஊருக்கு வெளியே தள்ளப்பட்டிருப்பதும் வழி தவறச் செய்யும் கைகாட்டிகள் (!) ஊர்வாசிகளாகியிருப்பதும், வெறும் சாராயச் சீரழிவை மட்டும் குறிப்பதாக எனக்குப் படவில்லை. ஒரு முழுப் பண்பாட்டுச் சீரழிவையே குறியீட்டுப் பாங்கில் சுட்டுகின்றன. ‘வழிகாட்ட எந்தக் கம்பமும் இல்லை’ என்னும்போது -எந்த அரசியல் கட்சியும் மக்களுக்கு வழிகாட்டுவதாக இல்லை என்ற ஆதங்கமே தொனிப் பொருளாக உள்ளது. பரிசுச் சீட்டுப் பற்றி "மகாபாரதத்தில் ஒரு மன்னன் சூதாடினான் என்றால் நம் நவபாரதத்தில் ஒவ்வொரு மன்னனும் சூதாடும் ஒரு புதுயுகம்-கிருதயுகம் - கிளர்ந்தெழுந்துவிட்டது. அன்று தருமனோடு சகுனி சூதாடினானென்றால் இன்று மக்களோடு சலக மாநில அரசுகளும் போட்டிபோட்டுக் கொண்டு "... (பக்கம்.18) படிக்கும்போது ஒரேநேரத்தில் உதட்டில் புன்னகையும் விழியோரம் கண்ணீரும் வரச்செய்யும் எழுத்து! கிச்சுக்கிச்சு மூட்டியே அழவைக்கும் நகைச்சுவை!

8