பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

விஜயலக்ஷ்மி பண்டிட்


அதற்கு முந்தைய ஆண்டில் தான் மோதிலால் நேரு அந்தப் புதிய பெரிய பவனத்தைக் கட்டிக் குடிபுகுந்தார். வக்கீல் தொழிலில் பிரமாத வெற்றியோடு திகழ்ந்த மோதிலால் ராஜவாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த காலம் அது. மேல்நாட்டு நாகரிக முறையில் வாழ்க்கை நடத்த ஆசைப்பட்ட மோதிலால், அதற்கேற்ற பெரிய மாளிகையை நிர்மாணித்துக் கொண்டார்.

‘ஆனந்த பவனம்’ அமைக்கப்பட்ட இடம் புராதனப் பெருமையும் புனிதப் புகழும் பெற்றதாம், ராம பிரான் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்து விட்டு நாடு திரும்புகிற போது அந்த இடத்தில்தான் பரதன் அவரை சந்தித்தாராம் இப்படி ஒரு இதிகாசப் புகழ் இருந்தது அந்த இடத்துக்கு.

பெரிய முற்றங்கள் சொந்த மாளிகை 'ஆனந்த பவனம்' நாலாபுறமும் குளுமையான தோட்டங்கள், கனி வகைகள் தருகின்ற மரங்கள் அடர்ந்த தோப்பு பின்புறத்திலே, புஷ்பச் செடி கொடிகள் அணிசெய்யும் அழகுத் தோட்டம் முன்புறத்திலே. அதிலொரு 'வசந்த கிரகம்' அருகில் ஓர் அழகுக் குளம். டென்னிஸ் விளையாட விசால மைதானம் ஒரு பக்கத்தில் 'வசந்த கிரக'த்தில் சிறுமலை போல் தோற்றமளிக்கும் செய்குன்று ஒன்று அதன் உச்சியில் சிங்காரக் கொலுவிருக்கும் சிவபெருமான் சிலை, சிவனின் தலைமுடியிலிருந்து சிதறித் தெறிக்கும் நீரூற்று, வழிந்து பெருகும் அந்நீரூற்று கீழே உள்ள குளத்தில் கலக்கும். கண் திருப்பினால் எங்கும் வண்ண மலர்களை தென்படும்.