பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

11


அம்மாளிகை சதா 'கல்யான வீடு மாதிரியே' திகழ்ந்தது. குதிரைகள் பூட்டிய சாரட்டுகளிலே வந்து வந்து போனார்கள் செல்வர்கள். ஐரோப்பியச் சீமான்கள் அங்கு தங்கிப் பொழுது போக்கிச் சென்றார்கள். விருந்து உண்டு களித்தார்கள். ரத்தமெனச் சிவந்த மது அங்கே தண்ணிர் பட்டபாடு பட்டது! மோதிலாலின் சிரிப்பு வெண்கல நாதம் போல் எழுந்து எங்கும் மோதி எதிரொலிக்கும்.

வலிவும் வனப்பும் நிறைந்த கம்பீர புருஷர் மோதி லால். அறிவின் கூர்மை அவர் கண்களில் ஒளி வீசியது. அவரது தோற்றம் மதிப்பும் அச்சமும் எழுப்புவதாயிருந்தது ஆதி நாட்களிலே. அவரை முதன் முறையாகக் காண நேரிட்டவர்கள் 'கடுமையான சுபாவம் உள்ளவர். வணங்காமுடி மன்னன். யாரையும் பொருட்படுத்தாதவர்' என்றே எண்ணத் துணிந்தனர். மோதிலால் சில சமயங்களில் அவ்விதம் தான் நடந்து கொண்டார். எனினும் அன்பும் ஆதரவும் ஈகையும் அவரது பண்புகள் என்பதை விரைவிலேயே பிறர் புரிந்து கொண்டனர். எவர் மத்தியிலிருந்தாலும் சரி. எக்கூட்டத்தில் இருப்பினும் சரி, அவரே நடுநாயகமாக விளங்கினார், எல்லோரையும் வசீகரிக்கும் காம்பீர்யக் கவர்ச்சி அவரிடம் நிறைந்திருந்தது.

ஆனந்த பவனத்தில் மோதிலால் நேருவின் ஆதரவில் வாழ்ந்த உறவினர்கள் பலர். அங்கு வந்து போகும் உறவினர்கள் மிகப்பலர், கும்பமேளா போன்ற விழா விசேஷங்களுக்காக வந்து மாளிகையில் தங்கிச் செல்கிறவர்கள் எவ்வளவோ பேர். ஆகவே, அந்த 'பவனம்' எப்போதும் 'ஜே ஜே' என்று தான் விளங்கியது.