பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

விஜயலட்சுமி பண்டிட்


ஆரவாரமாக உழைத்தார்கள் அவர்கள். எண்ணற்ற குமாஸ்தாக்கள் திட்டமிட்டுத் தீவிரமாகச் செயல் புரிந்து வந்தனர். இந்த ஏற்பாடுகளும் பரபரப்பும் சொரூபாவுக்கும் கிருஷ்ணாவுக்கும் ஆனந்தமளிக்கும் புதுமைகளாகத் திகழ்ந்தன.

வசந்த பஞ்சமி தினத்தில்தான் திருமணம் அதற்கு ஒருவாரத்துக்கு முன்னரே மோதிலால் நேருவின் குடும்பத்தினர் அலகாபாத்திலிருந்து கிளம்பினர். நூறு பேருக்கு அதிகமான விருந்தாளிகள் அவர்களைத் தொடர்ந்தனர்.விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட 'ஸ்பெஷல் ட்ரெயின்' மூலம் பிரயாணமானர்கள் மேலும் பல நூறு விருத்தினர் டில்லியில் கலந்து கொண்டார்கள். அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த வீடுகள் போதுமானதாக இல்லை. ஆகையினால் ஒவ்வொருவருக்கும் தனித்தனிக் கூடாரங்கள் அமைத்துக் கொடுத்தார் மோதிலால். ஒரு வாரகாலத்தில் ஏகப்பட்ட கூடாரங்கள் முளைத்துவிட்டன. அவை பூராவும் தனியானதோர் ஊர்போலவே விளங்கியது. அப்பகுதி 'நேரு திருமண முகாம்' என்றே அழைக்கப்படலாயிற்று.

சாதாரண வீட்டில் சுமாரான கலியாணம் என்றாலே, அவ்வீட்டிலுள்ள சிறுவ்ர் சிறுமிகளுக்குக் கங்குகரை அற்ற ஆனந்தம் பொங்கிப் பெருகுவது இயல்பு. இத்தகைய ராஜரீகமான மண விழாவின் போது சிறுமிகளான சொரூபாவும் கிருஷ்ணாவும் இன்ப உலகில் திரியும் சிறு பறவைகள் போல் களிப்புற்றதில் வியப்பு எதுவும் இல்லைதான்.