பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

விஜயலக்ஷ்மி பண்டிட்


 'இல்லையே!' எனச் சொன்னாள் சொரூபா. 'அவசியம் படித்துப் பார். அருமையான கட்டுரை' என்று சிபாரிசு செய்தார் தேசாய்.

ரஞ்சித் பண்டிட் என்பவர் எழுதியிருந்த கட்டுரை அது. ஆழ்ந்த கருத்தும், அறிவொளியும், சிந்தனைப் பொலிவும் நிறைந்த கட்டுரை அது. அதைப் படித்து வியந்தாள் சொரூபா.

அவளிடம் கட்டுரையாளரைப் பற்றி விவரித்தார் தேசாய். நல்ல அறிவாளி : மகாமேதை; கல்வியில் தேர்ந்தவர்; ஆராய்ச்சியில் தீரர் என்று புகழ்ந்தார்.தனது நண்பன் என்றும், தன்னோடு சேர்ந்து படித்துப் பட்டம் பெற்றவர் என்றும் எடுத்துரைத்தார். காவியங்களை ரசித்து மகிழும் பண்பு உடையவர்; பாரிஸ்டர் என சொன்னார் தேசாய்.

அத்துடன் அவர் நின்றுவிடவில்லை. ரஞ்சித் பண்டிதரை சொரூபாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இருவருக்கும் நட்பு உண்டாயிற்று; அன்பு வளர்ந்தது; இனிய காதலாக மலர்ந்தது.

இதில் ஒரு விசேஷம் உண்டு. அழகி விஜயலக்ஷ்மிக்கும் அறிஞர் ரஞ்சித் பண்டிட்டுக்கும் இவ்வித உறவு ஏற்பட வேண்டும் என விரும்பியவர் காந்திஜீதான். கன்னியின் கருத்துக்கு ஏற்ற காதலனைக் கணவனாக்கி, அவள் வாழ்வை மாண்புடையதாக்க வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாட்களாக அவர் உள்ளத்தில் இருந்தது. சொரூபாவுக்கும் ரஞ்சிதருக்கும் நல்ல பொருத்தம் என்று கணித்துவிட்டார் அவர். அதனாலேயே தக்க