பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

29


 முறையில் தகுந்த சந்தர்ப்பத்தில் அறிமுகம் செய்து வைக்கும்படி மகாதேவ தேசாயை அவர் ஏவினர்.

இப்படிப் பிறந்த அறிமுகம் அவர்கள் விரும்பிய படி கலியாணத்திற்கு வகை செய்தது.

இடைக்காலத்திலே அரசாங்கம் இந்தியாவில் தலை காட்டியுள்ள சுதந்திர ஆர்வத்தைத் தீர்த்துக் கட்டுவதற்காகத் தானறிந்த 'அதிர்ச்சி வைத்திய'ங்களைக் கையாண்டு வந்தது. அவற்றின் சிகரமாக அமைந்திருந்தது, 1919-ம் வருஷம் அமிருதசரஸ் ஜாலியன் வாலாபாக்கில் நடந்த பேயாட்டம், 'பஞ்சாப் படுகொலை' என்று பெயர்பெற்ற அந்த வெறிக்கூத்து விளைவித்த உயிர்ச்சேதம் மிகவும் பயங்கரமானது. 'சுட்டேன். சுட்டேன்...துப்பாக்கியில் தோட்டா தீரும் வரையில் சுட்டேன். இன்னும் தோட்டாக்கள் இருந்திருப்பின் மேலும் அதிகமாகக் கொன்று குவித்திருப்பேன்’ என்று வெள்ளையன் டயரை வெறியோடு கொக்கரிக்கத் தூண்டிய அதே சம்பவம், அதுவரையில் அரசியலில் தீவிரமாகப் பங்கு பற்றாத பலரையும் உலுக்கிக் களத்திலே குதிக்கத் தூண்டியது.

அவ்விதம் போராட முன்வந்தவர்களில் முக்கியமானவர் மோதிலால் நேரு, அந்நிய ஆட்சிக்குச் சீட்டுக் கொடுத்து, அடிமைப் பிழைப்புக்குச் சவக்குழி தோண்டியே ஆகவேண்டும் என்றும் உறுதிபூண்டு தேசப்பணியில் மும்முரமாக ஈடுபட்டார் அவர். அந்த ஆண்டு இறுதியில் அமிருதசரஸில் கூடிய காங்கிரஸ் மகாசபைக்கு அவரே தலைவரானார்.