பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

விஜயலக்ஷ்மி பண்டிட்



அரசியல் பொறுப்புகளிலும் தனக்குச் சரியான வாரிசு தான் என்ற பெருமையோடு, ஆனந்தப் பெருக்குடன், தந்தை மகனிடம் தலைமைப் பதவியை அளித்தார். நாட்டு நல்ம் கருதும் மன்னன் இளவரசுக்குப் பட்டம் சூட்டியது போலிருந்தது அந்தக் காட்சி.

இச் சம்பவத்தினால் மாத்திரமே தனித்துவம் பெற்றுவிடவில்லை லாகூர் காங்கிரஸ். பஞ்சாப்பில் ரவி நதிக் கரையிலே கூடியிருந்தது மகாசபை. எலும்புக் குருத்தையும் தொட்டுத் தடவிக் கிசுகிசு மூட்டும் கடுங்குளிர் எங்கும் நிலவியது, பனி மலிந்த டிசம்பர் மாதத்தின் அதிகாலை நேரத்தில் ஆயிரமாயிரம் பேர்கள் ஒருங்கு கூடி,ஒரு மனமாய்-ஒரே குரலாய் சுதந்திரப் பிரதிக்ஞை'யை மேற்கொண்டார்கள்.

வாலிப சமுதாயத்தின் லட்சியத் தலைவரான் ஜவஹர்லால் நேரு பதவி ஏற்ற காங்கிரஸில், சுதந்திரப் பிரதிக்ஞை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் மூலம் இந்திய சரித்திரத்த்தில் புதுயுகம் பிறந்தது என்றே மக்கள் நம்பினார்கள். கீழ்வானிலே உதயத்தின் பொன் ரேகைகள் தொட்டுத் தடவி ஒளிபூசி முன்னேறும் புனித வேளையில் தலைவர் ஜவஹர் சுதந்திரப் பிரதிக்ஞையை உரத்த குரலில் படித்தார். ஆண், பெண், சிறுவுர் என்ற பேதமற்று எல்லோரும் உள்ளத்தின் உணர்ச்சிப் பெருக்குடன் கலந்து அதை உச்சரித்தார்கள். அதை நிறைவேற்றியே தீருவோம், என்ற உறுதியோடு கலைந்தார்கள். அதற்காக எவ்விதக் கொடுமைகளையும் துயரங்களையும் சகித்துத் தலை நிமிர்ந்து சமரிடுவோம் என்று துணிந்தார்கள்.