பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

51



விஜயலக்ஷ்மியும், கிருஷ்ணாவும் அண்ணா நேரு காட்டும் வழியில் வீரமுடன் முன் செல்வது என்ற விரதம் கொண்டனர். எதிர்காலம் மனோகரமாக இராது. காரிருளும் கொடுமை பலவும் நிறைந்து அச்சமெழுப்பும் சூழ்நிலையே காணப்படுகிறது என அவர்கள் உணர்ந்தார்கள். ஆயினும், மனம் தளர்ச்சியுற வில்லை. உண்மையில், விவரிக்க இயலாத ஓர் வகைத் துணிச்சல் தான் அவர்கள் உள்ளத்தில் இடம் பெற்றிருந்தது.

பலவகைகளிலும், அவர்கள் வாழ்க்கையில் புது அத்தியாயந்தான் ஆரம்பமாகியிருந்தது.

லாகூர் காங்கிரஸ் கூடுவதற்குச் சில மாதங்கள் இருந்த போதே, மோதிலால் நேரு தமது பெரிய மாளிகையை நாட்டின் பொதுச் சொத்தாக மாற்றி, காங்கிரஸிடம் ஒப்படைத்தார். நேரு குடும்பத்தின் 'ஆனந்த பவனம்' இந்தியாவின் 'சுயராஜ்ய பவனம்' ஆகிவிட்டது.

மோதிலால் நேரு ஜவஹர் குடும்பத்துக்காகப் புதிதாக ஓர் வீடு கட்டியிருந்தார். அருமையான இல்லம் அது. தங்தைக்கு மகிழ்வும் பெருமையும் தரும் வகையில் அமைந்த கட்டிடம் அதில் நேரு குடும்பத்தினர் குடி புகுந்தனர். அந்தப் புது வீடு 'ஆனந்த பவனம்' என்ற பெயரையே ஏற்றது. தாம் எந்த வீட்டில் வசித்தாலும், அது 'ஆனந்த பவன'மாகத் தான் விளங்க வேண்டும் என்பது மோதிலாலின் ஆசையாம்.