பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

விஜயலக்ஷ்மி பண்டிட்



புரிந்தாள். வயதின் முதிர்ச்சியும் உடலின் தளர்ச்சியும் பெற்று விட்ட ராணி நேரு - அன்றாட வாழ்வை நோயற்ற முறையில் கழிக்க இயலாது அவதியுற்ற தாய்-அற்புதமான சக்தியும், மனேதிடமும் பெற்று விளங்கினாள். தனது புதல்வியரைப் போல் சமரிலே தலை நிமிர்ந்து முன்னேறினாள். சில சமயங்களில் அவளுடைய ஆர்வமும் சேவையும் விஜயலக்ஷ்மி, கிருஷ்ணா ஆகியோரின் உற்சாகத்தையும் உழைப்பையும் மிஞ்சி நின்றன.

அரசாங்கம் கையைக் கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டா இருக்கும்? விஜயலஷ்மிக்கும், கிருஷ்ணாவுக்கும்,மற்றும் சிலருக்கும் தடை உத்திரவு போட்டது. பொது கூட்டங்களில் பேசக் கூடாது; ஊர்வலங்களில் கலந்து கொள்ளக் கூடாது; மறியல்களில் பங்கு பெறக் கூடாது என்றெல்லாம் விதி விதித்தது.

சுதந்திர தினம் வருகிற வரை சும்மா இருக்கலாம் என்று நேரு சகோதரிகள் தீர்மானித்தனர். ஜனவரி 26ம் தேதி வந்தது. ’நாங்கள் ஒடுங்கி விடவில்லை; பயந்து பதுங்கவுமில்லை’ என்று அவர்கள் உணர்த்த முன் வந்தார்கள்.

அலகாபாத்தில் அதுவரை நடந்திராத அளவு பெரிய கூட்டம் ஒன்று கூட்டினார்கள் ராணி நேரு தான் தலைமை வகித்தாள். அனல் தெறிக்கும் உணர்ச்சிப் பிரசங்கம் நிகழ்த்தினாள். கூட்டம் இனிது முடிவுறாதபடி அரசாங்கம் கவனித்துக் கொண்டது. குண்டாந்தடிகளை மனிதர் மண்டையில், உடலில், கண்ட கண்ட இடமெலாம் நடனமாட ஏவியது! அந்த இடத்திலேயே