பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

விஜயலக்ஷ்மி பண்டிட்



அந்த அன்னை, தன்னிலும் வயது முதிர்ந்த சகோதரி ’பீபி அம்மா’ளுடன், தனித்து விடப்பட்டாள். ஆயினும் அவள் உள்ளம் கூனிக்குறுகி விடவில்லை. வீரமாக லட்சியப் பணி புரிய அவள் தயங்கவு மில்லை.

விஜயலஷ்மியும் கிருஷ்ணாவும் ஜில்லாச் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.அங்கு முக மலர்ச்சியுடன் ஆனந்த களிப்புடன் காத்திருந்த தோழியர் பலரைக் கண்டு மகிழ்ந்தார்கள். என்ன வந்தாலும் சரி; புன்னகையோடு வரவேற்போம் என்ற தீர்மானத்துடன் அவர்கள் காத்திருந்தார்கள்.

வழக்கத்திற்க்கு விரோதமாக, பெண்களை விசாரணை இல்லாமலே சில வாரங்கள் கொட்டடிகளில் அடைத்து வைத்திருந்தனர் ஆட்சியினர். ஒரு மாதிரியாக விசாரணை நாளும் வந்தது. ’மிஞ்சிப் போனால், ஆளுக்கு ஆறு மாதம் சிறைவாசம் என்று தண்டனை விதிப்பார்கள்’ என்று தான் எல்லோரும் எதிர்பார்த்து இருந்தனர்.

ஜெயிலில் தான் விசாரணை நடந்தது. எல்லோரும் வரிசையாக உட்கார்ந்திருந்தனர். பெயர் சொல்லப்படும்; விசாரணை நடக்கும். கைது செய்யப்பட்டவர்கள் இந்த நாடகத்தில் கலந்து கொள்ள மறுத்துவிட்டனர்.

முதலாவதாக விஜயலஷ்மி பண்டிட்டின் பெயர் தான் வாசிக்கப்பட்டது. மாஜிஸ்ட்ரேட் தீர்ப்பை வாசித்தார். ஒரு வருஷம் கடுங்காவல் தண்டனை; அபராதம் வேறு என்றார். எல்லோரும் திடுக்கிட்டார்கள்.

தண்டனைப் பட்டியல் தொடர்ந்து வாசிக்கப் பட்டது.