பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

67


விஜயலக்ஷ்மியும் கிருஷ்ணாவும் வேதனையுடன் கண்ணீர் வடித்தார்கள். இரும்புக் கம்பிகளின் பின்னால் அடைபட்டுக் கிடந்த அவர்கள் வேறு என்ன செய்ய முடியும்?

1981 ஏப்ரல் மாதம் தான் அந்தச் சம்பவம் கடை பெற்றது. அலகாபாத் நகர வீதிகளில் வந்த ஊர்வலம் ஒன்றை ராணி நேரு தலைமை வகித்து நடத்திச் சென்றாள்.திடீரென்று போலீஸ் தாக்குதலுக்கு உள்ளாயிற்று அந்த ஊர்வலம். தடுத்து நிறுத்தப்பட்ட தொண்டர்படையின் முன்னால் தலைவி நேரு ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். போலீஸ் தடித்தனமாகத் தடியடி கொடுத்தது. நாற்காலியிலிருந்த ராணி நேரு தரையில் விழுந்த பிறகும் கூட, பிரம்பு கொண்டு வெறித்தனமாகத் தாக்கினர் போலீஸார். அவள் மண்டை பிளந்து, ரத்தம் பெருகி ஓடியது. பிறகு அவளை யாரோ ஒரு அதிகாரி காரில் எடுத்து 'ஆனந்த பவனம்' சேர்த்தார். அன்று இரவு ராணி நேரு மரண மடைந்தாள் எனும் வதந்தி நகரம் முழுவதும் பரவியது.

பெட்ரோல் ஏற்ற பெருந்தீ எனச் சீறி எழுந்தனர் நகர மக்கள். அஹிம்சை உபதேசங்களையும், இதர தத்துவங்களையும் அவ்வேளைக்குக் காற்றிலே பறக்க விட்டனர். போலீஸாரைத் தாக்கத் தொடங்கினார்கள். அதன் பயனாக துப்பாக்கிப் பிரயோகம் ஏற்பட்டது. பொதுமக்களில் சிலர் பலியானார்கள்.