பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

69

அவர்கள் அலகாபாத் நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.அங்குதான் விடுதலை கிட்டியது.

வீடு திரும்பிய விஜயலக்ஷ்மியும் கிருஷ்ணாவும் பவனத்தைக் கண்டு வருந்தினார்கள். கமலா நேரு நோயின் காரணமாகக் கல்கத்தாவில் இருந்தாள். அன்னை நேருவும் அவளுடன் தங்கி இருந்தாள். ஆகவே அவ்விருவரையும் வரவேற்க அங்கு யாருமில்லை.

என்றாலும், சிறிது நேரத்திலேயே விடுதலைச்செய்தி பரவி ஊரே திரண்டுவிட்டது அவர்களை வரவேற்க. ஒரு வருஷ அமைதிக்கும் தனிமைக்கும் பிறகு தொடர்ந்த பரபரப்பும் கும்பலும் உற்சாகமும் நேரு சகோதரிகளுக்கு பிரமிப்பு ஏற்படுத்தி விட்டன. மக்களின் பரிவும் அன்பும் அவர்கள் உள்ளத்தைத் தொட்டன.

சில தினங்களுக்கு பிறகு இருவரும் கல்கத்தா சென்றார்கள். கமலாவுடனும் தாயுடனும் 'ஆனந்த பவனம்' திரும்பினார்கள்.

விஜயலக்ஷ்மி தன் குழந்தைகள் மூவரையும் காணத் துடித்தாள். அவள் ஜெயிலுக்குப் போவதற்கு முன்பு, மூன்று பெண்களையும் பூனா நகரிலுள்ள 'போர்டிங் ஸ்கூல்' ஒன்றில் சேர்த்திருந்தாள் கடைசிக் குழந்தைக்கு அப்போது மூன்று வயதுதான் ஆகியிருந்தது. நண்பர்க்ள் சிலர் மேற்பார்த்து வந்த அப்பள்ளியில் தான் இந்திரா நேருவும் தங்கியிருந்தாள். ஆகவே, சகோதரிகள் இருவரும் பூனா சென்றனர்.

5

5