பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


கிருமிக் கிறுக்கன், பூச்சிப் பித்தன், காலத்தை வீணே கழிக்கும் கயவன் என்றெல்லாம் அவரை ஏசியவர்கள், டாக்டர் எர்லிக் செய்த ஆராய்ச்சி வெற்றிப் பெற்றதை, ஊரெங்கும் எக்காளம் போல் முழங்கி வாழ்த்தினர்ர்கள்.

இலட்சிய இலக்கை பிடித்துவிட்ட பால் எர்லிக்கின் விடா முயற்சியை, அவரை இகழ்ந்து பேசிய மருத்துவத் துறையினர் கூட மனதாரப் பாராட்டி வரவேற்று மகிழ்ந்தார்கள்.

மனித சமூகத்திற்கு ஏற்படும் நோய்க் கிருமிகளைச் சாகடிக்கக் கூடிய படைக் கலத்தைப் படைத்து தந்த டாக்டர் பால் எர்லிக்கின் விஞ்ஞானக் கண்டுபிடிப்பை உலகம் கண்டு வியந்து போற்றியது.

மருத்துவக் கலையின் மாண்புமிக்க அரிய சாதனையைக் கண்ணீரைச் சொரிந்து கொண்டே கண்டு பிடித்த மனோதிடத்தை, அறிவியலுலகம் வியந்து பாராட்டி வரவேற்றது.

அவரது விஞ்ஞான சாதனையின் வியன்மிகு வித்தகத்திற்காக, எப்படிப்பட்ட நோய்க் கிருமிகளையும் ஒழிப்பதற்காகப் பயன்படக்கூடிய இரசாயனப் பொருளைக் கண்டு பிடித்ததற்காக, அறிவியல் உலகம் டாக்டர் பால் எர்லிக்குக்கு கி.பி. 1908-ஆம் ஆண்டில் நோபல் பரிசைத் தந்து பாராட்டியது.

எண்ணிலடங்கா சோக சம்பவங்களை நாள் தோறும் ஏற்று, அவற்றை எல்லாம் அலட்சியமாக ஒதுக்கி, தனது கணவன் கருமமே இலட்சியமென நம்பி பசியும் பட்டினியுமாக வாழ்ந்த தனது மனைவியிடம் தனது நோபல் பரிசு பணத்தைக் கொடுத்தார்.