பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

129




இத்தகைய தன்மைகளினால் அவர்கள் பழங்கால மருத்துவர்களது தரத்தைவிட இன்று தரம் தாழ்ந்து போய்விட்டார்கள். உணவுமுறைகளை தாங்களே கவனியாமல் தாதிகளிடம் அதை விற்று விட்டார்கள். இரண வைத்தியம் செய்வதை நாவிதகர்களிடம் விட்டு விட்டார்கள். இறுதியாக பார்த்தால் மருத்துவர் செய்யும் காரியம் ஒன்றுமில்லை. இவ்வாறு மருத்துவர்கள் இருக்கக்கூடாது. ஒவ்வொரு துறையிலும் மருத்துவர்கள் பங்கு பெற வேண்டும் என்று கூறி எதிர்த்தார்கள் - அலட்சியப் படுத்தினார்கள்.

மருத்துவ உலகத்தில் உழன்று கொண்டிருக்கும் சில குறைகளை எடுத்து அவர் கூறியதால் சிறு வயதான் வெசேலியஸ் தனது வயதுக்கு மீறி ஆணவமாகப் பேசுகின்றான். ஆணவத்தால் பேசுகிறான். அகம்பாவத்தால் மருத்துவர்களை அவமதிக்கிறான். கேலென் போன்ற தனிப்பெரும் மேதைகளை இகழ்ந்து எதிர்க்கிறான், என்றெல்லாம் மக்களிடையே கலகம் செய்தார்கள்.

அந்த மருத்துவர்கள், தங்களது பொறாமைத் தீயிற்கு மண்ணெண்ணெய் ஊற்றிக் கொள்வதற்காக மாமேதை கேலென் பெயரையும் சேர்த்துக் கொண்டு பேசினார்கள்.

கேலன் மீது அப்போதைய மருத்துவர்களும், மக்களும் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையைப் பயன் படுத்திக் கொண்டு, வெசேலியசுக்கு எதிராக குழப்பத்தை உருவாக்கி பழி தீர்த்துக் கொள்ளத் திட்டமிட்டே பணியாற்றினார்கள்.