பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


7.விஞ்ஞானிகளை எதிர்த்த விதவை!

பொ ன் நிறக் கூந்தல்! வெண்ணிற மேனி! துவளும் கொடி போன்ற துடியிடை! அழகுக்கு அழகேற்றும் அணங்கு!

பார்ப்பவரை ஈர்க்கும் பளிங்கு மேனியுடைய பதினேழு வயதுப் பாவையான அவன் காதல் தோல்வியால் இந்த பாரையே காரி உமிழ்ந்தாள்.

நடனக் கலையிலே நளினமாக ஆடுகின்ற நங்கை புலமைப் பெற்றவர்களைப் போல புதுமையோடும் புரட்சியோடும் பேசும் பூவை.

அவள் ஒரு பிரபுவின் குடும்பத்திலே பணிப் பெண்ணாக பணியாற்றி வந்தாள். குடும்பத்தின் சூழ்நிலை இது. வார்சா பல்கலைக் கழகத்திலே கல்விக் கற்கப் போன அந்தப் பிரபு வீட்டின் காளை, விடுமுறைக்காக வீடு வந்து சேர்ந்தான்.

தகதகவென ஒளியுமிழும் தங்க நிறத் தளிர் மேனியாளைக் கண்டான், காலைக் கதிரவன் போல காட்சித் தந்த அந்தக் காளை, விடியற்காலை வெண்மேகம் ஒன்று வானவலம் வருவதைப் போல் அந்த பாவாடை பூண்ட வேல் விழியாள் அங்கும் இங்குமாகத் திரிந்து பறந்து வேலை செய்வதைக் கண்டான்.

தனது விழி வீச்சுகளால் பளிச் பளிச்சென்று மின்னி மின்னி அவள் வலம் வந்து கொண்டிருந்ததை வைத்த விழி வாங்காமல் அவன் பார்த்துப் பார்த்துக் காதல் கொண்டான்.