பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

137


துணையின்றித் துவண்டு கிடந்த அந்தத் துடியிடை அவளுக்கு, துணையாக வாழ்ந்திடத் துடித்தான்!

‘கண்ணோடு கண்நோக்கி, கருத்தோடு - கருத்தும் கலந்தன! இணைந்தன எண்ணங்கள்! எதிர்பார்த்தனர் இருவரும் பெற்றோரின் எண்ணங்களை!

பணக்காரக் குடும்பத்தின் படோடோபம், பகட்டு, பண மனோபாவம், பணிப்பெண்ணை மறுத்தது ஏற்க, மருமகளாக!

தகுதியின் தரம், தனது சிறுமைப் பண்பைக் காட்டி ஏழை மீது தலைகீழாட்டம் ஆடியது பணம் பணிப் பெண்ணை ஏற்காது என்பதைப் படபடப்புடன் பறை கொட்டி பாசறை முழக்கம் போல ஆர்ப்பரித்தது.

பதினேழு வயது பாவை இந்த முடிவைக் கேட்டபோது அவள் நெஞ்சம் என்ன பாடு பட்டு இருக்கும்?

“இந்த உலகம் இகழ்ச்சிக்கே உரியது! படாடோபம் - பகட்டு - ஆடம்பரம் - ஆணவம் - ஆங்காரம் கொண்ட இந்த உலகத்திடமிருந்து நான் விடைபெறுகிறேன். அதனால், எனக்கேதும் நட்டமில்லை” என்று தன் உறவினள் ஒருத்திக்குக் கண்ணீரைக் கொட்டிக் காவியக் கடிதம் எழுதினாள்! அவள் பெயர்தான் மேரி கியூரி. மாருஸ்க்லோ டோஸ்கா என்று அழைக்கப்பட்ட மேரி கியூரி, கி.பி. 1867 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் போலந்து நாட்டிலே உள்ள வார்சா நகரிலே பிறந்தாள்.