பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


ரேடியக் கதிர்வீச்சு, மனித உடலிலே இருக்கும் கிருமிகளைக் கூட அழிக்கக் கூடிய சக்தி படைத்தது. எனவே, இதைப் புற்று நோய்க் கிருமிகளை ஒழிக்க இன்று பயன்படுத்தி வருகிறார்கள்.

சரும நோய்களையும் இந்தக் கதிர்ச் சக்தி குணப்படுத்துகிறது. ரேடியத்தினால், மேலும் பல விந்தைகளைக் கூட விஞ்ஞான உலகத்தால் செய்ய முடிகிறது.

சாதாரண ஒரு குதிரை லாயத்தையே விஞ்ஞானப் பரிசோதனை நிலையமாக்கிக் கொண்டு, கியூரி தம்பதிகள் ஆற்றிய ஆராய்ச்சியைக் கண்டு உலகமே வியந்தது.

தங்களது வாழ்த்துக்களையும் - நன்றிகளையும் கடிதங்கள் வாயிலாக ஏராளமாக எழுதிக் குவித்தனர்- பயன் பெற்றவர்கள்.

ரேடியம் கண்டுபிடிக்கும் விதிகளை விலைக்கு வாங்கச் செல்வர்கள் பலர் முன் வந்தனர். ஆனால், கியூரி தம்பதிகள் பணம் சம்பாதிக்கும் அற்ப புத்திக்கு அடிபணிய மறுத்து விட்டார்கள்.

ஆனால், அதே ஆண்டு அவர்கள் நோபல் பரிசு பெற்றார்கள். அந்தப் பணத்தை அப்படியே தங்களது ஆராய்ச்சிக்காகப் பட்ட கடனைத் தீர்த்து விட்டார்கள்.

நோபல் பரிசுபெற்ற தம்பதிகள், தங்களது இல்லற வாழ்க்கையில் ஈடும் இணையுமற்று பேரின்பப் புறாக்களாய் ஆடிப்பாடி அசைந்து இசைந்து இன்பம் இனிக்க இனிக்க வாழ்ந்து மகிழ்ந்தனர்.