பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

147


கணவனைப் பறிகொடுத்த காரிகை-கண்ணிர் விட்டே வாழ்ந்து வரும் அறிவியற் செல்வி-அந்தப் பழிகளையும்-வசைகளையும் ஏற்று, வாழ்க்கையுடன் போராடியபடியே இருந்தார்.

கண்ணீர் விட்டே வளர்ந்த அவளது விஞ்ஞான சாதனை - ரேடியம் கண்டுபிடிப்பு - இன்று உலக மக்கள் பலரின் கண்ணீரைத் துடைத்தபடியே வாழ்கின்றது.

அறிவியலில் தனது அற்புதத் திறமையால் புகழ் பெற்ற மேரிகியூரி அம்மையார், கி.பி. 1934-ஆம் ஆண்டு புகழுடம்பு எய்தினார்.

செயற்கரிய செயல்களைச் செய்யும் ஆற்றல் புரிந்த கதிர் சக்தி, அதைக் கண்டுபிடித்த மேரிகியூரியின் உடலுறுப்புகளை எல்லாம், சிறிது சிறிதாக அழித்து விட்டது.

எந்த அற்புதச் சக்தியைக் கண்டுபிடிக்க பலத்த எதிர்ப்புக்களுக்கு இடையே கண்ணீர் விட்டே வாழ்ந்தாளோ, அதே கதிர் சக்தி அவளது உயிரையும் பறித்து விட்டது.

மேரிகியூரி, விதவைதான். ஆனால், அவளது கணவனது புகழை வைர வரிகளால் எழுதிவிட்டே மறைந்த விதவையாக விஞ்ஞான உலகில் வாழ்ந்து காட்டிய வனிதை அவள்.

அந்த அறிவியல் மேதை மறைந்தாலும் - அவள் கண்டு பிடித்து உலகுக்கு ஈந்த ‘ரேடியம்’ இன்றும் என்றும் வாழ்ந்து கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை!