பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பின்னுரை

சூரியனுடைய கடும் வெப்பத்தை மனிதனுடைய தலை தாங்கவில்லையே, அதனால், அடிக்கடித் தலைச் சுற்றும் மயக்கமும் ஏற்படுகின்றதே என்று எண்ணி வேதனைப்பட்டு, தனது சொந்த உடல் நலனுக்காகச் சிந்தித்தான் ஜான் ஹாவேஸ் என்ற சிந்தனையாளன்.

ஒரு நாள், கோடை வெப்பத்தை எதிர்த்து, தான் கண்டு பிடித்தக் குடையைப் பிடித்துக் கொண்டு வீதி வழியே சென்றான்.

“சூரிய தெய்வத்தை எதிர்க்கும் இந்த சூன்யன் யார்? கருப்புத் துணியால் கடவுட் சக்தியைக் களங்கப்படுத்துகின்றானா? விடலாமா அவனை வீதியிலே?”

இயற்கையின் சக்தியை எதிர்த்திட - இவனுக்கு எங்கிருந்து வந்தது மன உரம்?

“விடாதே! பிடி” என்று, விரட்டு விரட்டு விரட்டென்று அவனை வீதி வீதியாக விரட்டிக் கொண்டே ஓடினார்கள், அறிவின் விரோதிகள் - மத வெறியர்கள்!

பிடிபட்ட அந்த உத்தமனை உதை உதை யென்று உதைத்தார்கள்! ஒடஒட உதைத்தார்கள்! பின்னோக்கி ஒடுகின்ற அவன், தனக்குப் பின்னாலே என்ன இருக்கிறது என்பதறியாது ஓடினான்! ஓடினான்..!

பாவம்! ஒரு பாழடைந்த கிணறு! அதனுள்ளே விழுமளவுக்கு அந்த அறிவின் நாயகனை உதைத்துத் தள்ளிவிட்டு ஓடி விட்டார்கள் - அவன் எதிரிகள்.