பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

23


 மனிதன் உடலினுள்ளே இடைவிடாமல் எரிதல் என்ற சக்தி நடைபெற்றுக் கொண்டிருப்பதால்தான்், அவனது உடல் எப்போதும் வெப்பமாகவே காணப்படுகிறது என்பதை, உலகிலே முதன்முதல் கண்டுபிடித்துக் கூறிய மாபெரும் விஞ்ஞான மேதை லவாஸ்யேதான்.

உடல் ஏன் அவ்வாறு எரிகின்றது என்றால், நாம் உண்ட உணவோடு ஆக்சிஜன் என்ற காற்று கலப்பதால்தான், உடலுக்குள்ளே எரியும் சக்தி உண்டாகின்றது என்று விளக்கம் கூறி, அதனைப் பரிசோதனை வாயிலாக உறுதிப் படுத்தினார்.

ஹென்றி காவெண்டிஷ் என்ற இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி, இந்த நேரத்தில் தீப்பற்றக் கூடிய வாயு ஒன்றின் மூலமாக ஆய்வுகளை நடத்திக் கொண்டிருந்தார்.

அந்த வாயுவுக்கு அவர் எரி இயல் வாயு என்ற பெயரை வைத்து, அதற்கான விளக்கத்தை கி.பி.1781ஆம் ஆண்டிலே வெளியிட்டார்.

காவெண்டிஷ் செய்த அறிவியல் சோதனையினையே மீண்டும் லவாஸ்யே செய்தார். அதன் விளைவாக,அவர் நீர் என்பது, ஆக்சிஜன்-ஐட்ரஜன் என்னும் இரண்டு வாயுக்கள் இணைவதால் ஏற்படும் கூட்டுப் பொருள் என்பதைத் திட்டவட்டமாக அறிவித்தார்.

இந்த ஆராய்ச்சியின் முடிவை அன்றைய அறிவியல் உலகால் சீரணிக்க முடியவில்லை, அதனால், இலவாஸ்யேயின் கண்டு பிடிப்புக்குப் பலத்த எதிர்ப்புகள் எழுந்தன.