பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


தனது வாழ்நாள் முழுவதையும் விஞ்ஞான ஆராய்ச்சிக்காகச் செலவிட்டாலும், இடையிடையே அதை நிறுத்தி, பொதுமக்களின் சேவைக்காக உழைத்த மாபெரும் ஏழைப் பங்காளர், அதிகார வெறிபிடித்த அகம்பாவ வெறிக்குப் பலியானார்!

பிரான்ஸ் மக்களுக்குரிய தேசியக் கல்வித் திட்டத்தை வகுக்க வேண்டுமென்று அறிவுரைகளைக் கூறி, ஆக்கப் பணிகளைச் செய்து வந்த ஒர் அரசியல் சிந்தனையாளர், சொந்த விருப்பு வெறுப்பு கொண்ட கொடுங்கோலன் ஒருவனால் பிணமாகச் சாய்க்கப் பட்டார்!

இவற்றிற்கெல்லாம் மேலாக, சிகரமாக, உலகமே வியந்து பாராட்டும் உயர்ந்த ஒர் அறிவியல் ஞானியாக, தான் செய்த விஞ்ஞான ஆராய்ச்சி மூலம், பிற ஆய்வுக்கும் மூலாதாரச் சூத்திரங்களை உலகுக்குத் தந்த மேதையாக விளங்கிய விஞ்ஞானத் தெய்வத்தை, மாரா என்ற அழுக்காற்றுக் கொடுங்கோலன் வேண்டுமென்றே தனது கொடுவாளுக்குப் பலியாக்கிக் கொலை செய்து விட்டான்.

விஞ்ஞான உலகிலே முதன் முதலாக 'ஆக்சிஜன்' என்ற காற்றைக் கண்டு பிடித்த முதல் விஞ்ஞானி, ஆக்சிஜன் என்ற பெயரை அதற்குச் சூட்டிய முதல் விஞ்ஞானி, மற்றொரு போலி விஞ்ஞானியால் படுகொலை செய்யப்பட்டு விட்டார்.

ஐட்ரஜன் என்ற காற்றைக் கண்டு பிடித்த முதல் விஞ்ஞானி, 'ஐட்ரஜன்' என்ற பெயரை அதற்குச் சூட்டிய முதல் விஞ்ஞானி, கண்ட துண்டமாக ஒரு கிராதகனால் துண்டிரண்டாக்கப்பட்டார்.