பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


எகிப்து நாட்டுக் கணக்கை ஆராய்ந்து, அதற்கான புதிய புதிய விதிகளை உருவாக்கி, எகிப்துக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்கும் பிறந்த நாட்டுத் துரோகி என்றெல்லாம் பித்தாகரஸ் மீது குற்றப் பட்டியல்கள் உருவாக்கப்பட்டன.

கிரீஸ் மன்னனாக மகுடம் சூட்டிக் கொண்டிருந்த பாலிக்கிரட்டீஸ் என்பவன், கடவுள் வகுத்த சூத்திரத்தை எதிர்த்து வாதாடும் பித்தாகரஸ் யார்? இவனுக்கு என் நாட்டில் இப்படிப் பேசிட உரிமை கொடுத்தது யார்? என்று ஆணவ மனோபாவத்தோடு கேட்டான்.

"பித்தாகரஸ் அறிவுக்கு விரோதி! புதிய மூட நம்பிக்கையைப் புகுத்த நினைக்கிறான் மக்களிடம்! கைது செய்து கொண்டு வாருங்கள் என்று உத்திர விட்டான் தனது அரசவை மன்றத்துக்கு:

முன்னோர் மொழிந்த தத்துவப் பொருளே உண்மையானது. பின்னோன் அதற்கு விகற்பம் கூறுவதும், விவாதமாடுவதும் தவறானது என்று நம்பியவன் அந்த கிரேக்க நாட்டு மன்னன்!

பித்தாகரஸ் கூறிய வானியல் கருத்துக்கள் அவனுக்கு விரோதமாக விபரீதமாக விளங்கின !

மூடப் பழக்க வழக்கங்களை முறையாகப் பின்பற்றி வரும் அந்த அரசனுக்கு பித்தாகரஸ் கூறிய அறிவியல் உண்மைகள் எல்லாம் புதிய மூட நம்பிக்கைகளாகத் தோன்றின. அதனால், அவரைக் கைதுசெய்யும்படி கட்டளையிட்டான்.