பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

83


 முட்டாள்கள் தினத்திலே பிறந்த இந்த குழந்தை, மனித இனத்தின் உயர்வுக்கும் - மறுமலர்ச்சிக்கும் போராடும் என்று எவர் கண்டார்?

அந்த காலத்திலே ஏகபோக அச்சுறுத்தலைச் சமுதாயத்திலே வேரூன்ற வைத்து, அதன் வாயிலாக மக்களை பயமுறுத்தி ஆட்டிப் படைத்த சூனியக்காரிகளின் பித்தலாட்டங்களை வேரறுக்கும் பகுத்தறிவுச் சிங்கமாக நடமாடும் அந்தக் குழந்தை, என்பதை யார் அறிவார்?

வில்லியம் ஆர்வி, காண்டஸ்பரி என்ற நகரிலே உள்ள கிங்ஸ் அரசர் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைத் துவங்கினார்.

பிறகு, கேம்பிரிட்ஜ் சென்று கேய்ன்ஸ் கல்லூரியிலே சேர்ந்தார்.

உலகப் புகழ் பெற்ற விஞ்ஞான மேதைகளாக விளங்கிய ஆண்ட்ரீஸ் வெசாலியசும், கலீலியோவும், மருத்துவ விஞ்ஞானக் கலைகளைக் கற்றுப் புகழ் பெற்று விளங்கிய கல்லூரியான பாடுவா கல்லூரியிலே, ஆர்வி சேர்ந்தார்.

அந்த நேரத்தில் மரண தண்டனை பெற்ற இரண்டு குற்றவாளிகளின் உடல்கள் அறுவைப் பரிசோதனைக்காக வந்தன.

கல்லூரியில் கற்கும் மாணவர்கள் அந்த உடல்களை அறுத்து ஆய்வு செய்து, மருத்துவ இயலைப் பயில வாய்ப்புக் கிடைத்தது.

ஆர்வியும், அந்த சவங்களை அறுத்துப் பார்க்கும் ஆய்வில் அன்றுதான் தீவிரமாக ஈடுபட்டார்.