பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


 அந்த நேரத்தில் அந்தக் கல்வி நிலையம் உலகப் புகழ்பெற்ற மருத்துவமனையாக விளங்கி வந்தது குறிப்பிடத் தக்கதாகும்.

கி.பி.150-ஆம் ஆண்டுக் கால கட்டத்தில் வாழ்ந்த புகழ் பெற்ற மருத்துவக் கலை மேதையான கேலன் என்பவர் ஆராய்ந்து கண்டு பிடித்துக் கூறிய எல்லா ஆராய்ச்சி சாதனைகளும் - அசைக்க முடியாத உண்மை என்று மக்கள் நம்பி வந்த காலம் அது.

அந்த மருத்துவ வித்தகனின் ஆராய்ச்சியிலே மக்களுக்கு இருந்த நம்பிக்கை, மருத்துவ இயலிலே பேராதிக்கம் செலுத்தி வந்தது.

கேலனின் அரிய கண்டுபிடிப்புகளில் சில தவறுகளும் இருக்கலாம் என்ற எண்ணமே எவருக்கும் எழாத நேரம் அது.

எந்த மருத்துவ நிபுணரும் அன்று வரை அவரது சிறு தவறைக் கூடச் சுட்டிக் காட்டிடும் நெஞ்சுரத்தைப் பெறாத காலம் அது.

எந்த மருத்துவத் துறை மாணவனாவது கேலனுடைய ஆராய்ச்சித் தவறைச் சுட்டிக் காட்டி விளக்கம் கூறி விவாதிக்க முன் வந்தால், மருத்துவம் கற்பிக்கும் பேராசிரியர்கள்கூட, 'கேலன் காலத்து உடலமைப்பு அப்படி இருந்தது. இப்போது மாறிவிட்டது’ என்று சமாதானம் கூறுவார்களே தவிர, உண்மை என்ன என்பதையே உணர மறுத்தக் காலம் அது.

கேலன் சாதனைகள், அவ்வளவு அழுத்தமான ஆதிக்கத்தை மருத்துவக் கலையுலகில் வேரூன்றப் பெற்றிருந்தது.