பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

93


மலைபோல வந்த எதிர்ப்புகளைக் கண்டு கூட மனம் குலையாத மாவீரன் ஆர்வி, தன்னைப் பைத்தியக்காரன், செமிக் கிராக், கிராக்' என்றெல்லாம் மாறி மாறி மக்கள் ஏசியபோதும், மனம் நோகாத மாவீரன் ஆர்வி, தனது ஆராய்ச்சிகள் எல்லாம் அழிக்கப்பட்ட போதுதான் மனம் குலைந்தார் - மதி மருண்டார்! பைத்தியக்காரனைப் போலவே நடமாடினார்.

புரட்சிக்காரர்கள் தனது வீட்டைக் கொள்ளையடித்ததைக் கூட அவர் பெரிதாகக் கருதவில்லை.

வீட்டிலே இருந்த செல்வங்களைக் கேட்டிருந்தாலும் கொடுத்திருப்பேனே என்று தேம்பித் தேம்பி அழுதே விட்டார் பாவம்!

உலகத்துக்காக அவர் வழங்க இருந்த அறிவுச் செல்வங்களைக் கயவர்கள் அழித்தற்குப் பிறகு, உடல் தளர்ந்தார் - உள்ளம் நொந்தார்! ஏன், தனது மருத்துவ ஆராய்ச்சியையே நிறுத்திக் கொண்டார்.

நன்றி கெட்ட உலகத்துக்கு இன்னமுமா உழைக்க வேண்டும்? என்று, நலிந்த அவரது உள்ளம், நாளுக்கு நாள் மனம் குன்றிக் குன்றி, கி.பி. 1646-ல் தனது ஆராய்ச்சிப் பணியிலிருந்து அடியோடு விலகி விட்டார்.

இன்றைய மருத்துவ முறைகளைச் செய்வதைக் கண்டு நாம் வியப்படைகின்றோம் - மெய் சிலிர்க்கிறோம்!

இரண சிகிச்சைகள் இப்போது பழுது பார்த்துச் செப்பனிடுவதைப் பார்க்கின்றோம்.