பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

13




 அதனால், உண்மை-உணர்வு-சிந்தனையின் திறன், உணர்ச்சியின் உயர்வு, அவர்களை அண்டாமல் அலைந்து அலைந்து ஒடிக் கொண்டே இருந்தன.

மனிதனுடைய சிறந்த அறிவுக்கும்-வாழ்வுக்கும் பயன் என்னவென்றால், அந்தந்த கால நிலைகளுக் கேற்ப, எதிர்ப்புக்களை மீறி ஓடிவரும் உண்மைகளை உணர்ந்து, வரவேற்றுப் பாராட்டி, மானிட சமுதா யத்தை வாழ வழிகாட்டிடும் சீரிய செயல்களேயாகும்.

விஞ்ஞானத்தை ஆராய்ச்சி செய்தவர்களின் அரிய விளைவுகள் வெளிப்படும் பொழுதெல்லாம் எதிர்ப்பும் - ஏசலும் காட்டியவர்கள், கிஞ்சிற்றேனும் அதன் சமுதாயப் பயனை உணர்ந்தவர்களாகத் தோன்றவில்லை.

அறிவியல் ஆற்றிலே- ஆராய்ச்சி என்ற நீர்ப் பெருக்காக ஒடிவரும் விஞ்ஞானத்தின் வேகத்தை எதிர்த்து, அறியாமை, மூடப் பழக்க வழக்கங்கள், ஏச்சு, பேச்சு, எதிர்ப்பு, தூற்றல், துன்பம் தரும் இழி செயல்கள் போன்ற குப்பைக் கூளங்களால் எதிர் நீச்சல் போட முடியாமல், அவைகளாகவே கரை நாடி ஒடி ஓரம்போய் ஒதுங்கிவிட்ட வரலாற்றையும் நாம் பார்க்கின்றோம்.

இவை போன்ற எதிர்ப்புகளை முறியடித்து, அறியாமையாலும், ஆணவத்தாலும் இருண்டு கிடந்த உலகிற்கு ஒளியேற்ற வந்த மா மனிதர்களே, இன்று நாம் போற்றும் அறிவியல் மேதைகள்.

அவர்களது ஒவ்வொருவருடைய சாதனைகளும் ஒவ்வொரு துறையிலே சிறந்து விளங்கி மக்களுக்குச் சேவை செய்து வருகின்றன.