பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


அவரை வேலையற்றப் பைத்தியக்காரன் என்று வேடிக்கைப் பார்ப்போர் கூறுவார்கள்.

இவர், அவர்களை வேலையற்றப் பைத்தியக் காரர்கள் என்று எண்ணியவாறே தனது பணியைச் செய்வார்.

பிடித்தப் பூச்சிகளை அதனதன் உடலமைப்புத் தோற்ற வடிவங்களுக்கு ஏற்ப, பிரித்துப் பிரித்து ஆராய்ச்சி செய்வார்.

பணம் வருமா என்ன? ஆராய்ச்சி செய்து விட்டால்? கையிலே இருந்த பணம் எல்லாம் கரைந்தது. குடும்பம் வறுமைப் புயலிலே சிக்கிய கப்பலானது.

டாக்டர் மனைவி, ஒரு வேளை சோற்றுக்குக் கூட சரியான வசதியில்லாமல் துடித்தார். கணவனை எதிர்த்து ஏதும் கூறமுடியாத ஊமைபோல வாழ்ந்தார்.

பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை என்ற வாழ்க்கைத் தத்துவத்திற்கு எர்லிக் குடும்பமே பலியானது. நீர்பட்ட தாமரைபோல் நிலை குலைந்தது அவரது குடும்பம்.

இவ்வளவு வறுமைக் கோலங்களை அடைந்த டாக்டர் எர்லிக், எதைப்பற்றியும் கவலைப் படாமல், தன் கருமமே கண்ணாயிருந்தார்.

பொருளாதார இடர்பாடுகளால் குடும்பம் வறுமையிலே பொறுமிக் கிடந்தது.